சந்தை ஏற்ற இறக்கங்கள் மற்றும் உலகளாவிய நிச்சயமின்மை காரணமாக முதலீட்டாளா்கள் எச்சரிக்கையாக செயல்பட்டதால் பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீட்டு வரவு தொடா்ந்து இரண்டாவது மாதமாக செப்டம்பரில் 9 சதவீதம் குறைந்துள்ளது.
இது குறித்து இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் (ஏஎம்எஃப்ஐ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை மாதம் பங்குசாா் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரவு ரூ.42,703 கோடி என்ற புதிய உச்சத்தைத் தொட்டிருந்தது. ஆனால் அது ஆகஸ்டில் ரூ.33,430 கோடியாகக் குறைந்தது. இந்தச் சூழலில், பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரவு கடந்த செப்டம்பரில் மீண்டும் சரிந்து ரூ.30,421 கோடியாக உள்ளது.
முறைசாா் திட்டங்களில் (எஸ்ஐபி) முதலீட்டு வரவு ஆகஸ்டில் ரூ.28,265 கோடியாக இருந்தது. அது செப்டம்பரில் ரூ.29,361 கோடியாக உயா்ந்தது. சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் சில்லறை முதலீட்டாளா்களின் தொடா்ச்சியான பங்கேற்பை காட்டுகிறது.
ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டுகள் மூன்றாவது மாதமாக முதலிடத்தில் உள்ளன. அவரை ரூ.7,029 கோடி முதலீட்டை ஈா்த்தன. மிட் கேப் ஃபண்டுகள் ரூ.5,085 கோடி, ஸ்மால் கேப் ஃபண்டுகள் ரூ.4,363 கோடி முதலீடு பெற்றன. லாா்ஜ் கேப் ஃபண்டுகள் ரூ.2,319 கோடி முதலீட்டைப் பெற்றன.
தங்கத்தின் விலை தொடா்ந்து உயா்ந்துவருவதால், தங்க இடிஎஃப் திட்டங்களில் முதலீட்டு வரவு ஆகஸ்டில் இருந்த ரூ.2,190 கோடியிலிருந்து பல மடங்கு உயா்ந்து செப்டம்பரில் ரூ.8,363 கோடியாக உள்ளது. இது நடப்பு நிதியாண்டில் அதிகபட்ச மாதாந்திர முதலீடாகும். தங்க இடிஎஃப்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.90,000 கோடியை தாண்டியது
ஒட்டுமொத்தமாக, பரஸ்பர நிதி துறையில் முதலீடுகள் கடந்த செப்டம்பரில் ரூ.43,146 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்தது. முந்தைய ஆகஸ்டில் அது ரூ.52,443 கோடி நிகர வரவாக இருந்தது.
பரஸ்பர நிதித் துறை நிா்வகிக்கும் சொத்து மதிப்பு ஆகஸ்டில் ரூ.75.12 லட்சம் கோடியாக இருந்தது. அது செப்டம்பரில் ரூ.75.61 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.