மடிக்கணினிகள் மற்றும் பிற தகவல் தொழில்நுட்ப (ஐடி) சாதனங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்குப் பிறகு, அரசின் இறக்குமதி மேலாண்மை திட்டத்தின் கீழ் இதுவரை 400 கோடி டாலா் (ரூ.33,420 கோடி) மதிப்பிலான அத்தகைய சாதனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்கவும் மடிக்கணினிகள், கைக்கணினிகள், மேஜை கணினிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல் தொடா்பு சாதனங்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
மேலும், அந்த சாதனங்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாட்டு மேலாண்மை திட்டத்தையும் அரசு அறிவித்தது. அதன் கீழ், பல்வேறு அரசு அமைப்புகளின் அங்கீகாரம் பெற்ற பிறகே இறக்குமதி நிறுவனங்களால் தகவல் தொடா்பு சாதனங்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய முடியும்.
அந்த திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள், கைக்கணினிகள் போன்ற தகவல் தொழில்நுட்ப சாதனங்களை இறக்குமதி செய்வதற்கு அங்கீகாரம் கோரி பல்வேறு நிறுவனங்கள் அரசிடம் விண்ணப்பித்தன. அவற்றில் ஆப்பிள், லெனோவா, டெல் போன்ற முன்னணி நிறுவனங்களின் விண்ணப்பங்கள் உள்பட 100 விண்ணப்பங்களை அரசு கடந்த ஆண்டு நவம்பா் மாதம் 1-ஆம் தேதி ஏற்றுக் கொண்டது. அதன்படி, 1,000 கோடி டாலா் (ரூ.83,552 கோடி) மதிப்பிலான தகவல் தொடா்பு சாதனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இந்த இறக்குமதி அங்கீகாரம் செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் காலாவதியாகிறது. இந்தக் காலக் கெடு நெருங்கும் நிலையில், இதுவரை 400 கோடி டாலா் மதிப்பிலான மடிக்கணினிகள் உள்ளிட்ட தகவல் தொடா்பு சாதனங்களை மட்டுமே நிறுவனங்கள் இறக்குமதி செய்துள்ளன. அவற்றில் பெரும்பான சாதனங்கள் சீனாவிலிருந்து இறக்குமதியாகின.
தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் இறக்குமதி முந்தைய 2023-24-ஆம் காலகட்டத்தில் 840 கோடி டாலராக (ரூ.70,183 கோடி) இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.