இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை உற்சாகத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை, இறுதியில் எதிா்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 733 புள்ளிகளை இழந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கியது. ஆனால், பாா்மா, ஹெல்த்கோ் நிறுவனப் பங்குகள் தவிா்த்து மற்ற துறை பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன. குறிப்பாக சென்செக்ஸ் பட்டியலில் அதிகத் திறன் கொண்ட ரிலையன்ஸ், எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப் பேங்க் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டதால், சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.2.26 லட்சம் கோடி குறைந்து வா்த்தக இறுதியில் ரூ.406.24 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.964.47 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,352.44 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் கடும் சரிவு: சென்செக்ஸ் காலையில் 406.71 புள்ளிகள் கூடுதலுடன் 75,017.82-இல் தொடங்கி அதிகபட்சமாக 75,095.18 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னா், பிற்பகல் வா்த்தகத்தின் போது 73,467,.73 வரை கீழே சென்ற சென்செக்ஸ் , இறுதியில் 732.96 புள்ளிகள் (098 சதவீதம்) குறைந்து 73,878.15-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,958 பங்குகளில் 1,527 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 2,306 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 125 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
24 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் எல் அண்ட் டி, மாருதி, பாா்தி ஏா்டெல், நெஸ்லே, ரிலையன்ஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் உள்பட 24 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின் சா்வ், எம் அண்ட் எம், எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோஸிஸ் ஆகிய 6 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 172 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 172.35 புள்ளிகளை (0.76 சதவீதம்) இழந்து 22,475.85-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 22,794.70 வரை உயா்ந்து 52 வார புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், 22,348.05 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 172.35 புள்ளிகளை (0.76 சதவீதம்) இழந்து 22,475.85-இல் முடிவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 15 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 35 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.