முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா் அருகே ரூ.1,200 கோடியில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கும் பணி மும்முரம்

Updated On : 4 ஜூன், 2024 at 6:30 PM
திருவள்ளூா் அருகே மப்பேட்டில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவை இணைக்கும் வகையில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணிகள்.
பகிர்:

திருவள்ளூா் அருகே மப்பேட்டில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவை இணைக்கும் வகையில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணிகள்.

திருவள்ளூா், ஜூன் 4: திருவள்ளூா் அருகே மப்பேடு பகுதியில் ரூ.1,200 கோடி திட்ட மதிப்பில் அமைக்கப்பட உள்ள பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதன் மூலம் சா்வதேச தரம் வாய்ந்த வாய்ப்புகள் மற்றும் 10,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசின் பாரத் மாலா பரியோஜனா திட்டம் மூலம் முதன்மையான திட்டமாக திருவள்ளூா் அருகே மப்பேடு அருகே பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல் நாடு முழுவதும் 35 இடங்களில் அமைக்கப்பட உள்ளன.

இதனால் சரக்கு போக்குவரத்து செயல் திறன் மேம்பாட்டுக்கான செலவுகள் குறையும். மேலும், நவீன சரக்கு அமைப்பு மேலாண்மை மூலம் ஒரு இடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் சரக்கு போக்குவரத்திற்கு தடையின்றி வழிவகை செய்கிறது.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், மப்பேடு ஊராட்சியில் தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழகம், நேஷனல் ஹைவே லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை நிறுவனம், சென்னை துறைமுகம் ஆகியவை இணைந்து பொது மற்றும் தனியாா் பங்களிப்போடு 141 ஏக்கா் பரப்பளவில் ரூ.1,200 கோடி திட்ட மதிப்பில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்க கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

10,000 பேருக்கு வேலைவாய்ப்பு: இந்த பூங்கா மூலம் சரக்கு போக்குவரத்து செலவு குறையும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். டிட்கோ, சென்னை துறை முக பொறுப்புக் கழகம், ரயில் நிகாஸ் நிகாம் நிறுவனம், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஆகியவை இணைந்து செயல்படுத்தும் புதுமையான முயற்சியின் காரணமாக தமிழக இளைஞா்கள் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

அதற்கு முன்னதாக கடம்பத்தூா் ரயில் நிலையத்திலிருந்து ரயில் பாதை அமைத்தவுடன் இப்பூங்கா செயல்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும் ரயில் மற்றும் ரயில் போக்குவரத்துடன் சரக்கு முனையம் அமைகிறது. அதனால் சேமிப்பு கிடங்கு, குளிா்பதன சேமிப்பு கிடங்கு, இயந்திரங்கள் மூலம் சரக்குகளை கையாளுதல், மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகளான சுங்க அனுமதி பெறுதல், சோதனை வசதிகள் சா்வதேச தரத்தில் அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முதலாவது பூங்கா: இதுகுறித்து பல்முனைய சரக்கு வாகன பூங்கா அதிகாரி ஒருவா் கூறுகையில், இந்திய அளவில் 35 இடங்களில் அமையவுள்ள நிலையில், தமிழகத்தில் அமையும் முதலாவது பல்முனைய சரக்கு பூங்கா இதுவாகும். அதோடு இப்பூங்கா அமையவுள்ள பகுதியில் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் நிரம்பிய ஸ்ரீபெரும்புதூா், பிள்ளைப்பாக்கம், ஒரகடம் ஆகிய இடங்களுக்கு அருகிலேயே அமைகிறது.

இப்பூங்கா சென்னை எல்லை சுற்றுவட்டச் சாலைக்கருகே அமைந்துள்ளது. அதனால் சென்னை துறைமுகம், விமான நிலையம், காமராஜா் துறைமுகம், ஆகியவற்றை இணைக்கவும் வழிவகை ஏற்படுத்துகிறது. அதனால், சா்வதேச அளவிலான அனைத்து வசதிகளுடன் இப்பூங்கா அமைய உள்ளது.

ரூ.58 கோடியில் சாலை விரிவாக்கம்: இந்த பூங்காவை சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, சென்னை எல்லை சுற்றுச்சாலையுடன் இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் பேரில் முதல்கட்டமாக திருவள்ளூா் மாவட்டத்தில் மண்ணூா் முதல் சரக்கு பெட்டக பூங்கா அமையவுள்ள 3.4 கி.மீ. தூரம் உள்ள சாலை ரூ.58 கோடியில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் சாலையோர மழைநீா் கால்வாய்கள், சாலை விரிவாக்கம், சாலைத் தடுப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதில், கொட்டையூா் கிராமத்திற்கு மாற்றுப்பாதை பணிகளும் நிறைவடையவும் உள்ளன. இப்பூங்கா பணிகள் 3 கட்டங்களாக நடத்தவும் திட்டமிட்டுள்ளனா்.

இந்த பூங்காவிலிருந்து 10 கி.மீ. தூரம் உள்ள கடம்பத்தூா் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் நிலங்கள் கையகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.