பங்கு சார்ந்த பரஸ்பர நிதி முதலீடு ரூ.1.7 லட்சம் கோடியாக உயர்வு
கடந்த 2017-18-ஆம் நிதி ஆண்டில் பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டாளர்கள் ரூ.1.7 லட்சம் கோடியை முதலீடு செய்தனர்.
கடந்த 2017-18-ஆம் நிதி ஆண்டில் பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டாளர்கள் ரூ.1.7 லட்சம் கோடியை முதலீடு செய்தனர்.
இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பங்கு தொடர்புடைய திட்டங்களில் (இ.எல்.எஸ்.எஸ்.) கடந்த நிதி ஆண்டில் நிகர அளவில் முதலீட்டாளர்கள் ரூ.1.7 லட்சம் கோடியை முதலீடு செய்தனர். 2016-17-இல் மேற்கொள்ளப்பட்ட முதலீடான ரூ.70,367 கோடியுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் அதிகமாகும்.
2017-18-இல் பரஸ்பர நிதி நிறுவனங்கள் பங்கு சார்ந்த திட்டங்களில் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, முந்தைய ஆண்டின் ரூ.5 43 லட்சம் கோடியிலிருந்து 38 சதவீதம் அதிகரித்து ரூ.7 5 லட்சம் கோடி என்ற சாதனை அளவை எட்டியதாக அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரஸ்பர நிதி நிறுவனங்கள் பங்கு சார்ந்த திட்டங்கள் குறித்து முதலீட்டாளர்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. அத்திட்டங்களிலிருந்து கிடைக்கும் வருவாயும் அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாகவே உள்ளன.
மேலும், மனை வர்த்தகம், தங்கம் போன்ற பாரம்பரிய முதலீட்டு திட்டங்களைவிட எஸ்ஐபி எனப்படும் நெறிப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டங்களில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டியதால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.