கோவை: கரோனா காலத்தில் மூடப்பட்ட பஞ்சாலைகளை தேசிய பஞ்சாலைக் கழகம் (என்.டி.சி.) திறக்க மறுத்து வருவதால் அவை நிரந்தரமாக மூடப்பட்டுவிடுமோ என்ற அச்சம் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் வேளாண் துறைக்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பு, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது ஜவுளித் துறையாகும். லாபம் நிறைந்த ஜவுளித் தொழிலை தமது காலனியாதிக்கத்தில் இருந்த இந்தியாவில் வளர்த்தெடுக்க ஆங்கிலேயர்கள் தேர்ந்தெடுத்தது ஏ, பி, சி, எனப்படும் மூன்று நகரங்கள். ஆமதாபாத், பாம்பே (மும்பை), கோயம்புத்தூர் ஆகிய இந்த மூன்று நகரங்கள் இன்றும் ஜவுளித் துறையில் தவிர்க்க முடியாத இடத்தை வகிக்கின்றன.
நலிவடைந்த நிலையில் இருந்த 16 தனியார் பஞ்சாலைகளை நிர்வாகம் செய்வதற்காக 1968-இல் என்டிசி தொடங்கப்பட்டது. பின்னர் 1972-73இல் என்டிசி நிர்வாகத்தின் கீழ் வந்த ஆலைகளின் எண்ணிக்கை 103-ஆக உயர்ந்தது. தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி என்பது உள்ளிட்ட காரணங்களைக் கூறி 1974-இல் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதிலும் இருந்த 123 பஞ்சாலைகள் தேசியமயமாக்கப்பட்டன.
மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் பொதுத் துறை நிறுவனமாக என்டிசி செயல்படுகிறது. இதன் வசம் இருந்த ஆலைகளில் 100 பஞ்சாலைகள் நஷ்டம் காரணமாக மூடப்பட்டுவிட்டன. தற்போது 23 பஞ்சாலைகள் மட்டுமே செயல்படும் நிலையில் உள்ளன.
இவற்றில் தென்னிந்தியாவில் மட்டும் 15 ஆலைகள் இயங்குகின்றன. தமிழகத்தில், பங்கஜா மில்ஸ், கம்போடியா மில்ஸ், கோயம்புத்தூர் ஸ்பின்னிங் அண்டு வீவிங் மில்ஸ், ஸ்ரீ ரங்கவிலாஸ் மில்ஸ், முருகன் மில்ஸ் என 5 ஆலைகள் கோவையில் செயல்படுகின்றன. சிவகங்கை மாவட்டம் காளையார்கோயிலில் காளீஸ்வரா மில்ஸ், ராமநாதபுரம் மாவட்டம் கமுதக்குடியில் பயனீர் ஸ்பின்னர்ஸ் ஆகிய மில்கள் தமிழகத்தில் செயல்படும் மற்ற 2 ஆலைகளாகும்.
கரோனாவுக்கு முன்பு வரையிலும் செயல்பட்டு வந்த இந்த ஆலைகள் பொது முடக்க காலத்துக்குப் பிறகு திறக்கப்படவில்லை. தொழிலாளர்களும் தொழிற்சங்கத்தினரும் என்டிசி நிர்வாகத்தையும், ஜவுளித் துறை அமைச்சகத்தை வலியுறுத்தியும் பல்வேறு கோரிக்கைகள் எழுப்பியும், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டும் வந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 7 ஆலைகளில் 3 மட்டும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டன.
அதேபோல் நாடு முழுவதிலும் தென்னிந்தியாவில் 4, வடஇந்தியாவில் 3 என மொத்தம் 7 ஆலைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. மற்ற ஆலைகளைத் திறக்க தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், பல்வேறு காரணங்களைக் கூறி மத்திய அரசு மறுத்து வருகிறது. பல ஆயிரம் கோடி சொத்து இருந்தாலும் தனியார் பஞ்சாலைகளுக்கு மறைமுக ஆதரவளிக்கும் விதமாகவே மத்திய அரசின் ஆலைகள் திறக்கப்படாமலிருக்கின்றன என்று குற்றஞ்சாட்டுகிறார் சிஐடியூ மாவட்டத் தலைவர் சி.பத்மநாபன்.
நஷ்டத்தில் இயங்குவதாக காரணம் கூறி தொடர்ந்து ஒவ்வொரு ஆலைகளாக மூடி வரும் நிர்வாகம், அதே காரணத்தைக் கூறி மற்ற ஆலைகளையும் மூடிவிடுமோ என்ற அச்சம் தொழிலாளர்களிடையே உள்ளது. என்டிசிக்கு முறையான நிர்வாகக் கட்டமைப்பு, இயக்குநர்களை நியமிக்காமல் கடந்த 10 ஆண்டுகளாக சிதைக்கப்பட்டதாலேயே அது தற்போது நஷ்டத்தில் இயங்குகிறது.
