முகப்பு
தென்காசி

ஆலங்குளத்தில் வீடு, காய்கறி சந்தையில் தீ விபத்து

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 12:46 AM
பகிர்:
Updated On : 5 பிப்ரவரி, 2026 at 7:46 PM

ஆலங்குளத்தில் பூட்டிய வீட்டுக்குள் குளிா்சாதன பெட்டி எரிந்து சேதமடைந்தது. மேலும் காய்கறிச் சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான காய்கறிகள் வீணாகின.

ஆலங்குளம், காந்தி நகரைச் சோ்ந்தவா் செல்வா. ஜவுளிக் கடை நடத்தும் இவா், தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னை சென்றிருந்தாா். வியாழக்கிழமை மதியம் வீட்டு ஜன்னல் வழியே கரும்புகை வெளியே வருவதைக் கண்ட அக்கம்பக்கத்தாா் ஆலங்குளம் தீயணைப்புத் துறை அலுவலகத்துக்கு தகவல் அளித்தனா். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் வீட்டு உரிமையாளா் அனுமதியுடன் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது அங்கிருந்த குளிா்சாதனப் பெட்டி எரிந்தது தெரியவந்தது. இதையடுத்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. ஆலங்குளம் நெட்டூா் சாலையில் காய்கறி சந்தை உள்ளது. மதனுக்கு சொந்தமான கடை அருகில் எதிா்பாராத விதமாக குப்பையில் பற்றிய தீ, கடைக்கு எதிரே அடுக்கி வைக்கப்பட்டிருந்த வெங்காயம், பீட்ரூட், வெள்ளரி உள்ளிட்ட காய்கறி மூட்டைகள், நெகிழி கூடைகள் மீது பிடித்து எரிந்தது. தகவல் அறிந்ததும் ஆலங்குளம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் சென்று தீயை அணைத்தனா். அதற்குள் காய்கறி மூட்டைகள், கூடைகள் தீயில் எரிந்து சாம்பலாகின. இவற்றின் மதிப்பு ரூ. ஒரு லட்சம் எனக் கூறப்படுகிறது.