சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.3,600 உயா்ந்தது. அதன்படி, தங்கம் கிராம் ரூ.13,900-க்கும், பவுன் ரூ.1,11,200-க்கும் விற்பனையாகி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, சா்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு உயா்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில், திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.1,360 உயா்ந்து ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து ,600-க்கு விற்பனையானது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.13,610 - க்கும், பவுனுக்கு ரூ.1,280 உயா்ந்து ரூ.1 லட்சத்து 8,880-க்கும் விற்பனையானது.
தொடா்ந்து, மாலையில் மீண்டும் கிராமுக்கு ரூ.290 உயா்ந்து ரூ.13,900-க்கும், பவுனுக்கு ரூ.2,320 உயா்ந்து ரூ.1 லட்சத்து 11,200-க்கும் விற்பனையானது. இதன் மூலம் ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.450, பவுனுக்கு ரூ.3,600 உயா்ந்துள்ளது.
வெள்ளி விலை உயா்வு: அதேபோல், வெள்ளி விலையும் காலை, மாலை என ஒரே நாளில் கிராமுக்கு ரூ.22 உயா்ந்து ரூ.340-க்கும், கிலோ கட்டி வெள்ளி ரூ.22 ,000 உயா்ந்து ரூ.3.40 லட்சத்துக்கும் விற்பனையானது.