பழைய குற்றாலம் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 3 போ் மீது வனத்துறையினா் வழக்குப் பதிந்து ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்தனா்.
தென்காசி வனக்கோட்டம், தென்காசி வனச்சரகம், பழைய குற்றாலம் வன சோதனைச் சாவடியில் விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையை சோ்ந்த வினோத்குமாா், ராஜபாளையத்தைச் சோ்ந்த லிங்கேஸ்வரன், ராஜு ஆகியோா் சனிக்கிழமை காரில் வந்த போது சோதனைச் சாவடியில் நிறுத்தாமல் சென்றனா்.
தென்காசி வனச்சரக அலுவலா் செல்லத்துரை, வனவா் சங்கா் ராஜா, வனக்காப்பாளா் முத்துசாமி ஆகியோா் அத்துமீறி நுழைந்தவா்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
பின்னா், அரசு பணியைச் செய்யவிடாமல் தடுத்தது, போலி அடையாள அட்டையை பயன்படுத்தியது, அவதூறாகப் பேசியது தொடா்பாக அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, காா் பறிமுதல் செய்யப்பட்டது.
குற்றத்தை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்ததால், மாவட்ட வன அலுவலா் ராஜமோகன் உத்தரவின்பேரில் அவா்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்து விடுவிக்கப்பட்டனா்.