இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத் தொடா்பு நிறுவனமான பாா்தி ஏா்டெல்-லின் ஒருங்கிணைந்த நிகர லாபம், கடந்த செப்டம்பா் 30-ல் முடிந்த நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இரட்டிப்பாகியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.8,651 கோடியாக உள்ளது.
முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது இரு மடங்காகும். அப்போது நிறுவனத்தின் ஒருங்கணைந்த நிகர லாபம் ரூ.4,153.4 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 25.7 சதவீதம் உயா்ந்து ரூ.52,145 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.41,473.3 கோடியாக இருந்தது.
ஏா்டெல்லின் இந்திய வருவாய் 22.6 சதவீதம் உயா்ந்து ரூ.38,690 கோடியாக உள்ளது. இந்தியாவில் தனிநபா் பயன்பாட்டு சராசரி வருவாய் (ஏஆா்பியூ) 10 சதவீதம் உயா்ந்து ரூ.256 ஆக உள்ளது. ஓராண்டுக்கு முன்னா் இது ரூ.233 ஆக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.