தொழில் மலர் - 2019

பெண்களுக்கும் ஏற்ற கறவை மாடு வளர்ப்புத் தொழில் 

DIN

வீடு, கடைகள் உபயோகம் என பால் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பெண்கள் பலரும் கறவை மாடு வளர்ப்பில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
 குறிப்பாக இந்தத் தொழிலை திறம்பட செய்வதன் மூலம், குடும்பத்தின் அன்றாட செலவுகளை அவர்களால் நேர் செய்ய முடிகிறது.
 கறவை மாடுகள் வளர்ப்பிற்கு சிறிய அளவிலான இடம் இருந்தாலே போதுமானது. கறவை மாடுகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 60 சதவீதம் வரையிலும் தீவனச் செலவுக்கு சென்றுவிடும்.
 எனவே விலை கொடுத்து தீவனம் வாங்குவதை தவிர்த்து, அருகே உள்ள காடுகளுக்கு (மேய்ச்சல் நிலங்களுக்கு) கொண்டு சென்றால் தீவனச் செலவினங்களை கணிசமாக குறைக்கலாம்.
 வாய்க்கால், வரப்புகளில் விளையும் அருகம்புல், கினியாபுல், வாழைக்கன்று, அகத்திக்கீரை போன்ற வீட்டின் அருகே உள்ள செலவில்லாத பசுந்தீவனங்களை மாடுகளுக்கு கொடுக்கலாம். மழைக் காலங்களில் பசுந் தீவனங்களுடன் சேர்த்து உலர் தீவனமாக வைக்கோல், கடலைக் கொடிகளையும் கொடுக்கலாம்.
 மாடுகளுக்கு இயற்கைத் தீவனமான இலைகள், புற்கள் விவசாய நிலங்களில் தாராளமாகக் கிடைக்கக் கூடியவை.
 கடலை பிண்ணாக்கு, தவிடு ஆகியவற்றை தினமும் தீவனமாகக் கொடுத்தால் கூடுதலாக பால் கிடைக்கும்.
 கன்று ஈன்ற மாதத்தில் இருந்து கூடுதல் பால் கிடைக்கும். பின் மாதம் செல்லச் செல்ல பால் அளவு படிப்படியாக குறையும். சத்தான உணவு அளித்தால் பால் சுரப்பு அதிகரிக்கும்.
 நடுத்தரமான பசு, தினந்தோறும் 10 லிட்டர் பால் தருகிறது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் லிட்டர் ரூ.35-க்கு கொள்முதல் செய்கின்றனர்.
 இதுவே வீடுகள் மற்றும் உணவகங்களுக்கு ரூ.40 வரை விலை வைத்து விற்பனை செய்யலாம்.
 மாடுகளை பராமரிக்கும் முறை: மாடு வளர்ப்பில் முதன்மையானது அதன் பராமரிப்பு முறைதான். மாட்டு தொழுவத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 நன்றாக பராமரித்தால் குறைந்த பட்சம் 15 ஆண்டுகள் வரையிலும் பசு பலன் தரும்.
 பெரும்பாலும் கறவை மாடு வளர்ப்பவர்களே பால் கறந்து விற்பனை செய்வதால் கறவை கூலி மிச்சம்.
 காப்பீடு அவசியம்: மாடுகள் நோய் தாக்குதலிலோ, விபத்தினாலோ இறந்துவிட்டால் தொழில் முனைவோர் பாதிக்கப்படாமல் இருக்க, கால்நடை மருத்துவர்களின் ஆலோசனையின்படி மாடுகளுக்கு காப்பீடு செய்து கொள்வது அவசியம்.
 லாபகரமான தொழில்: கறவை மாடு வளர்ப்பு தொழிலில் முறையான வழிமுறைகளை கையாளும் போது, ஆண்டு முழுவதும் வருமானம் தரக்கூடிய லாபகரமான தொழிலாக மாறிவிடும்.
 கறவை மாடு வளர்ப்பு குறித்து அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநரை அணுகி பயன்பெறலாம்.
 
 மாடுகளுக்கான கொட்டகையைக் கிழக்கு-மேற்காக அமைக்க வேண்டும். கொட்டகையின் தரைப்பகுதி தண்ணீர் தேங்காதபடி இருக்க வேண்டும். மாடுகளைத் தெற்கு-வடக்காகக் கட்ட வேண்டும். தரையிலிருந்து ஒன்றேகால் அடி உயரத்தில் தளம் அமைத்து அதன்மேல் ஒன்றரை அடி உயரத்தில் தீவனத்தொட்டி அமைக்க வேண்டும். கொட்டகையில் சாணம் தேங்கி இருக்கக் கூடாது. அவ்வப்போது கொட்டகையைக் கழுவி, சுத்தம் செய்ய வேண்டும். மாடுகளையும் அவ்வப்போது குளிப்பாட்ட வேண்டும்.
 
 -சு. ராமையா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

SCROLL FOR NEXT