தேசியமயமாக்கப்பட்ட ஆலைகளின் இன்றைய சொத்து மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடியாகும். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சில ஆலைகளை நவீனமயமாக்குவதற்காக என்டிசியிடம் இருந்த சிறிய அளவிலான நிலங்களை விற்ற வகையில் ரூ.5 ஆயிரம் கோடி ஈட்டப்பட்டது. இதில் மீதமிருந்த ரூ.2 ஆயிரம் கோடி மற்ற பொதுத் துறை நிறுவனங்களுக்கு கடனாக வழங்கப்பட்டது. அதை திரும்ப வாங்கினாலே எல்லா ஆலைகளையும் நவீனப்படுத்தி, மேலும் 10 ஆயிரம் பேர்களுக்கு வேலை வழங்க முடியும். நாடு முழுவதிலும் என்டிசி ஆலைகள் தினசரி 2.5 லட்சம் கிலோ நூல் உற்பத்தி செய்து வந்தன. கடந்த 6 மாதங்களாக என்டிசி நூல் சந்தை விற்பனைக்கு வராததால் தனியார் பஞ்சாலைகள் 30 முதல் 50% வரை லாபமீட்டியுள்ளன. கோவையில் உள்ள 5 ஆலைகளில் 2 மட்டுமே நவீனமயமாக்கப்பட்டுள்ளன. இந்த 2 ஆலைகளில் இருந்து கிடைக்கும் லாபத்தைக் கொண்டே மற்ற ஆலைகளை இயக்க முடியும் என்று நிர்வாகம் கூறுகிறது. இது எப்போது நடைபெறும் என்ற கால அளவை என்டிசி கூற மறுக்கிறது. ஜவுளி அமைச்சரும் மெüனம் காக்கிறார். இவர்களின் மெüனத்தின் அர்த்தம் தனியாருக்கு சாதகமாக உள்ளது என்கிறார் அவர்.
தமிழகத்தில் என்டிசி ஆலைகள் மூடிக் கிடப்பதால் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த 10 மாதங்களாக வேலையிழந்திருக்கின்றனர் என்கிறார் ஹெச்எம்எஸ் தொழிற்சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ராஜாமணி.
என்டிசி பஞ்சாலைகளில் 2,100 நிரந்தரத் தொழிலாளர்களும், 1,500 ஒப்பந்தத் தொழிலாளர்களும் உள்ளனர்.
இவர்களில் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு தற்போது வரை பாதி ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஊதியம் இல்லாமலும், இனி ஆலைகள் திறக்கப்படுமா என்ற கேள்விக்குறியுடனும் கிடைத்த வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆலைகள் திறப்பு குறித்து முடிவு எடுப்பதற்கு இயக்குநர்களே இல்லாத நிலைதான் கடந்த சில வாரங்கள் வரை இருந்தது. தற்போது 2 இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஓடாத மில்கள் குறித்து ஆய்வு செய்வதற்கு தனியாக குழு அமைத்திருப்பதாகக் கூறியிருக்கின்றனர். கமிட்டியின் தொழில்நுட்ப ஆய்வறிக்கையின் அடிப்படையில் ஆலைகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று எண்ணுகிறோம்.
என்டிசி ஆலைகளில் உள்ள பழைமையான கருவிகளை அகற்றிவிட்டு நவீன இயந்திரங்களை பொருத்துவதன் மூலமும், ராணுவம், காவல் துறை உள்ளிட்ட சீருடைப் பணியாளர்களின் துறைகளுக்கு தேவையான துணிகளை என்டிசியிடம் கொள்முதல் செய்வதன் மூலமும் ஆலையை லாபத்தில் செயல்படுத்த முடியும் என்கிறார் அவர்.
என்டிசி ஆலைகளுக்கான பஞ்சு இந்திய பருத்தி கழகத்திடம் இருந்துதான் கிடைக்கிறது. இந்த இரு நிறுவனங்களும் மத்திய ஜவுளித் துறை என்ற ஒரே அமைச்சகத்தின் கீழ்தான் இருக்கின்றன. என்டிசியின் நிலைமையைப் பார்த்து, அதற்கு பஞ்சை கடனாக வழங்க முடியாது என்று பருத்திக் கழகம் கூறியிருப்பது, இன்றைய பொதுத் துறை நிறுவனங்களின் பரிதாபகரமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்கின்றனர் தொழிற்சங்கத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.