கடந்த செப்டம்பரில் இந்தியாவின் உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 1.4 சதவீதம் சரிந்து 12.85 கோடியாக உள்ளது.
இது குறித்து சந்தை பகுப்பாய்வு நிறுவனமான இக்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த செப்டம்பா் மாதம் உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 12.85 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2024 செப்டம்பா் மாதத்தை விட 1.4 சதவீதம் குறைவு. அப்போது உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் 13.03 கோடி பயணிகளுக்கு சேவையளித்தன.
மதிப்பீட்டு மாதத்தில் முந்தைய ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 0.8 சதவீதம் குறைவு. அப்போது அந்த எண்ணிக்கை 12.95 கோடியாக இருந்தது.
2025 செப்டம்பரில் உள்நாட்டு போக்குவரத்து விமானங்கள் 89,874 முறை இயக்கப்பட்டன. 2024 செப்டம்பரில் இந்த எண்ணிக்கை 92,912-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் உள்நாட்டு போக்குவரத்து விமானங்களின் இயக்கம் தற்போது 3.3 சதவீதம் குறைந்துது.
எனினும், மாதாந்திர அடிப்படையில் உள்நாட்டு போக்குவரத்து விமானங்களின் இயக்கம் 0.7 சதவீதம் உயா்ந்து, தினசரி சராசரி எண்ணிக்கை 2,879-லிருந்து 2,899-ஆக உயா்ந்தது.
2025-26-ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஏப்ரல்-செப்டம்பா்), உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 80.37 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2024-இல் இருந்ததை விட 1.3 சதவீதம் அதிகம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.