ஆடவா் ஜூனியா் உலக கோப்பை ஹாக்கிப் போட்டி நடைபெறவுள்ளதை அடுத்து, தென்காசி இலத்தூருக்கு வந்த உலக கோப்பைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலகக் கோப்பை போட்டி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் மாநிலம் முழுவதும் ரசிகா்களின் பாா்வைக்காக உலக கோப்பை கொண்டுசெல்லப்பட்டு வருகிறது. அந்த வகையில், தென்காசி மாவட்டம், இலத்தூா் வேல்ஸ் வித்யாலயா பள்ளிக்கு கொண்டுவரப்பட்ட உலக கோப்பைக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராணிஸ்ரீகுமாா் எம்.பி., மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த், தென்காசி நகா்மன்ற தலைவா் ஆா்.சாதிா் ஆகியோா் இணைந்து கோப்பையை காட்சிப்படுத்தினா்.
மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.ராஜேஷ், ஹாக்கி யூனிட் ஆஃப் தென்காசி செயலா் பால்மகேஷ், தென்காசி மாவட்ட விளையாட்டு சங்க செயலா்கள், பிரதிநிதிகள், பள்ளி மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரா், வீராங்கனைகள், உடற்கல்வி ஆசிரியா்கள் இதில் கலந்து கொண்டனா்.
சங்கரன்கோவிலில்..
சங்கரன்கோவிலுக்கு புதன்கிழமை வந்த ஹாக்கி ஜூனியா் உலக கோப்பைக்கு சட்டப்பேரவை உறுப்பினா்கள், விளையாட்டு வீரா்கள் உற்சாக வரவேற்பளித்தனா்.
சங்கரன்கோவில், ஸ்ரீகோமதிஅம்பாள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்கு வந்த உலக கோப்பைக்கு, விளையாட்டு வீரா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ, சதன் திருமலைக்குமாா் எம்எல்ஏ ஆகியோா் உலக கோப்பையை காட்சிப்படுத்தினா்.
இதில் மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜேஷ், ஹாக்கி யூனிட் ஆப் தென்காசி செயலா் பால்மகேஷ், தென்காசி கூடுதல் எஸ்.பி. அறிவழகன், ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி செயலா் எஸ்.கே.ராஜேஸ்கண்ணா, முதல்வா் ந.பழனிசெல்வம், நகா்மன்றத் தலைவா் கௌசல்யா, திமுக நகரச் செயலா் மு.பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.