முகப்பு
வணிகம்

வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 280 புள்ளிகள் உயர்வு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை தள்ளாட்டத்திற்கிடையே பங்குச் சந்தை இறுதியில் நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான

Updated On : 22 ஜூலை, 2025 at 9:49 AM
பகிர்:

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை தள்ளாட்டத்திற்கிடையே பங்குச் சந்தை இறுதியில் நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 280.15 புள்ளிகள் உயர்ந்து 50,000 புள்ளிகளைக் கடந்து நிலைபெற்றது.
 உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்த நிலையில், வங்கிப் பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பங்குச் சந்தை ஏற்றம் பெற்றது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சந்தை மதிப்பு ரூ.1.38 லட்சம் கோடி உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,173 பங்குகளில் 1,668 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,292 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 213 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 166 பங்குகள் வெகுவாக உயர்ந்து புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 52பங்குகள் வெகுவாகக் குறைந்து புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 315 பங்குகள் வெகுவாக ஏற்றம் பெற்று உயர்ந்தபட்ச உறைநிலையையும், 263 பங்குகள் வெகுவாகக் குறைந்து குறைந்தபட்ச உறைநிலையையும் அடைந்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.38 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக இறுதியில் ரூ.205.37 லட்சம் கோடியாக இருந்தது.
 தள்ளாட்டம்: காலையில் சென்செக்ஸ் 104.92 புள்ளிகள் கூடுதலுடன் 49,876.21-இல் தொடங்கி 40,661.92 வரை கீழே சென்றது. அதிகபட்சமாக 50,264.65 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 280.15 புள்ளிகள் (0.56 சதவீதம்) கூடுதலுடன் 50,051.44-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் ஏற்ற, இறக்கத்தில் இருந்தது.
 அல்ட்ரா டெக் சிமெண்ட் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 17 பங்குகள் ஆதாயம் பெற்றன. 13 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதில் அல்ட்ரா டெக் சிமெண்ட் 3.06 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்தத இன்டஸ் இண்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், டைட்டன், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ, ரிலையன்ஸ், மாருதி சுஸுகி ஆகியவை 1 முதல் 2.30 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், ஹெச்சிஎல் டெக் ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
 ஓஎன்சிஜி சரிவு: அதேசமயம், ஓஎன்ஜிசி 2.28 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பவர் கிரிட், ஐடிசி, என்டிபிசி, எம் அண்ட் எம், எச்டிஎஃப்சி ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், ஹிந்துஸ்தான் யுனிலீவர், கோட்டக் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
 தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,027 பங்குகள் ஆதாயம் பெற்றன. 701 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. நிஃப்டி 78.35 புள்ளிகள் (0.53 சதவீதம்) உயர்ந்து 14,814.75-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது 14,707.00 வரை கீழே சென்ற நிஃப்டி, பின்னர் 14,878.60 வரை உயர்ந்தது.
 நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில், 27 பங்குகள் ஏற்றம் பெற்றன. 23 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதில் நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 2.91 சதவீதம் உயர்ந்தது. இதற்கு அடுத்ததாக நிஃப்டி பேங்க் மற்றும் பிரைவேட் பேங்க் 1.73 சதவீதம், ரியால்ட்டி 1. 05 சதவீதம் உயர்ந்தன. ஆனால், எஃப்எம்சிஜி, மெட்டல், மீடியா குறியீடுகள் 0.30 முதல் 0.70 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments