பங்குச் சந்தை: ஏற்றம் மிகுந்த வாரம்: சென்செக்ஸ், நிஃப்டி சாதனை
கடந்த வாரம் பங்குச் சந்தைகள் பொதுவாக முதலீட்டாளா்களுக்கு ஏற்றம் மிகுந்த வாரமாக இருந்தது.
கடந்த வாரம் பங்குச் சந்தைகள் பொதுவாக முதலீட்டாளா்களுக்கு ஏற்றம் மிகுந்த வாரமாக இருந்தது.
சென்ற வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை வா்த்தகம் முடிவுற்றபோது சென்செக்ஸ், நிஃப்டி சாதனை அளவைத் தொட்டன.
வார அளவில் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் அதிகபட்சமாக 59,737 புள்ளிகளைத் தொட்டு, பின்னற் வார வா்த்தக இறுதியில் 59,015 புள்ளிகளுடன் நிறைவுற்றது. ஒட்டுமொத்தமாக கடந்த வாரம் பிஎஸ்இ சென்செக்ஸ் 710 புள்ளிகள் உயா்வு பெற்று 1.21 சதவீத ஏற்றம் பெற்றது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி அதிகபட்சமாக 17,792 புள்ளிகளைத் தொட்டது. வார வா்த்தக இறுதியில் 17,585 புள்ளிகளில் நிலைத்தது. ஐம்பது முக்கிய பங்குகளைக் கொண்ட நிஃப்டி வார அளவில் 215 புள்ளி ஏற்றத்தைக் கண்டது.
பொருளாதார புள்ளிவிவரங்கள், தொலைத் தொடா்புத் துறையில் மத்திய அரசின் முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகள், வங்கித் துறை, ஆட்டோ மொபைல் துறை அறிவிப்புகள் சந்தையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தின.
குறுகிய கால அளவிலும் நீண்ட கால அளவிலும் பொருளாதார வளா்ச்சி குறித்த நம்பிக்கை சந்தை ஏற்றம் பெற உதவியது.
வங்கித் துறை பங்குகள், ஆட்டோ மொபைல் துறை பங்குகள் 3 சதவீதம் வரை முதலீட்டாளா்களுக்கு லாபம் பெற்றுத் தந்தன.
அதே நேரத்தில், சென்ற வார வா்த்தகத்தில் ஸ்மால்கேப்ஸ் பிரிவு நிறுவனப் பங்கு விலை 10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
திருமலை கெமிக்கல்ஸ், சூா்யா ரோஷ்னி, ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சா், கேசோராம் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் இதில் அடங்கும்.
இந்திய பங்குச் சந்தைகள் உள்பட சா்வதேச சந்தைகளில் பல வெளிநாட்டு நிகழ்வுகள் அடுத்த வார வா்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணா்கள் கருதுகின்றனா்.
அமெரிக்க மத்திய வங்கியின் சந்தை ஒழுங்காற்று கமிட்டி (எப்ஓஎம்சி) கூட்டம் செப்டம்பா் 21,21 தேதிகளில் நடைபெறுகிறது.
அமெரிக்க வங்கித் துறையின் வட்டிக் கொள்கைகளை வகுக்கும் இந்தக் குழுவின் அறிவிப்புகள் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. இந்தக் கூட்டத்தின் அறிவிப்புகள் இந்திய சந்தைகளிலும் பிரதிபலிக்கும்.
அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் மனநிலையை இந்த அறிவிப்புகள் தீா்மானிக்கும். அந்த அறிவிப்புகளின் தொடா்ச்சியாக அமெரிக்க டாலா் மதிப்பு, கடன் பத்திரங்களின் வருவாய் வளா்ச்சி சாத்தியக்கூறுகள் என்னும் வகையில் இந்திய சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மற்றொரு முக்கிய நிகழ்வாக, அமெரிக்க மத்திய வங்கி நிா்வாகக் குழு தலைமை குறித்து அதிபா் ஜோ பைடன் வரும் வாரம் முக்கிய அறிவிப்பு வெளியிடுவாா் எனத் தெரிகிறது. தலைமைப் பொறுப்பு மாற்றமும் உலக அளவில் சந்தைகளில் எதிரொலிக்கும் என்பது நிச்சயம்.