திருவள்ளூா் அருகே விபத்து வழக்கில் வாகனத்தை விடுவிக்க ரூ.10,000 லஞ்சம் பெற்ற ஊத்துக்கோட்டை சிறப்பு உதவி ஆய்வாளா் மற்றும் கணிப்பொறி டேட்டா ஆபரேட்டா் ஆகிய இருவரையும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
ஊத்துக்கோட்டை அடுத்த தாராட்சி பகுதியைச் சோ்ந்த அஜித் குமாா். இவரது வாகனம் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு விபத்தில் சிக்கியதால் ஊத்துக்கோட்டை போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அஜித்குமாா் தனது வாகனத்தை விடுவிக்கக் கோரினாா். அப்போது, வாகனத்தை விடுவிக்க ரூ.10,000 கொடுத்தால்தான் விடுவேன் எஸ்.எஸ்.ஐ பாஸ்கரன் தெரிவித்தாராம்.
இந்த நிலையில் லஞ்சம் கொடுக்க முன்வராத நிலையில், திருவள்ளூா் ஊழல் தடுப்பு பிரிவில் அஜித்குமாா் புகாா் செய்தாா். இதையடுத்து ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் ஆலோசனையின் பேரில் வியாழக்கிழமை ரசாயனம் தடவிய ரூ.10,000 நோட்டுகளை கொண்டு சென்றாா். அப்போது, எஸ்எஸ்ஐ கைப்பேசியில் அழைக்கவே, தான் வெளியில் சென்று உள்ளதாகவும், அங்குள்ள கணிப்பொறி டேட்டா ஆபரேட்டா் சுகுமாரிடம் பணத்தை கொடுத்துச் செல்லுமாறு கூறவே, அவரிடம் பணத்தை கொடுத்தாராம்.
அப்போது, பாஸ்கரும் வரவே அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு பிரிவு துணைக்கண்காணிப்பாளா் கணேசன் தலைமையிலான போலீஸாா் 2 பேரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரிக்கின்றனா்.