மும்பை: இன்றைய வர்த்தகத்தில், எஃப்எம்சிஜி தவிர மற்ற அனைத்துத் துறைகளிலும் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியதன் காரணமாக, நிஃப்டி வர்த்தக நேரத்தின் இடையே 26,340 என்ற புதிய வரலாற்று உச்சத்தை எட்டியது.
வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 573.41 புள்ளிகள் உயர்ந்து 85,762.01 ஆகவும், நிஃப்டி 182 புள்ளிகள் உயர்ந்து 26,328.55 ஆகவும் நிலைபெற்றது.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 1% உயர்ந்து புதிய உச்சத்தை எட்டிய நிலையில் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடும் 0.7% உயர்ந்தன.
இந்த வாரத்தில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 தலா 1% உயர்ந்து, தொடர்ச்சியாக 2-வது வாரமாக லாபத்தை முதலீட்டாளர்கள் பதிவு செய்தனர்.
நிஃப்டி வங்கி குறியீடும் வர்த்தக நேரத்தின் இடையே 60,203.75 என்ற புதிய சாதனை உச்சத்தை எட்டியது.
சென்செக்ஸில் ஏசியன் பெயிண்ட்ஸ், மாருதி, பாரத் எலக்ட்ரானிக்ஸ், என்டிபிசி, மஹிந்திரா & மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் ஐடிசி, டைட்டன் நிறுவனம், எச்சிஎல் டெக் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவை சரிந்து முடிவடைந்தன.
நிஃப்டி-யில் கோல் இந்தியா, என்டிபிசி, ஹிண்டால்கோ, ட்ரென்ட், ஜியோ ஃபைனான்சியல் உள்ளிட்ட பங்ககள் உயர்ந்த நிலையில் ஐடிசி, நெஸ்லே, ஆக்சிஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ் ஆகியவை சரிந்து முடிவடைந்தன.
இன்றைய வர்த்தகத்தில் 3,246 பங்குகள் வர்த்தகமான நிலையில் 2,246 பங்குகள் உயர்ந்தும் 892 பங்குகள் சரிந்தும் 108 பங்குகள் மாற்றமின்றி முடிவடைந்தன.
எஃப்எம்சிஜி பங்குகள் 1% வரை சரிந்த நிலையில் மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் உயர்ந்து முடிந்தன. இதில் ஆட்டோ, உலோகம், மூலதனப் பொருட்கள், ஊடகம், ரியல் எஸ்டேட், நுகர்வோர் நீடித்த பொருட்கள், மின்சாரம், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகிய பங்குகள் தலா 1 முதல் 2% வரை உயர்ந்தன.
பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ.3,268.60 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ள நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1,525.89 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
பங்குகளைப் பொறுத்தவரை, மோர்கன் ஸ்டான்லி தனது தரத்தை சமம் என்று தெரிவித்ததால் ஐடிசி பங்குகள் 4% சரிந்தன. தேவ்யானி இன்டர்நேஷனலுடன் இணைப்புச் செய்தி காரணமாக சஃபையர் ஃபுட்ஸ் பங்குகள் 3% சரிந்தன. டிசம்பரில் மொத்த விற்பனை 50% அதிகரித்ததைத் தொடர்ந்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பங்குகள் 52 வார உச்சத்தை எட்டியது.
டிசம்பர் மாத விற்பனைத் தரவுகளால் ஹீரோ மோட்டோகார்ப் பங்கின் விலை 2% உயர்ந்தன. 3-வது காலாண்டில் மொத்த வர்த்தகம் 13% அதிகரித்ததால் இந்தியன் வங்கி பங்குகள் 3% உயர்ந்தன. வலுவான மூன்றாம் காலாண்டு வர்த்தக எண்களுக்குப் பிறகு பஞ்சாப் & சிந்து வங்கி மற்றும் இந்தியன் வங்கி பங்குகள் 3 முதல் 5% வரை உயர்ந்தன.
ஐடிபிஐ வங்கி, கோல் இந்தியா, ஏதர் இண்டஸ்ட்ரீஸ், நால்கோ, ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ், அசோக் லேலண்ட், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், கிராஃப்ட்ஸ்மேன், பிஹெச்இஎல், டிவிஎஸ் மோட்டார், இண்டஸ் டவர்ஸ், அதானி எனர்ஜி, மாருதி சுசுகி, ஃபீனிக்ஸ் மில்ஸ், கிராஃபைட் இந்தியா, 3எம் இந்தியா, மஹிந்திரா & மஹிந்திரா, பேங்க் ஆஃப் பரோடா, எம்சிஎக்ஸ் இந்தியா உள்ளிட்ட 180 பங்குகள் இன்று 52 வார உச்சத்தை எட்டியது.
ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு ஆகியவை உயர்வுடன் வர்த்தகமானது.
புத்தாண்டு தின விடுமுறையையொட்டி நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க சந்தைகள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
சர்வதேச பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய்க்கு ஒன்றுக்கு 0.46% உயர்ந்து 61.13 அமெரிக்க டாலராக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.