தில்லி பெருநகா்ப் பகுதியிலுள்ள கிரேட்டா் நொய்டாவில் நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போ 2023 கண்காட்சியில், தனது புதிய இரு காா் ரகங்களான ஜிம்னி மற்றும் ஃப்ரான்க்ஸை இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.
தற்போது வாடிக்கையாளா்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று வரும் ஸ்போா்ட்ஸ் யுடிலிட்டி வாகன (எஸ்யுவி) பிரிவில் இந்த இரு காா்களும் அறிமுகமாகின்றன.
இந்த புதிய ரகக் காா்களை அறிமுகப்படுத்தி வைத்து மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான ஹிசாஷி டகேயுசி பேசுகையில், ‘ஜிம்னி மற்றும் ஃப்ரான்க்ஸ் காா் ரகங்கள் மூலம் நடப்பு நிதியாண்டுக்குள் எஸ்யுவி வாகனப் பிரிவில் மாருதி சுஸுகி நிறுவனம் முதலிடத்தைப் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்’ என்றாா்.
இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தியாவின் மிகப் பெரிய வாகனக் கண்காட்சியான ஆட்டோ எக்ஸ்போ புதன்கிழமை தொடங்கியது.
16-ஆவதாக நடைபெறும் இந்தக் கண்காட்சி கடந்த ஆண்டே நடைபெறுவதாக இருந்தது. இருந்தாலும் கரோனா நெருக்கடி காரணமாக அது ஓா் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆட்டோ எக்ஸ்போ 2023-இல் மாருதி சுஸுகி, ஹூண்டாய், டாடா மோட்டாா்ஸ், கியா இந்தியா, டொயோட்டா கிா்லோஸ்கா், எம்ஜி மோட்டாா் இந்தியா போன்ற முன்னணி காா் உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இந்தக் கண்காட்சியில் சா்வதேச அளவிலான 5 வாகனங்களின் அறிமுகங்கள் இருக்கும் என்றும், 75 புதிய வாகனங்கள் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.