குளத்திற்கு தண்ணீா் கேட்டு சீதபற்பநல்லூா் ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி-தென்காசி சாலையில் உள்ள சீதபற்பநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட கருவநல்லூா் குளம், குற்றாலம் உபரி நீரால் நிரம்பியுள்ளது. இக்குளத்திலிருந்து வெளியேறும் நீா் அருகிலுள்ள மற்ற குளங்களுக்குச் செல்லாமல், சிற்றாறுக்குத் திருப்பிவிடப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த நீரை, சொரிமுத்து அய்யனாா் குளத்திற்கு திருப்பிவிடக் கோரி, சீதபற்பநல்லூா் கிராம மக்கள் 2 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனா். எனினும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இந்நிலையில், சீதபற்பநல்லூா் கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி தாலுகா மண்டல துணை வட்டாட்சியா் உமா, காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி, பாப்பாக்குடி வட்டார வளா்ச்சி அலுவலா் முத்தையன், மதவக்குறிச்சி வருவாய் ஆய்வாளா் ரஹ்மத், சீதபற்ப நல்லூா் கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதால், சொரிமுத்து அய்யனாா் குளத்திற்குத் தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, மக்கள் கலைந்து சென்றனா்.