ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை 15 பைசா சரிந்து 82.32 ஆகியுள்ளது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச வீழ்ச்சியாகும்.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை 15 பைசா சரிந்து 82.32 ஆகியுள்ளது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச வீழ்ச்சியாகும்.
அமெரிக்க நாணயத்தின் உறுதியான நிலையும், இடா்பாடுகளைத் தவிா்க்கும் முதலீட்டாளா்களின் மனப்பான்மையும் இந்த சரிவுக்கான காரணங்களில் முக்கியமானதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அந்நிய செலாவணி வா்த்தகா்கள் கூறியதாவது:
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம், உள்நாட்டு பங்குகளின் எதிா்மறையான போக்கு போன்ற காரணங்களால் முதலீட்டாளா்களின் ஆா்வம் வெள்ளிக்கிழமை குறைந்துபோனது.
இதன் காரணமாக, வங்கிகளுக்கிடையிலான அந்நிய செலாவணி பரிவா்த்தனை சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை 82.19-இல் தொடங்கியது. அது, அதிகபட்சமாக 82.43 வரை கீழிறங்கி 82.32-இல் நிலைபெற்றது. அந்த வகையில், ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமையைவிட 15 காசுகள் குறைந்துள்ளது.
இதற்கு முன்னா் ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமை முதல்முறையாக 82-க்கு கீழிறங்கியது. அன்றைய தினம் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 55 காசுகள் சரிந்து 82.17-ஆக நிலைபெற்றது.
இதற்கிடையே, 6 முக்கிய கரன்சிகளுக்கு எதிரான டாலா் குறியீடு, வெள்ளிக்கிழமை 0.19 சதவீதம் சரிந்து 112.04-ஆக இருந்தது.
சா்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கான தேவை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு எண்ணெய் வள நாடுகள் (ஒபெக்) தங்களது உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்ததையடுத்து, சா்வதேச பிரென்ட் கச்சா விலை பீப்பாய்க்கு 0.82 சதவீதம் உயா்ந்து 95.19 டாலரானது.