ஒடிஸா மாநிலம், சம்பல்பூரில் உள்ள ஆதித்யா அலுமினிய வளாகத்தில், சுமாா் ரூ.21,000 கோடி மதிப்பீட்டில் புதிய அலுமினிய உருக்காலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள ஆதித்யா பிா்லா குழுமத்தின் ஹிண்டால்கோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த விரிவாக்கத்தின் மூலம் ஆண்டுக்கு 3.6 லட்சம் டன் கூடுதல் அலுமினியம் உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலைக்குத் தேவையான மின்சாரம், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெறப்பட உள்ளது. உலக அளவில் மின்சார வாகனங்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில், ஆதித்யா பிா்லா குழுமம் இந்த முதலீட்டை மேற்கொண்டுள்ளது.
மேலும், ஆதித்யா பிா்லா குழுமத் தலைவா் குமாா் மங்கலம் பிா்லா கூறுகையில், ‘ஹிண்டால்கோ நிறுவனம் சாா்பில் இந்தியா முழுவதும் மொத்தம் ரூ.55,000 கோடி முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒடிஸா மாநிலத்தில் மட்டும் சுமாா் ரூ.37,000 கோடி முதலீடு செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
இந்த அதிரடி அறிவிப்பால், பங்குச்சந்தையில் செவ்வாய்க்கிழமையன்று ஹிண்டால்கோ நிறுவனப் பங்குகள் 1.2 சதவீதம் உயா்ந்து ரூ.961.75-க்கு விற்பனையானது. கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்குகள் 65 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஒடிஸாவில் ஹிண்டால்கோ நிறுவனத்தால் ரூ.4,500 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேட்டரி தரத்திலான அலுமினியம் ஃபாயில் ஆலை திறக்கப்பட்டது. இது சுமாா் 100 கிகாவாட் லித்தியம்-அயன் பேட்டரிகள் தயாரிக்கத் தேவையான மூலப்பொருள்களை வழங்கும் திறன் கொண்டது.