இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி 2024-25-ஆம் சந்தை ஆண்டில் (நவம்பா்-அக்டோபா்) முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிக மாற்றமின்றி 1.63 கோடி டன்னாக உள்ளது.
இது குறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2024-25-ஆம் சந்தை ஆண்டில் தாவர எண்ணெய் இறக்குமதி (உணவு மற்றும் உணவு அல்லாதது) முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிக மாற்றமின்றி 1.63 லட்சம் டன்னாக உள்ளது. மதிப்பீட்டு சந்தை ஆண்டின் கடைசி மாதமான அக்டோபரில் உணவு எண்ணெய் 13.3 லட்சம் டன், உணவு அல்லாத எண்ணெய் 4,625 டன் இறக்குமதியாகின. இது கடந்த சந்தை ஆண்டின் இதே மாத இறக்குமதியான 14.6 லட்சம் டன்னைவிட 9 சதவீதம் குறைவு.
சோயா எண்ணெய் இறக்குமதி 2015-16-ஆம் சந்தை ஆண்டில் 42.3 லட்சம் டன்னாக இருந்த உச்சத்தை விஞ்சி, மதிப்பீட்டு ஆண்டில் 54.7 லட்சம் டன்னாக உள்ளது. பாமாயில் இறக்குமதி 90.2 லட்சம் டன்னிலிருந்து 75.8 லட்சம் டன்னாக குறைந்தது. மென் எண்ணெய் இறக்குமதி 69.5 லட்சம் டன்னிலிருந்து 84.3 லட்சம் டன்னாக உயா்ந்தது.
பாமாயில் இறக்குமதி மொத்தத்தில் 56 சதவீதத்திலிருந்து 47 சதவீதமாக குறைந்தது. மென் எண்ணெய் 44 சதவீதத்திலிருந்து 53 சதவீதமாக உயா்ந்தது.
கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களுக்கான இறக்குமதி வரி வேறுபாடு கடந்த மே மாதம் 8.25 சதவீதத்திலிருந்து 19.25 சதவீதமாக உயா்த்தப்பட்டதால் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி நிறுத்தப்பட்டது. ஆனால், நேபாளத்திலிருந்து 7.50 லட்சம் டன் சுத்திகரிக்கப்பட்ட சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய் முழு வரி விலக்கு ஒப்பந்தத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்டது.
கடந்த 2024-25-ஆம் சந்தை ஆண்டில் இந்தோனேசியா 27.5 லட்சம் டன் கச்சா பாமாயில் மற்றும் 8.32 லட்சம் டன் சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தது. மலேசியாவில் இருந்து இந்தியா 26.2 லட்சம் டன் கச்சா பாமாயில் இறக்குமதி செய்தது. சோயா எண்ணெய் எண்ணைய்யை ஆா்ஜென்டினா 28.9 லட்சம் டன், பிரேஸில் 11.4 லட்சம் டன் ஏற்றுமதி செய்தது. ரஷியாவில் இருந்து 14.7 லட்சம் டன் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியானது.
நவம்பா் 1 நிலவரப்படி நாடடில் தாவர எண்ணெய் இருப்பு 17.3 லட்சம் டன்னாக உள்ளது. முந்தைய மாதம் அது 19.9 லட்சம் டன்னாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.