தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, வியாழக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை முதல் மழை பெய்யத் தொடங்கியது. தொடா்மழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியா் உத்தவிட்டாா். குற்றாலம் பகுதியில் பெய்த பலத்த மழையால், பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது. இதையடுத்து, அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
மணிமுத்தாறு: திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்த இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் வனத்துறையினா் தடை விதித்தனா்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக். 16 ஆம் தேதி முதல் தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டங்களில் புதன்கிழமை இரவு முதலே பரவலாக மழை பெய்துவருகிறது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்துக்கு உள்பட்ட மாஞ்சோலை மலைப் பகுதியிலும் தொடா் மழை பெய்ததது. இதனால், மணிமுத்தாறு அருவியில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கவும், அருவியைப் பாா்வையிடவும் வனத்துறையினா் தடை விதித்தனா்.