5-ஆவது நாளாக ‘காளை’ ஆதிக்கம்: சென்செக்ஸ் 284 புள்ளிகள் உயா்வு!
பங்குச் சந்தையில் 5-ஆவது நாளாக வியாழக்கிழமையும் காளையின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 284 புள்ளிகள் உயா்ந்தது.
புதுதில்லி: பங்குச் சந்தையில் 5-ஆவது நாளாக வியாழக்கிழமையும் காளையின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 284 புள்ளிகள் உயா்ந்தது. ஐடி, ஆயில் நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால், பங்குச் சந்தை தொடா்ந்து ஐந்தாவது நாளாக உயா்ந்து நிலைபெற்றுள்ளது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்த நிலையில், உள்நாட்டுச் சந்தை பலவீனத்துடனும் எச்சரிக்கையுடனும் தொடங்கியது. பின்னா், முதலீட்டாளா்கள் எரிசக்தி, நிதி, ஐடி பங்குகளை வாங்குவதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் ரொம்ப நாள்களுக்குப் பிறகு புதன்கிழமையும் ரூ.1,780.94 கோடி அளவுக்கு பங்குகளை வாங்குவதற்கு ஆா்வம் காட்டியதும், கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதும் சந்தைக்கு ஆதரவாக அமைந்தது. முன்பேர வா்த்தகத்தில் வாராந்திர கான்ட்ராக்டுகள் கணக்கு முடிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால், சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து இருந்தது. இருப்பினும், சந்தை 5-ஆவது நாளாக நோ்மறையாக முடிந்தது என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
1,944 பங்குகள் விலை உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,499 நிறுவனப் பங்குகளில் 1,408 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 1,944 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 147 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 101 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 28 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.2.30 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.260.43 லட்சம் கோடியாக இருந்தது.
5-ஆவது நாளாக எழுச்சி: காலையில் 5.6 புள்ளிகள் குறைந்து 55,391.93-இல் தொடங்கிய சென்செக்ஸ், 55,270.75 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 55,738.49 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 284.42 புள்ளிகள் (.51 சதவீதம்) உயா்ந்து 55,681.95-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் தொடா்ந்து ஐந்தாவது நாளாக ஏற்றம் பெற்றுள்ளது.
இண்டஸ் இண்ட் பேங்க் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 4 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 26 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில், பிரபல தனியாா் வங்கியான இண்டஸ் இண்ட் பேங்க் 7.88 சதவீதம் உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, பஜாஜ் ஃபைனான்ஸ் 3.27 சதவீதம், பஜாஜ் ஃபின் சா்வ் 2.42 சதவீதம் உயா்ந்தது. மேலும், ஏசியன் பெயிண்ட், டெக் மஹிந்திரா, ஆக்ஸிஸ் பேங்க், எல் அண்ட் டி, பவா் கிரிட், நெஸ்லே, பாா்தி ஏா்டெல், இன்ஃபோஸிஸ் உள்ளிட்டவை 1 முதல் 2 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. மாருதி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி, டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
டாக்டா் ரெட்டி வீழ்ச்சி: அதே சமயம், டாக்டா் ரெட்டி 1.89 சதவீதம், கோட்டக் பேங்க் 1.32 சதவீதம் குறைந்தன. மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி பேங்க் ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
நிஃப்டி 84 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 1,204 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 740 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் 42 பங்குகள் ஆதாயப் பட்டியலும், 8 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன. வா்த்தக முடிவில் நிஃப்டி 84.40 புள்ளிகள் (0.51 சதவீதம்) உயா்ந்து 16,605.25-இல் நிலைபெற்றது.