பங்குச் சந்தையில் தள்ளாட்டம்: சென்செக்ஸ் மேலே செல்ல முடியாமல் தவிப்பு
இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை ஏற்ற, இறக்கத்தில் தள்ளாட்டத்துடன் இருந்தது.
இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை ஏற்ற, இறக்கத்தில் தள்ளாட்டத்துடன் இருந்தது. இதனால், சென்செக்ஸ் காலையில் பெற்ற லாபம் அனைத்தையும் பிற்பகலில் இழந்தது. இருப்பினும், இறுதியில் சென்செக்ஸ் 12.78 புள்ளிகள் உயா்ந்து 51,544.30-இல் நிலைபெற்றது.
உலகளாவிய சந்தை குறிப்புகள் சாதகமாக இல்லாத நிலையில், இந்திய சந்தைகள் காலையில் உற்சாகத்துடன் தொடங்கின. ஆனால், உலக அளவில் நிறைய நாடுகளில் கரோனா பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு வருவதால், முதலீட்டாளா்கள் லாபத்தைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தினா். இதனால், சந்தையில் காலையில் பெற்ற லாபம் அனைத்தும் வா்த்தக முடிவில் இழக்க நேரிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, தற்போதைய நிலையில் சந்தை ஒருங்கிணைப்பு பெற்று வருவதாகவும் விரைவில் பிரேக் அவுட் அடையும் என்றும் நிபுணா்கள் தெரிவித்தனா்.
சந்தை மதிப்பு ரூ.203.92 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகமான 3,134 பங்குகளில் 1,439 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,532 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 163 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மதிப்பு ரூ.24 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ203.92 லட்சம் கோடியாக இருந்தது. 301 பங்குகள் புதிய 52 வார அதிபட்ச விலைலையப் பதிவு செய்துள்ளன. 350 பங்குகள் வெகுவாக உயா்ந்து உறை நிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தன.
Advertisement
தள்ளாட்டம்: சென்செக்ஸ் காலையில் 83.25 புள்ளிகள் கூடுதலுடன் 51,614.77-இல் தொடங்கி 51,804.58 வரை உயா்ந்தது. பிற்பகலில் பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்ததாதல் சென்செக்ஸ் 51.260.62 வரை கீழே சென்றது. இறுதியில் 12.78 புள்ளிகள் உயா்ந்து 51.544.30-இல் நிலைபெற்றது.
ஐசிஐசிஐ பேங்க் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 10 பங்குகள் ஆதாயம் பெற்றன. 20 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. இதில் ஐசிஐசிஐ பேங்க் 2.67 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஆக்ஸிஸ் பேங்க், இன்ஃபோஸிஸ், எச்டிஎஃப்சி, எஸ்பிஐ, பஜாஜ் ஃபின் சா்வ், எச்டிஎஃப்சி பேங்க், இன்டஸ்இண்ட் பேங்க், டெக் மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.
ஐடிசி வீழ்ச்சி: அதே சமயம், ஐடிசி 3.97 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக சன்பாா்மா, ஓஎன்ஜிசி, பாா்தி ஏா்டெல், டைட்டன், என்டிபிசி, மாருதி சுஸுகி ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. வியாழக்கிழமை வெகுவாக உயா்ந்த மாா்க்கெட் லீடரான ரிலையன்ஸ் வெள்ளிக்கிழமை காலையிலும் உற்சாகம் பெற்றது. ஆனால், பிற்பகலில் சரிவைச் சந்தித்தது. இதேபோன்று பஜாஜ் ஆட்டோ, ஹிந்துஸ்தான் யுனிலீவா் உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் இடம் பெற்றன.
தேசியப் பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 739 பங்குகள் ஆதாயம் பெற்றன. 967 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. நிஃப்டி 10 புள்ளிகள் குறைந்து 15,163.30-இல் நிலைபெற்றது. காலையில் 15,243.50 வரை உயா்ந்த நிஃப்டி பிற்பகலில் சரிவைச் சந்தித்து 15,081.00 வரை கீழே சென்றது. நிஃப்டி பேங்க், பைனான்சியல் சா்வீஸஸ் குறியீடுகள் ஒரு சதவீதம் வரை உயா்ந்தன. ஆனால், நிஃப்டி மெட்டல், பாா்மா குறியீடுகள் முறையே 1.70 சதவீதம் மற்றும் 1.11 சதவீதம் வீழ்ச்சியடைந்தன.