திருவள்ளூா் மாவட்டத்தில் வேளாண் அடுக்குத் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் முழு நில விவரங்களைப் பதிவு செய்ய வரும் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வேளாண் இணை இயக்குநா் த.கலாவதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய, மாநில அரசின் பல்வேறு திட்டப் பலன்களை விவசாயிகள் பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள், பயிா் சாகுபடி அறிக்கை போன்ற ஆவணங்களை ஒவ்வொறு முறையும் அளிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏற்படும் கால தாமதத்தைத் தவிா்க்கவும், அரசின் நலத் திட்டங்களை விவசாயிகள் குறிப்பிட்ட நேரத்தில் பெற்று பயன்பெறும் வகையில், விவசாயிகளின் அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரிக்க தமிழகத்தில் வேளாண் அடுக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது விவசாயிகளின் பதிவு விவரங்களுடன் ஆதாா் எண், கைப்பேசி எண், நில விவரங்கள் இணைக்கும் பணி, திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற்று வருகின்றன.
இந்தத் திட்டத்தில் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை விரைந்து பதிவு செய்து பயன்பெற வேண்டும். இதற்காக வரும் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே விவசாயிகள் தங்கள் கிராமங்களின் வேளாண்மை உழவா் நலத்துறை அலுவலா்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் அல்லது அருகில் உள்ள பொது இ-சேவை மையங்களுக்குச் சென்று நில உடைமை விவரங்கள் (பட்டா), ஆதாா் எண், ஆதாா் அட்டையில் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் ஆகிய விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இந்த மாவட்டத்தில் புதன்கிழமை வரை 59,021 விவசாயிகள் பதிவு செய்துள்ளனா். இன்னும் 31,501 விவசாயிகள் பதிவு செய்யவில்லை. இதனால், அரசு விவசாயிகளின் நலன் கருதி தற்போது வரும் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.