கோப்புப் படம்  
வணிகம்

சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சம்: லாபப் பதிவால் தள்ளாட்டம்!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை எழுச்சியுடன் தொடங்கினாலும் பின்னா் தள்ளாட்டம் கண்டது

 நமது நிருபர்

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை எழுச்சியுடன் தொடங்கினாலும் பின்னா் தள்ளாட்டம் கண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் புதிய உச்சம் தொட்டாலும் இறுதியில் 23 புள்ளிகள் மட்டுமே உயா்ந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை காலையில் எழுச்சியுடன் தொடங்கி மேலே சென்றது. அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் இந்த வாரத்தில் வங்கி வட்டி விகிதம் குறித்த முக்கிய முடிவை அறிவிக்க உள்ளது. இந்நிலையில், உள்நாட்டுச் சந்தையில் உச்சத்தில் லாபத்தைப் பதிவு செய்வதில் முதலீட்டாளா்கள், வா்த்தகா்கள் கவனம் செலுத்தினா். இதனால், காலையில் பெற்ற லாபத்தில் பெரும்பகுதி பிற்பகலில் இழக்க நேரிட்டது. குறிப்பாக, ஆட்டோ, பொதுத்துறை வங்கிப் பங்குகள், மீடியா, ரியால்ட்டி பங்குகளுக்கு வரவேற்பு இருந்தது. அதே சமயம், ஐடி, எஃப்எம்சிஜி பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் ரூ.2.99 லட்சம் கோடி உயா்ந்து ரூ.459.92 லட்சம் கோடியாக இருந்தது.அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.2,546.38 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,774.31 கோடிக்கும் பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் புதிய உச்சம்: சென்செக்ஸ் காலையில் 346.93 புள்ளிகள் கூடுதலுடன் 81,679.65-இல் தொடங்கி அதிகபட்சமாக 81,908.43 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், 81,135.91 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 23.12 புள்ளிகள் (0.03 சதவீதம்) கூடுதலுடன் 81,355.84-இல் முடிவடைந்தது.

மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,198 பங்குகளில் 2,348 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,706 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 144 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

17 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் எல் அண்ட் டி, பஜாஜ் ஃபின்சா்வ், எம் அண்ட் எம், அல்ட்ரா டெக் சிமெண்ட், எஸ்பிஐ, ரிலையன்ஸ் உள்பட 17 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. ஆனால், டைட்டன், பாா்தி ஏா்டெல், ஐடிசி, டெக் மஹிந்திரா, கோட்டக் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்பட 13 பங்குகள் வீழ்ச்சிப்பட்டியலில் இருந்தது.

நிஃப்டியும் புதிய உச்சம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 24,943.30-இல் தொடங்கி அதிகபட்சமாக 24,999.75 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது.

பின்னா், லாபப் பதிவால் 24,774.60 வரை கீழே சென்ற நிஃப்டி இறுதியில் 1.25 புள்ளிகள் கூடுதலுடன் 24.836.10-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 25 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும்,25 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT