முகப்பு
வணிகம்

5வது நாளாகத் தொடர் சரிவு! ஆட்டோ, மெட்டல் துறை வீழ்ச்சி!

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்செக்ஸ் 5%, நிஃப்டி 6% வரையும் சரிந்தன.

Updated On : 13 நவம்பர், 2024 at 12:41 PM
கோப்புப் படம்
பகிர்:

இந்திய பங்குச் சந்தை வணிகம் தொடர்ந்து 5வது நாளாகச் சரிவுடன் முடிந்தது. நேற்றைய வணிகம் சரிவுடன் முடிந்த நிலையில், இன்றும் சென்செக்ஸ் 860 புள்ளிகள் வரையிலும் நிஃப்டி 23,600 புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது.

பெரும்பாலான துறைகள் சரிவுடன் இருந்த நிலையில், குறிப்பாக ஆட்டோ, மெட்டல், ரியாலிட்டி, பவர் மீடியா துறை பங்குகள் 2 - 3 சதவீதம் வரை சரிவைக் கண்டன.

தேசிய பங்குச்சந்தையின் கீழ் உள்ள நடுத்தர மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 2 - 3 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 984.23 புள்ளிகள் சரிந்து 77,690.95 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 1.25% சரிவாகும்.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 324.40 புள்ளிகள் சரிந்து 23,559.05 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 1.36% சரிவாகும்.

சரிவுடன் தொடங்கி சரிவுடன் முடிவு

வணிக நேரத் தொடக்கத்தில் சரிவுடன் தொடங்கிய சென்செக்ஸ், 78,690.02 என்ற இன்றைய உச்சத்தை பதிவு செய்தது. எனினும் பிற்பாதியில் சரியத் தொடங்கி, அதிகபட்சமாக 77,533.30 புள்ளிகள் வரை சரிந்தது. வணிக நேர முடிவில் 984 புள்ளிகள் சரிந்து 77,690 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 3 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய 27 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் இருந்தன.

அதிகபட்சமாக என்டிபிசி 0.28%, டாடா மோட்டார்ஸ் 0.18%, ஹிந்துஸ்தான் யூனிலிவர்ஸ் 0.15% உயர்வுடன் காணப்பட்டன.

எனினும் அதிகபட்சமாக டாடா ஸ்டீல் நிறுவனப் பங்குகள் -3.47% சரிந்திருந்தன. இதற்கு அடுத்தபடியாக எம்&எம் -3.44%, அதானி போர்ட்ஸ் -2.88%, ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் -2.23%, எஸ்பிஐ -2.19%, இந்தஸ்இந்த் வங்கி -2.16%, எச்டிஎஃப்சி வங்கி -2.15%, கோட்டாக் வங்கி -1.95%, ரிலையன்ஸ் -1.75% ஆகியவை சரிவுடன் காணப்பட்டன.

நிஃப்டி நிலவரம்

வணிக நேரத் தொடக்கத்தில் 23,822.45 புள்ளிகளுடன் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 23,873.60 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டது. எனினும் பிற்பாதியில் படிப்படியாக சரிந்து 23,509.6 என்ற அதிகபட்ச சரிவையும் பதிவு செய்தது. முடிவில் 324 புள்ளிகள் சரிந்து 23,559 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.

நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் கே.என்.ஆர். கன்ஸ்ட்ரக்‌ஷன் 8.20%, சுவென் பார்மா 4.80%, ஜேகே லக்‌ஷ்மி சிமென்ட் 1.46%, அல்கெம் லேப்ஸ் 1.24%, ஆர்.ஆர். கபெல் 1.24%, ஹாவெல்ஸ் இந்தியா 0.67% உயர்ந்திருந்தன.

இதேபோன்று டெக்னோ எலக்ட்ரானிக்ஸ், ரத்தன் இந்தியா, ஆனந்த் ராஜ், ஜி.என்.எஃப்.சி., ஏபிபி பவர், சென்சுரி பிளே, செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ் ஆகியவை சரிவுடன் இருந்தன.

சரிவுக்கு காரணம் என்ன?

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்செக்ஸ் 5 சதவீதமும், நிஃப்டி 6 சதவீதம் வரையும் சரிந்துள்ளன.

சர்வதேச அளவிலான பங்குச் சந்தையில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாக தங்கள் பங்குகளை விற்பனை செய்து வருவதே இந்திய பங்குச் சந்தையில் வீழ்ச்சிக்கு காரணம் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →