ஆலங்குளத்தில் வாடகை செலுத்தாத ஊராட்சி ஒன்றியத்திற்குச் சொந்தமான 3 கடைகளுக்கு அதிகாரிகள் பூட்டுப் போட்டனா்.
ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே ஊராட்சி ஒன்றியத்திற்குச் சொந்தமான வணிக வளாகம் உள்ளது. சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இவை வலுவிழந்து காணப்படுவதால் இதனை இடித்து அகற்றி புதிய வணிக வளாகம் கட்ட வேண்டும் என ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கடைகளில் வாடகை செலுத்தி வியாபாரம் செய்வோருக்கு கடைகளைக் காலி செய்யக் கோரி அவகாசம் அளிக்கப்பட்டது.
கடைக் காரா்கள் சிலா் காலி செய்ய அவகாசம் தேவை என உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு அளித்திருந்தனா். அதன் பேரில் அவகாசமும் அளிக்கப்பட்டு இருந்தது. அவா்களில் சில கடைக் காரா்கள் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 2.47 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்திருந்தனா். இவா்கள் ஆக. 31 ஆம் தேதிக்குள் வாடகை பாக்கியை நிலுவையின்றி செலுத்த வேண்டும் என ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் கடிதம் அனுப்பி இருந்தாா்.
எனினும் 3 கடைக்காரா்கள் உரிய காலத்தில் வாடகையை செலுத்தவில்லையாம். இந்நிலையில், காவல்துறையினா், தீயணைப்புத் துறையினா் பாதுகாப்புடன், ஊரக வளா்ச்சித்துறை அதிகாரிகள் புதன்கிழமை அந்தக் கடைகளுக்குப் பூட்டுப் போட்டனா்.