வணிகம்

கோவை தொழில் துறையிலும் கரோனா பாதிப்பு

உலகையே உலுக்கி வரும் கரோனா வைரஸ் இந்திய தொழில் துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழில் நகரமான கோவையும் கரோனாவின் சுழலில் சிக்கி சிதைந்து வருகிறது.

க. தங்கராஜா

உலகையே உலுக்கி வரும் கரோனா வைரஸ் இந்திய தொழில் துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழில் நகரமான கோவையும் கரோனாவின் சுழலில் சிக்கி சிதைந்து வருகிறது.
உலக வரலாற்றில் இடம் பிடித்துவிட்ட கரோனா, அதற்காகப் பெற்றுக் கொண்ட விலையோ, பல்லாயிரக்கணக்கான உயிர்கள். அத்துடன் உலகெங்கும் பல லட்சம் கோடி மதிப்பிலான வணிகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி, பல கோடி தொழிலாளர்களின் வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கரோனாவின் தாக்கம், உயிர் பலிகள் சொற்பம்தான் என்றாலும் பொருளாதார ரீதியாக தந்துள்ள பாதிப்போ மிகவும் அதிகம். உள்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் ஏற்கெனவே சுணக்கத்தில் இருந்த தொழில் துறையினரை மேலும் ஆட்டிப் பார்த்து வருகிறது கரோனா.
ஆனால் முந்தைய மந்த நிலைக்கும் தற்போதைய மந்த நிலைக்கும் ஒரு வித்தியாசம் என்னவென்றால் முந்தைய மந்த நிலைக்கான காரணி உள்நாட்டில் இருந்தது. ஆனால் இப்போதோ காரணி, வெளிநாடுகளில் இருந்து வந்து நம்மைத் தாக்குகிறது. இதனால் முந்தைய மந்த நிலையில் தப்பித்த ஒரு சில தொழில் துறைகளும் இப்போது தப்பிக்க முடியவில்லை என்பது பெரும் சோகம்.
ஜவுளித் தொழில் துறையைப் பொருத்தவரை இதுவரை இல்லாத வித்தியாசமான சவாலை எதிர்கொண்டிருக்கிறது என்கிறார் இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன். "இந்தியாவின் 65 சதவீத ஏற்றுமதி பொருள்கள் உலகின் 15 நாடுகளுக்கே செல்கின்றன. கரோனாவால் அந்த 15 நாடுகளும் பாதிக்கப்பட்டிருப்பதே இந்திய தொழில் துறையின் மந்த நிலைக்குக் காரணம். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் இந்திய நிறுவனங்களுக்கு ஏற்கெனவே வழங்கிய ஜவுளி ஆர்டர்களை நிறுத்திவைத்துள்ளன. சிலர் ரத்து செய்துள்ளனர். மேலும் சிலரோ பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்திவைத்துள்ளனர்.
கரோனா தாக்கம் குறைந்துள்ள தென் கொரியா, சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளின் நிலையை வைத்துப் பார்க்கும்போது வர்த்தகம் இயல்பு நிலைக்குத் திரும்ப 90 முதல் 120 நாள்கள் வரை ஆகும். ஏற்றுமதி இல்லாததால் தானாகவே ஆடை உற்பத்தி, துணி உற்பத்தி, நூல் உற்பத்தி குறைந்து வேலையிழப்பு ஏற்படுகிறது. இதனால் இந்தியாவில் அடுத்த காலாண்டில் பொருளாதார வீழ்ச்சி கட்டாயம் இருக்கும். ஏற்றுமதி மீண்டும் இயல்பு நிலைக்கு வரும் வரையிலும் தொழில்முனைவோர் தாக்குப்பிடிக்க வேண்டும் என்றால் வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்த அவகாசம் வழங்குவது நம்பிக்கை அளிப்பதாக இருக்கும்' என்றார்.
