முகப்பு
வணிகம்

சரிவிலிருந்து மீண்டு சாதனை படைத்த சென்செக்ஸ், நிஃப்டி!

ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு பின் சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சம்!

Updated On : 7 ஜூன், 2024 at 11:45 AM
பகிர்:

இந்திய ரிசர்வ் வங்கியானது 2024-25 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கணிப்பை 7 சதவிகிதத்திலிருந்து 7.2 சதவிகிதமாக உயர்த்தியதையடுத்து, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று 2 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்து சாதனை படைத்தது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,618.85 புள்ளிகள் உயர்ந்து 76,693.36 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 468.75 புள்ளிகள் உயர்ந்து 23,290.15 நிலைபெற்றது.

ஐடி, வங்கி, ரியாலிட்டி மற்றும் ஆட்டோ துறை பங்குகள் லாபத்துடன் இன்று முடிவடைந்தன. வலுவான பொருளாதார வளர்ச்சியின் மத்தியில் பணவீக்கத்தில் கவனம் செலுத்தி, ரிசர்வ் வங்கி இன்று அதன் வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருப்பதாக அறிவித்தது.

ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான இந்திய பொருளாதாரம், முந்தைய ஆண்டில் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கணிப்பை மார்ச் 2025 வரை 7 சதவிகிதத்திலிருந்து 7.2 சதவிகிதமாக உயர்த்தியது. அதே நேரத்தில் பணவீக்க கணிப்பை 4.5 சதவிகிதமாக பராமரித்ததுள்ளது.

மஹிந்திரா & மஹிந்திரா, விப்ரோ, டெக் மஹிந்திரா, பார்தி ஏர்டெல், இன்போசிஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின.

டோக்கியோ, ஹாங்காங் மற்றும் ஐரோப்பிய சந்தைகளும் பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க சந்தைகள் வியாழக்கிழமையன்று ஏற்ற - இறக்கத்தில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.04 சதவிகிதம் உயர்ந்து 79.95 அமெரிக்க டாலராக உயர்ந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இன்று ரூ.6,867.72 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →