2 நாள் எழுச்சிக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 152 புள்ளிகள் வீழ்ச்சி
தொடர்ந்து 2 நாள்களாக ஏறுமுகத்தில் இருந்த பங்குச் சந்தை, புதன்கிழமை எதிர்மறையாக முடிந்தது.
தொடர்ந்து 2 நாள்களாக ஏறுமுகத்தில் இருந்த பங்குச் சந்தை, புதன்கிழமை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 152 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 45.80 புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைந்து 18,157.00-இல் முடிவடைந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் எதிர்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. இருப்பினும், தொடக்கத்தில் பெற்ற லாபம் அனைத்தும் பிற்பகலில் இழக்கும் நிலை ஏற்பட்டது. இருப்பினும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருவதும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்துவதும் இழப்பு பெரிய அளவில் இல்லாமல் தவிர்க்கப்பட்டதாக பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, தேசிய பங்குச் சந்தையில் பேங்க் நிஃப்டி குறியீடு 41,948.90 என்ற புதிய உச்சத்தில் நிலை பெற்றுள்ளது.
152 புள்ளிகள் சரிவு: சென்செக்ஸ் காலையில் 119.14 புள்ளிகள் கூடுதலுடன் 61,304.29-இல் தொடங்கி அதிகபட்சமாக 61,447.23 வரை மேலே சென்றது. பின்னர், லாபப் பதிவு காரணமாக 60,905.15 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 151.60 புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைந்து 61,033.55-இல் முடிவடைந்தது. 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 8 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 22 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
ஐடிசி முன்னேற்றம்: நுகர்பொருள் உற்பத்தி நிறுவனமான ஐடிசி 1.99 சதவீதம், டாக்டர் ரெட்டி 1.22சதவீதம் வரை உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், கோட்டக் பேங்க், ஹெச்சிஎல் டெக், இண்டஸ் இண்ட் பேங்க், எஸ்பிஐ, இன்ஃபோஸிஸ், ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்டவை சிறிதளவு உயர்ந்து ஆதாயப் பட்டியலில் வந்தன.
பவர் கிரிட் கடும் சரிவு: அதே சமயம், பொதுத் துறை மின் நிறுவனமான பவர் கிரிட் 4.06 சதவீதம், டெக் மஹிந்திரா 2.32 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, சன்பார்மா, பஜாஜ் ஃபின் சர்வ், என்டிபிசி, எம் அண்ட் எம், அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்ளிட்டவை 1 முதல் 1.50 சதவீதம் வரை குறைந்தன. மேலும், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, விப்ரோ, ஐசிஐசிஐ பேங்க், மாருதி சுஸýகி, டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.
இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.73 ஆயிரம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.2 84.01 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) கடந்த திங்கள்கிழமை ரூ.1,948.51 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.