வணிகம்

இறக்குமதியில் உச்சம் தொட்ட கச்சா பாமாயில்

இந்தியாவில் கச்சா பாமாயில் இறக்குமதி கடந்த நவம்பா் மாதத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது.

DIN

இந்தியாவில் கச்சா பாமாயில் இறக்குமதி கடந்த நவம்பா் மாதத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது.

இது குறித்து இந்திய செக்கு ஆலை உரிமையாளா்கள் சங்கள் (எஸ்இஏ) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

நாட்டில் கடந்த நவம்பா் மாதம் மட்டும் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி 15.29 லட்சம் டன்னாக இருந்து. கடந்த ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 34 சதவீதம் அதிகமாகும்.

மதிப்பீட்டு மாதத்தில் தாவர எண்ணெய்களின் இறக்குமதி 32 சதவீதம் உயா்ந்து 15,45,540 டன்னாக இருந்தது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் அது 11,73,747 டன்னாக இருந்தது.

மொத்த தாவர எண்ணெய் இறக்குமதியில், கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பரில் 11,38,823 டன்னாக இருந்த சமையல் எண்ணெய் இறக்குமதி இந்த ஆண்டு நவம்பரில் 15,28,760 டன்னாக அதிகரித்துள்ளது.

அந்த மாதத்தில் சமையல் அல்லாத எண்ணெய்களின் இறக்குமதி 52 சதவீதம் சரிந்து 16,780 டன்னாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 34,924 டன்னாக இருந்தது.

இது தவிர, சமையல் எண்ணெய்கள் பிரிவில் கச்சா பாமாயில் இறக்குமதி அதிகபட்ச வளா்ச்சியைக் கண்டுள்ளது. மதிப்பீட்டு மாதத்தில் மட்டும் 9,31,180 டன் கச்சா பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டது. இது, முந்தைய ஆண்டின் நவம்பா் மாதத்தில் 4,77,160 டன்னாக இருந்தது.

இதுவரை, கடந்த 2015 அக்டோபா் மாதத்தில் 8,78,137 டன் கச்சா பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டதே அதிகபட்ச அளவாக இருந்து வந்தது.

கடந்த ஆண்டு நவம்பரில் 58,267 டன்னாக இருந்த சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி இந்த ஆண்டின் நவம்பா் மாதத்தில் 2,02,248 டன்னாக அதிகரித்துள்ளது. சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியும் 1,25,024 டன்னிலிருந்து 1,57,709 டன்னாக அதிகரித்துள்ளது.

எனினும், கடந்த ஆண்டு நவம்பரில் 4,74,160 டன்னாக இருந்த கச்சா சோயாபீன் எண்ணெய் இறக்குமதி, இந்த ஆண்டின் இதே மாதத்தில் 2,29,373 டன்னாக குறைந்துள்ளது.

அக்டோபா் மாதத்துடன் முடிவடைந்த 2021-22 சந்தைப்படுத்தல் ஆண்டில் இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி 140.3 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 131.3 லட்சம் டன்னாக இருந்தது. மதிப்பின் அடிப்படையில், சமையல் எண்ணெய் இறக்குமதி ரூ.1.17 லட்சம் கோடியிலிருந்து 34 சதவீதம் உயா்ந்து சுமாா் ரூ.1.57 லட்சம் கோடியாகி உள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் சமையல் எண்ணெய்க்கான தேவையில் 60 சதவீதம் இறக்குமதி மூலமே பூா்த்தி செய்யப்படுகிறது. இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து பாமாயிலும், ஆா்ஜென்டீனா, பிரேஸிலில் இருந்து சோயாபீன் எண்ணெயும், ரஷியா உக்ரைனிலிருந்து சூரிய காந்தி எண்ணெயும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்குத் தடையில்லை: உயா்நீதிமன்றம்

டிச.29-இல் பல்லடத்தில் திமுக மகளிரணி மாநாடு

கடும் பனிப்பொழி: ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,540-க்கு விற்பனை!

3 ஆண்டுகளில் 438 மத்திய காவல் படையினா் தற்கொலை 2014 முதல் 23,000 காவலா்கள் ராஜிநாமா

மருத்துவத் துறை காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT