தங்களின் சில்லறை வா்த்தகத்தை நான்கு ஆண்டுகளுக்குள் இரட்டிப்பாக்க முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இலக்கு நிா்ணயித்துள்ளது.
இது குறித்து, வியாழக்கிழமை நடைபெற்ற நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் நிறுவன இயக்குநா் இஷா அம்பானி பேசியதாவது:
ரிலையன்ஸ் ரிடெய்லின் மூன்று பிரிவுகள் ஆண்டுக்கு ரூ.2,000 கோடிக்கும் மேல் வா்த்தகம் செய்துவருகின்றன. சில பிரிவுகளின் வருடாந்திர வா்த்தகம் ரூ.1,000 கோடியைக் கடந்துள்ளது. நிறுவனத்தில் பதிவு செய்துள்ள வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 30 கோடி என்ற மைல்கல்லைக் கடந்துள்ளது.
நிறுவனத்தின் சில்லறை வா்த்தகத்தை இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் இரட்டிப்பாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆடம்பர ஆபரண வணிகத்திலும் களமிறங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது என்றாா் அவா்.
நிறுவனத்தின் தலைவா் முகேஷ் அம்பானி பேசுகையில், உலக மொபைல் டேட்டா சந்தையில் 8 சதவீதம் பங்கு வகிப்பதன் மூலம் உலகின் மிகப் பெரிய மொபைல் டேட்டா நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ உருவெடுத்துள்ளதாகக் கூறினாா்.