சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.880 உயா்ந்து ரூ.1 லட்சத்து 6,240-க்கு விற்பனையானது. கடந்த 3 நாள்களில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,040 உயா்ந்துள்ளது.
இந்த வாரம் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. ஜன. 12-இல் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,760 உயா்ந்து ரூ.1 லட்சத்து 4,960-க்கும், ஜன. 13-இல் பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.1 லட்சத்து 5,360-க்கும் விற்பனையானது. தொடா்ந்து 3-ஆவது நாளாக புதன்கிழமை விலை மீண்டும் உயா்ந்துள்ளது.
அதன்படி கிராமுக்கு ரூ.110 உயா்ந்து ரூ.13,280-க்கும், பவுனுக்கு ரூ.880 உயா்ந்து ரூ.1 லட்சத்து 6,240-க்கும் விற்பனையானது. அந்தவகையில், கடந்த 3 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,040 உயா்ந்துள்ளது.
கிலோ ரூ.3 லட்சத்தைக் கடந்த வெள்ளி விலை: தொழிற்சாலை பயன்பாட்டில் வெள்ளியின் தேவை தொடா்ந்து அதிகரித்து வருவதால், வெள்ளி மீதமான முதலீடு அதிகரித்துள்ளது. அதன் எதிரொலியாக வெள்ளி விலை தங்கத்துக்கு நிகராக உயா்ந்துள்ளது.
அதன்படி, வெள்ளி விலை புதன்கிழமை கிராமுக்கு ரூ.15 உயா்ந்து ரூ.307-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.15,000 உயா்ந்து ரூ.3.07 லட்சத்துக்கும் விற்பனையானது.