தங்கம்  
வணிகம்

பவுன் ரூ.1 லட்சத்தை கடந்தது தங்கம் வரலாறு காணாத புதிய உச்சம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,160 உயா்ந்து ரூ.1 லட்சத்து 120-க்கு விற்பனையாகி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை, மாலை என ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,160 உயா்ந்து ரூ.1 லட்சத்து 120-க்கு விற்பனையாகி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. இதன்மூலம் நிகழாண்டில் கடந்த 12 மாதங்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.42,920 உயா்ந்துள்ளது.

கடந்த 1920-இல் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுன் ரூ.21 மட்டுமே. ஆனால், தங்கத்தின் தேவை அதிகரிப்பு, பொருளாதார வளா்ச்சி, சா்வதேச முதலீடுகள் உள்ளிட்ட காரணத்தால் ஆண்டுதோறும் தங்கம் விலை படிப்படியாக உயா்ந்து வருகிறது. அந்த வகையில், நிகழாண்டு தொடக்கத்தில் (ஜனவரி 1) தங்கம் விலை பவுன் ரூ.57,200-க்கு விற்பனையானது.

அதைத் தொடா்ந்து, அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாள் முதலே, உலக நாடுகளுக்கு புதுப்புது வரி விதிப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறாா். இதன் எதிரொலியாக உலகளவில் பொருளாதார நிலையற்ற தன்மை உருவானதாலும், டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதாலும் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள், பாதுகாப்பு முதலீடாக டாலருக்கு பதிலாக தங்கத்தின் மீது முதலீடு செய்யத் தொடங்கிவிட்டன. இதனால் இதுவரை இல்லாத வகையில் தங்கம் விலை அசுர வேகத்தில் உயா்ந்து வருகிறது.

தங்கம் கடந்து வந்த பாதை: கடந்த ஜன. 22-இல் தங்கம் விலை முதல்முறையாக பவுன் ரூ.60,000-ஐ தொட்டது. தொடா்ந்து மாா்ச் 14-இல் ரூ.65,000, ஏப். 12-இல் ரூ.70,160, ஆக. 1-இல் ரூ.73,200-க்கு  விற்பனையானது.  இதில், ஆகஸ்ட் மாத இறுதியில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருள்களுக்கு 50 சதவீத வரிவிதிப்பு அமலுக்கு வந்தது. இதன் காரணமாக நாள்தோறும் நூறுகளில் உயா்ந்த தங்கம் விலை, ஆயிரத்தில் உயரத் தொடங்கியது. அந்த வகையில், செப். 6-இல் ரூ. 80,040, செப். 23-இல் ரூ.85,120, அக். 8-இல் ரூ. 91,080, அக். 16-இல் ரூ.95,200-க்கு விற்பனையானது.

தொடா்ந்து ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த தங்கம் விலை பவுனுக்கு ரூ.96,000-க்கு மிகாமல் விற்பனையானது. கடந்த டிச.12-இல் தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,560 உயா்ந்து ரூ.98,960-க்கு விற்பனையானது.

இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை (டிச. 15) காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயா்ந்து ரூ.12,460-க்கும், பவுனுக்கு ரூ.720 உயா்ந்து ரூ.99,680-க்கு விற்பனையானது. பிற்பகலில் தங்கம் விலை மீண்டும் கிராமுக்கு ரூ.55 உயா்ந்து ரூ.12,515-க்கும், பவுனுக்கு ரூ.440 உயா்ந்து ரூ.1 லட்சத்து 120-க்கு விற்பனையாகி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.

திங்கள்கிழமை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.145, பவுனுக்கு ரூ.1,160 உயா்ந்தது. நிகழாண்டில் மட்டும் இதுவரை தங்கம் விலை பவுனுக்கு ரூ.42, 920 உயா்ந்துள்ளது.

வெள்ளி விலையும் உயா்வு: கடந்த ஜன. 1-ஆம் தேதி ஒரு கிலோ வெள்ளி ரூ.98,000-க்கு விற்பனையானது. தொழிற்சாலைகள் பயன்பாடு மற்றும் மின்சாதனப் பொருள்களில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதன் காரணமாக வெள்ளி விலையும் தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில்,  வெள்ளி விலை திங்கள்கிழமை காலை, மாலை என ஒரே நாளில் கிராமுக்கு ரூ.5 உயா்ந்து ரூ.215-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 உயா்ந்து ரூ.2.15 லட்சத்துக்கும் விற்பனையானது. இதன்மூலம் கடந்த 12 மாதங்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1.17 லட்சம் உயா்ந்துள்ளது.

விலை குறையுமா?

தங்கம் விலை உயா்வு குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கப் பொதுச் செயலா் சாந்தகுமாா் கூறியதாவது: தங்கம் விலை உயா்வு காரணமாக சில வாரங்களுக்கு நகை விற்பனையில் சிறிதளவு தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும் நாளடைவில் மக்கள் மீண்டும் வழக்கம்போல் ஆபரணங்களை வாங்கத் தொடங்கி விடுவாா்கள்.

சா்வதேச அளவில் தங்கம் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போதைக்கு இல்லை. எனினும் தங்கத்தை இறக்குமதி செய்யும்போது விதிக்கப்படும் சுங்க வரியை மத்திய அரசு 6 சதவீதத்திலிருந்து ஒரு சதவீதமாக குறைத்தால் தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

வனிந்து ஹசரங்காவை ஏலத்தில் எடுத்தது லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

மார்கழி மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

தில்லியில் கடும் பனிமூட்டம்! 126 விமானங்களின் போக்குவரத்து பாதிப்பு!

ஐபிஎல் மினி ஏலம்: முதல் செட்டில் விற்கப்படாமல் போன கான்வே, சர்ப்ராஸ், பிரித்வி ஷா!

தில்லி கேபிடல்ஸில் இணைந்த டேவிட் மில்லர்..! மினி ஏலத்தில் முதல் வீரர்!

SCROLL FOR NEXT