இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தையில் "கரடி' ஆதிக்கம் கொண்டதால் தொடர்ந்து 8-ஆவது நாளாக எதிர்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 326 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 88.75 புள்ளிகள் (0.51 சதவீதம்) குறைந்து 17,303.95-இல் நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. காலையில் உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கியது. ஆனால், ஆயில் அண்ட் காஸ், பார்மா, வங்கிப் பங்குகள் அதிகம் விற்பனைக்கு வந்த நிலையில், கரடியின் பிடி இறுகியது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.16 ஆயிரம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.257.72 லட்சம் கோடியாக குறைந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) திங்களன்று ரூ.2,022.52 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் தொடர் சரிவு:
சென்செக்ஸ் காலையில் 58.26 புள்ளிகள் கூடுதலுடன் 59,346.61-இல் தொடங்கி அதிகபட்சமாக 59,483.72 வரை மேலே சென்றது. பின்னர், 58,795.97 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 326.23 புள்ளிகள் (0.55 சதவீதம்) குறைந்து 58,962.12-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 9 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. 21 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.
ஏசியன் பெயிண்ட் முன்னேற்றம்: பிரபல பெயிண்ட் உற்பத்தி நிறுவனமான ஏசியன் பெயிண்ட் 2.90 சதவீதம், பவர் கிரிட் 1.32 சதவீதம், அல்ட்ரா டெக் சிமெண்ட் 1.05 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், எம் அண்ட் எம், டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், கோட்டக் பேங்க், நெஸ்லே உள்ளிட்டவையும் விலை உயர்ந்த பட்டியலில் வந்தன.
டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் சரிவு: அதே சமயம், பிரபல ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் இரண்டாவது நாளாக 2.03 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, ரிலையன்ஸ், பஜாஜ் ஃபின் சர்வ், இன்ஃபோஸிஸ், ஐடிசி, பார்தி ஏர்டெல், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், டைட்டன், டெக் மஹிந்திரா, என்டிபிசி, எஸ்பிஐ உள்ளிட்டவையும் 1 முதல் 2 சதவீதம் வரை குறைந்தன. மேலும், முன்னணி ஐடி நிறுவனங்களான விப்ரோ, ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ் மற்றும் இண்டஸ் இண்ட் பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவர், எல் அண்ட் டி, மாருதி உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.
மூன்றரை ஆண்டுகளில் நீண்ட இழப்பு நாள்கள் பதிவு
முக்கியக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து எட்டாவது அமர்விலும் சரிவைச் சந்தித்துள்ளது. வளர்ந்த பொருளாதாரங்களின் வட்டி விகித உயர்வுகள் பற்றிய கவலைகள் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடுகளை வாபஸ் பெற்று வருவது சந்தைக்கு பாதகமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக சந்தை செவ்வாயன்று கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவாக அதிக நாள்கள் (8 நாள்கள்) தொடர் இழப்பைப் பதிவு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.