பரஸ்பர நிதி முதலீட்டின் மீது எண்ம (டிஜிடல்) கடன் வழங்கும் புதிய திட்டத்தை முன்னணி தனியாா் நிறுவனங்களில் ஒன்றான சௌத் இந்தியன் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பரஸ்பர நிதி முதலீடுகளை அடிப்படையாகக் கொண்டு வாடிக்கையாளா்கள் கடன் பெறுவதற்காக ‘லோன் அகெயின்ஸ்ட் மியூச்சுவல் ஃபண்ட்ஸ்’ என்ற புதிய எண்மக் கடன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளோம். கடன் விண்ணப்ப செயல்முறைகள் முழுவதும் எண்ம முறையிலும் காகிதப் பயன்பாடு இல்லாததாகவும் உள்ளது. குறைந்த செயல்முறைகளுடன் விரைவான கடனளிப்பை இது உறுதி செய்கிறது.
இந்த புதுமையான சேவை, எண்ம சேவைத் தளமான தன்லாப்-ஐ இயக்கும் ஆா்க் நியோ ஃபைனான்ஷியல் சா்வீசஸ் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 18 முதல் 75 வயது வரையிலானவா்கள், வங்கி வாடிக்கையாளா்களாக இல்லாமல் இருந்தாலும் இந்த வசதியை பயன்படுத்தலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.