ஏற்றுமதி பாதிப்புடன் உள்நாட்டு வியாபாரமும் பாதிக்கப்பட்டதால் சிக்கல் உருவாகியிருப்பதாகக் கூறும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் அஸ்வின் சந்திரன், இந்த பாதிப்பில் இருந்து மீள ஓராண்டாகும் என்கிறார். "ஏற்றுமதி, இறக்குமதி நிறுத்தம், வணிக வளாகங்கள் மூடல் போன்ற நடவடிக்கைகளால் ஜவுளிப் பொருள்களுக்கான தேவை பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் ஜவுளித் தொழில் நிறுவனங்கள் எதிர்பாராத பெரும் இழப்பை சந்திக்க வேண்டிய சூழலில் உள்ளன. ஜவுளித் தொழில் அதிக மூலதனத்தையும் அதிக தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பையும் அளிக்கும் துறையாக இருப்பதால், தற்போதைய சிக்கலான சூழலில் இருந்து மீள அரசின் உடனடி உதவி தேவைப்படுகிறது. எனவே, இந்த இக்கட்டான நிலையில் இருந்து ஜவுளித் தொழில் மீண்டு வர வங்கிக் கடன் அளிக்கவும், வட்டி செலுத்துவதற்கு ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2021 வரை அவகாசம் அளிக்கவும் வங்கித் துறைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்' என்றார்.
வங்கிக் கடன் மீதான வட்டிக் குறைப்பின் மூலம் பம்ப்செட் தயாரிப்பாளர்களின் பிரச்னையை ஓரளவுக்கு சமாளிக்க முடியும் என்கிறார் தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கத்தின் (சீமா) தலைவர் வி.கிருஷ்ணகுமார்.
"நாட்டின் மொத்த பம்ப்செட் தேவையில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பிலான சுமார் 55% தேவையை கோவை நிறுவனங்களே பூர்த்தி செய்கின்றன. கரோனாவால் விற்பனை, உற்பத்தியில் பம்ப்செட் துறை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெற்றுள்ள கடன், புதிய கடன்கள் மீதான வட்டியை வங்கிகள் குறைப்பதன் மூலம் பாதிப்பை ஓரளவுக்கு சரிகட்ட முடியும்.
அத்துடன் வட்டியில்லாத புதிய கடன்களை அவர்களின் நடப்பு மூலதனம், கொள்முதல் அல்லது விற்பனை சரக்குகளின் மதிப்புக்கு வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ., பி.எஃப். தொகையை செலுத்த 6 மாத அவகாசமும், ஜி.எஸ்.டி. செலுத்த 3 மாத அவகாசமும் வழங்க வேண்டும்' என்றார்.
அடுத்தடுத்த மந்த நிலைக்கு ஆளாகி வரும் பம்ப்செட், உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்களுக்கு கடன் தள்ளுபடி வழங்கினால் மட்டுமே தொழில் நிலைக்கும் என்கிறார் கோவை பம்ப்செட், உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்கத்தின் (கோப்மா) தலைவர் கே.மணிராஜ்.
கோவையின் தயாரிப்புகள் அண்டை மாநிலங்களுக்கே அதிகம் செல்கின்றன. தற்போது எல்லைகள் மூடப்பட்டிருப்பதாலும், கரோனா அச்சம் காரணமாக விற்பனை சரிவு, பணப்புழக்கம் பாதிக்கப்பட்டிருப்பதாலும் உற்பத்தி முடங்கியுள்ளது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, கடுமையான நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி செலுத்த 3 மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும். அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.10 லட்சம் வரை கடன் பெற்றுள்ள குறுந்தொழில்களின் கடன், வாராக்கடன்களை தள்ளுபடி செய்ததைப் போன்று தள்ளுபடி செய்ய வேண்டும். ரூ.10 லட்சத்துக்கும் மேலான கடன்களுக்கான வட்டி, தவணைக் காலத்தை 3 மாதங்களுக்கு நிறுத்திவைப்பதுடன், 11.50% வட்டியை 4 சதவீதமாக குறைக்க வேண்டும் என்கிறார்.
கரோனா வைரஸ் தாக்கத்தால் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் தொழில் துறையினருக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் (டேக்ட்) தலைவர் ஜே.ஜேம்ஸ் வலியுறுத்துகிறார். கோவையில் உள்ள சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை கரோனா நெருக்கடியில் இருந்து பாதுகாக்க தொழில் நிறுவனங்களின் உற்பத்தித் திறனுக்கு ஏற்றவாறு ரூ.50ஆயிரம் முதல் ரூ.5லட்சம் வரை உடனடியாக வட்டியில்லாக் கடன்கள் வழங்க வேண்டும்.
