புதிய ஸ்மார்ட்போன்கள் வாங்குவதற்காக, நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று, அதனை திரும்ப செலுத்தாவிட்டால், செல்போன்களை முடக்குவதற்கு வகை செய்யும் புதிய விதிமுறையை ஆர்பிஐ உருவாக்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடன் பெற்று வாங்கிய செல்போனுக்கான தவணையை செலுத்தாவிட்டால், கடன் வழங்கிய நிறுவனங்கள், எங்கிருந்து வேண்டுமானாலும் செல்போன் இயக்கத்தை முடக்கும் வாய்ப்பை வழங்குவது குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
அண்மைக்காலமாக, செல்போன் வாங்குவதற்காக கடன் பெறுவதும், அதனை திரும்ப செலுத்தாதவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்த புதிய விதிமுறையை கொண்டு வருவது குறித்து ஆர்பியை பரிசீலித்தாலும், இது நுகர்வோர் நலனை பாதிக்கும் என்ற கவலையும் எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு, கடன் தவணையை செலுத்தாத வாடிக்கையாளர்களின் செல்போன்களை, செயலிகள் மூலம் முடக்கும் நிதி நிறுவனங்களின் செயல்களுக்கு ஆர்பியை எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், இந்த ஆண்டு நிலைமை மாறியிருப்பதாகக் கூறப்படுகிறது.
கடன் வழங்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்திய ஆர்பிஐ, விரைவில், கடன் தவணையை செலுத்தாதவர்களின் செல்போன்களை முடக்குவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஆர்பிஐ இது தொடர்பான புதிய விதிமுறையை உருவாக்கினால், அது தொடர்பாக, கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே இது பற்றி தெரிவிக்க வேண்டும் என்பதையும், நிதி நிறுவனங்களால் முடக்கப்பட்ட செல்போன்களில் இருந்து எந்த தனிப்பட்ட தகவல்களையும் பெறக் கூடாது என்பதையும் கட்டாயமாக்கும் என்று தெரிகிறது.
இதுபோன்ற சிறிய பொருள்களுக்கு கடன் வழங்கும்போது, அதனை திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகள் நிதி நிறுவனங்களுக்கு இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டாலும், அது நுகர்வோரின் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
செல்போன் போன்ற மிகச் சிறிய தொழில்நுட்பப் பொருள்களை கடனில் வாங்கிவிட்டு, தவணையை செலுத்தாதவர்கள் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதே, இந்த புதிய திட்டத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. 2024ஆம் ஆண்டு தரவுகள் கூறுவது என்னவென்றால், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை ஒட்டுமொத்தமாக வாங்கிய எண்ணிக்கையில் மூன்றுல் ஒரு பங்கு கடன் தவணையில் வாங்கப்பட்டது என்கிறது.
வழக்கமாக ஒரு லட்சத்துக்கும் குறைவாகக் கொடுக்கப்படும் கடன்கள், தவணை செலுத்தப்படாமல் போகும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விதிமுறை உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டார், மின்னணு சாதனங்களுக்கு அதிகளவில் கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனங்கள் மிகுந்த பயன் அடையும் என்றும், நுகர்வோரின் மோசமான நிதி மேலாண்மை குறையும் வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், இந்த விதிமுறை, லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது செல்போன்தான், மருத்துவம், கல்வி, அடிப்படையான வேலைகளுக்கும் அத்தியாவசியம் என்பதால், இது நிச்சயம் எதிர்மறையான பிரச்னைகளை ஏற்படுத்தலாம் என்றே சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.