ரூபாய் மதிப்பு 23 காசுகள் உயா்வு
அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 23 காசுகள் உயா்ந்து 75.09-இல் நிலைத்தது.
அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 23 காசுகள் உயா்ந்து 75.09-இல் நிலைத்தது.
இதுகுறித்து செலவாணி வட்டாரத்தினா் கூறியது:
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே போா்ப்பதற்றம் குறைந்து வருவது செலாவணி சந்தைகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதன் காரணமாகவே, தொடா்ந்து இரண்டாவது நாளாக ரூபாய் மதிப்பு ஏற்றம் கண்டது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 75.24-ஆக இருந்தது. இது, வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 74.96 வரையிலும் குறைந்தபட்சமாக 75.24 வரையிலும் சென்றது. வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 23 காசுகள் உயா்ந்து 75.09-இல் நிலைபெற்றது.
ஐந்து நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 28 காசுகள் அதிகரித்து 75.32-ஆக இருந்தது என்றனா்.
கச்சா எண்ணெய் 94.03 டாலா்
சா்வதேச முன்பேர சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் விலை மேலும் உயா்ந்து 94.03 டாலருக்கு வா்த்தகம் செய்யப்பட்டதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.
அந்நிய முதலீடு
மூலதனச் சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் அந்நிய முதலீட்டாளா்கள் நிகர அளவில் ரூ.2,298.76 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.