அத்துடன், தொழில்முனைவோர் ஏற்கெனவே வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த மேலும் ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும். வட்டி, அபராத வட்டிகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும். கரோனாவின் பாதிப்பில் இருந்து நாடு மீண்டு வரும் வரையிலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அத்தியாவசிய பொருள்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் ஜேம்ஸ்.
வாகனப் போக்குவரத்தை தடை செய்தாலே சிறுதொழில்கள் முடங்கும். ஏற்கெனவே மகாராஷ்டிரத்தில் சிறு தொழில்முனைவோர் உற்பத்தியை நிறுத்திவிட்டனர். தமிழகமும் அதை நோக்கிப் பயணிக்கிறது என்கிறார் கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கத்தின் (கொடிசியா) தலைவர் ஆர்.ராமமூர்த்தி.
"குறுந்தொழில்களின் உற்பத்தி நின்றால் தானாகவே சிறுதொழில்கள் முடங்கும். அதன்படி தற்போது கடுமையான மந்த நிலையை நோக்கி நகர்ந்து வருகிறோம். நாட்டில் உள்ள பெருநிறுவனங்களே சலுகைத் திட்டங்களைக் கேட்கும்போது, வசதி குறைந்த எங்களால் எப்படி இந்த நிலையை சமாளிக்க முடியும்?
வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த குறைந்தது 6 மாத அவகாசம் வழங்க வேண்டும். நிதி அமைச்சர் ஏற்கெனவே அறிவித்த மூலதனக் கடனை வங்கிகள் இப்போதாவது வழங்க வேண்டும். அப்படி வழங்கினாலாவது வரும் டிசம்பருக்குள் நிலைமையைச் சரி செய்துவிடலாம் என்கிறார் ராமமூர்த்தி.
கோவையில் சுமார் 3,200 கிரில் தொழில்முனைவோர் உள்ளனர். இவர்களிடம் சுமார் 15 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கரோனா வைரஸ் அச்சம் காரணமாக தொழில் நலிவடைந்துள்ளது. எனவே வங்கிக் கடன் பெற்றுள்ள தொழில்முனைவோர் கடனை திருப்பிச் செலுத்த 3 மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்கிறார் கிரில் தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவர் திருமலை ரவி.
மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதேபோல, எதிர்பாராத நெருக்கடியால் எங்களது தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து மீண்டு வரும் வரையிலும், நாங்கள் தொழிலாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக மீனவர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே எங்களுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும். மின் கட்டணம் செலுத்த ஒரு மாதம் அவகாசம் அளிக்க வேண்டும்.
மூலப் பொருள்களின் விலை உயர்வு, ஜிஎஸ்டி, உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு ஆகியவற்றால் ஏற்பட்ட சுணக்கம் என அடுத்தடுத்து பாதிப்பை சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது கரோனா வைரஸ், தொழில் துறையை கடுமையாகத் தாக்கியுள்ளது.
வைரஸ் பாதித்தவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ சிகிச்சையைப் போலவே வைரஸால் தொழில் பாதித்தவர்களுக்கும் உடனடி சிகிச்சையாக சலுகைகள் தேவைப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

SCROLL FOR NEXT