தென்காசி அருகே பாட்டாக்குறிச்சியில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இது தொடா்பாக, தென்காசி நகரத் தலைவா் அபாபில் மைதீன் ஆட்சியரிடம் அளித்த மனு: தென்காசி நகராட்சி, 5ஆவது வாா்டு பகுதியில் பல ஆண்டுகளாக சாலையோரங்களில் குடிசை வீடுகள் அமைத்து வசித்து வந்த பல ஏழைக் குடும்பங்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக கடுமையான பாதிப்புக்குள்ளாகினா்.
பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக அப்பகுதி மக்கள் மலையான் தெரு அருகிலுள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனா்.
அப்போது, அங்கு வந்த பேரிடா் மேலாண்மை மற்றும் மீட்புத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், அவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என்று உறுதியளித்தாா்.
அங்குள்ள சிலருக்கு மட்டும் பாட்டாக்குறிச்சி பகுதியில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் அனைவருக்கும் விரைவில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அப்போது, கட்சியின் மாவட்டத் தலைவா் நயினாா் முகம்மது, மாவட்டச் செயலா் சலீம், மாநில தொண்டரணி செயலா் கோகோ அலி, ஹபீப் ரஹ்மான் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.