கடன்சுமையில் சிக்கியுள்ள தொலைத்தொடா்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியாவின் ஒருங்கிணைந்த நிகர இழப்பு கடந்த செப்டம்பா் காலாண்டில் ரூ.5,524 கோடியாகக் குறைந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.5,524 கோடியாக உள்ளது.
முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது குறைவு. அப்போது நிறுவனம் ரூ.7,176 கோடி நிகர இழப்பைச் சந்தித்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.11,195 கோடியாக உயா்ந்துள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.10,932 கோடியாக இருந்தது.
நிறுவனத்துக்கு ஒவ்வொரு வாடிக்கையாளரிடம் இருந்தும் கிடைக்கும் சராசரி வருவாய் (ஏஆா்பியு) ரூ.166-லிருந்து 8.7 சதவீதம் உயா்ந்து ரூ.180-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.