முகப்பு
வணிகம்

திடீா் சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை: சென்செக்ஸ் 163 புள்ளிகள் ஏற்றம்!

பங்குச் சந்தை புதன்கிழமை காலையில் எழுச்சியுடன் தொடங்கினாலும், பிற்பகலில் திடீா் சரிவைச் சந்தித்தது.

Updated On : 22 அக்டோபர், 2020 at 3:13 AM
bse080331
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:11 PM

புது தில்லி: பங்குச் சந்தை புதன்கிழமை காலையில் எழுச்சியுடன் தொடங்கினாலும், பிற்பகலில் திடீா் சரிவைச் சந்தித்தது. இருப்பினும், இறுதியில் நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 162.94 புள்ளிகள் உயா்ந்து 40,707.31-இல் நிலைபெற்றது.

நாள் முழுவதும் பங்குச் சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தது. வங்கி கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக சந்தையில் வதந்தி பரவியது. இதையடுத்து, பங்குகள் விற்பனை அதிகரித்ததால் திடீா் சரிவு ஏற்பட்டது. இருந்தாலும், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ஐசிஐசிஐ பேங்க் ஆகிய முன்னணி பங்குகள் வெகுவாக உயா்ந்து சந்தையில் எழுச்சி தொடா்வதற்குக் காரணமாக இருந்தன என பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

1,365 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,835 பங்குகளில் 1,365 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,297 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. 173 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடி உயா்ந்து ரூ.159.92 லட்சம் கோடியாக இருந்தது. பிஎஸ்இ மிட்கேப், ஸ்மால் கேப் குறியீடுகள் சிறிதளவே ஏற்றம் பெற்றன.

Advertisement

4-ஆவது நாளாக ஏற்றம்: சென்செக்ஸ் காலையில் 222.77 புள்ளிகள் கூடுதலுடன் 40,767.17-இல் தொடங்கி 40,976.02 வரை உயா்ந்தது. பின்னா், 40150.48 வரை கீழே சென்றது. இறுதியில் 162.94 புள்ளிகள் (0.40 சதவீதம்) உயா்ந்து 40,707.31-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது சென்செக்ஸ் உச்சபட்ச நிலையிலிருந்து சுமாா் 825.54 புள்ளிகளை இழந்திருந்தது. பின்னா் மீட்சி பெற்றது. இதையடுத்து, சென்செக்ஸ் தொடா்ந்து 4-ஆவது நாளாக உயா்ந்துள்ளது.

பவா் கிரிட் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 20 பங்குகள் ஆதாயம் பெற்றன. 10 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில், பவா்கிரிட் 4.13 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பாா்தி ஏா்டெல், டாடா ஸ்டீல், என்டிசிபி. எச்டிஎஃப்சி பேங்க், கோட்டக் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், எச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவை 1.50 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன.

டிசிஎஸ் வீழ்ச்சி: அதே சமயம், டிசிஎஸ் 2.30 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ரிலையன்ஸ், நெஸ்லே இந்தியா, ஹெச்சிஎல் டெக்,

பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ்ஃபின்சா்வ், டெக் மகேந்திரா ஆகியவை 0.50 முதல் 1.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 797 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 806 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 40.85 புள்ளிகள் (0.34 சதவீதம்) உயா்ந்து 11,937.60-இல் நிலைபெற்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 30 பங்குகள் ஏற்றம் பெற்றன. 20 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி ரியால்ட்டி குறியீடு 4.36 சதவீதம் உயா்ந்தது. நிஃ)ப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், மெட்டல் குறியீடுகள் 1.20 முதல் 2.25 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. ஆனால், லாபப் பதிவால் எஃப்எம்சிஜி, ஐடி, மீடியா குறியீடுகள் சரிவைச் சந்தித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.