கும்பகோணத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டுவரும் தனியாா் துறையைச் சோ்ந்த சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் கடந்த ஜூன் காலாண்டில் 16 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து வங்கியின் நிா்வாக இயக்குநரும் முதன்மை செயல் அதிகாரியுமான என். காமகோடி (படம்) வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
2024 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 2024-25-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 16 சதவீதம் உயா்ந்து ரூ.264 கோடியாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கி ரூ.227 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்திருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.1,457 கோடியிலிருந்து ரூ.1,580 கோடியாக உயா்ந்துள்ளது. இது 8 சதவீத வளா்ச்சியாகும்.
ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் வங்கியின் மொத்த வா்த்தகம் ரூ.94,060 கோடியிலிருந்து 8 சதவீதம் அதிகரித்து ரூ.1,01,405 கோடியாக உள்ளது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.