குழந்தையும் தெய்வமும்...

24. இணை உணவு

‘சரிம்மா! காலை நேரத்தில் இட்லி மற்றும் இடியாப்பம் தரலாம்! மேற்கொண்டு சொல்லுங்கள்’ என்றாள் பூமா!

டாக்டர் என் கங்கா

‘சரிம்மா! காலை நேரத்தில் இட்லி மற்றும் இடியாப்பம் தரலாம்! மேற்கொண்டு சொல்லுங்கள்’ என்றாள் பூமா!

மிருதுவான ஊத்தப்பம், வெந்தய ஊத்தப்பம், அப்பம் போன்றவையும் காலையில் தரலாம். காலையில் சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு காலை உணவு சுமார் 8 அல்லது 8.30 மணி அளவில் தரலாம். குழந்தைக்கு நன்கு பசிக்க ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் விருப்பமாகச் சாப்பிடும்.

காலை சுமார் 11 மணி அளவில் மசித்த வாழைப்பழம் ஆவியில் அவித்த ஆப்பிள், பழச்சாறு அல்லது பால் தரலாம்.

பழங்கள் தருவதால் சளி பிடிப்பதில்லை. இது தவறான நம்பிக்கை. எந்தவித பயமும் இன்றி பழங்கள் தரலாம். குழந்தையின் இளம் குடலில் கொந்தன் வாழைப்பழம் எளிதில் ஜீரணம் அடையாது. எனவே மொந்தன் வாழ்கைப்பழத்தை ஒரு வயது வரை தவிர்ப்பது நல்லது! பூவன், ரஸ்தாளி மலைப்பழம் பச்சைப்பழம் தரலாம். நன்கு கனிந்த பழத்தை சிறு துண்டாக எடுத்து விரல்களால் மசித்து பாப்பாவுக்கு ஊட்டி விடலாம். இது தொண்டையில் வழுக்கிக் கொண்டு போகும். குழந்தைக்கு உடனடியாக மாவுச் சத்து, பொட்டாசியம் போன்றவை கிடைக்கும். வாழைப்பழத்தில் மக்னீசியம் சத்து உள்ளது. வேகமாக வளர்ச்சி அடையும் குழந்தையின் கை கால் தசைகளுக்கு நல்ல ஊட்டம் கிடைக்கும். கரையக் கூடிய நார்ச்சத்து செரிந்து இருப்பதால் குழந்தைக்கு ஜீரணமும் எளிதாக இருக்கும். பாப்பா சிரமம் இன்றி இளகலாக மலம் கழிக்கும். குழந்தை சாப்பிடும் அளவுக்கு பழங்கள் தரலாம். கணக்கு ஏதும் இல்லை.

ஆப்பிள் பழத்தை தோல் சீவி ஆவியில் அவித்து மசித்து ஊட்ட வேண்டும். தண்ணீரில் போட்டு வேக வைத்தால் வைட்டமின் பி மற்றும் சி வீணாகிவிடும். எனவே அவித்தல் நல்லது. 1 வயதிற்குப் பிறகு தோல் சீவி சிறு சிறு கீற்றுகளாக ஆப்பிளைக் கையில் தரலாம்.

சப்போட்டா பழத்தை ஸ்பூன் மூலம் எடுத்து மசித்து ஊட்டலாம். ஆரஞ்சு திராட்சை போன்றவற்றை சாறு எடுத்து சம அளவு ஆறிய வெந்நீர் கலந்து ஒரு கல் உப்பும் ஜீனியம் சேர்த்து தரலாம். காலை அல்லது மதியம் உணவிற்குப் பிறகு 2 மணி நேரம் சென்று ஜூஸ் கொடுத்தால் குட்டிப் பையனின் தாகத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

மதியம் 12 அல்லது 1 மணிக்கு சாதம் தரலாம். 2-3 விசில் சத்தம் அதிகம் விட்டு சற்று குழைவாக வேக வைத்த சாதத்தை மசித்துத் தரலாம். முதல் ஒரு வாரம் சிறிது உப்பும் வெந்நீரும் கலந்து கஞ்சி சாதம் போல் தரலாம். 10 நாட்களுக்குப் பிறகு பருப்பு, காரம் இல்லாத ரசம் சேர்த்து சுத்தமான நெய் அல்லது நல்லெண்ணை 10-15 சொட்டு சேர்த்து ஊட்டலாம். உப்பு சேர்த்து நன்கு வேக வைத்த உருளைக் கிழங்கு, காரட், பீட்ரூட், பரங்கி செள செள, பூசணி ஆகிய காய்கறித் துண்டுகளையும் மசித்து சாதத்துடன் சேர்த்து தரலாம்.

புளிக்காத தயிர், மோர் ஆகியவற்றை ராஜாத்திப் பாப்பாவுக்குத் தரலாம்! இதனால் சளி பிடிக்காது. இது மூட நம்பிக்கை. புரை ஊற்றி 6-8 மணி நேரம் ஆன புதிய புளிக்காத தயிர் சாதம் ஊட்டலாம். பழைய, புளித்த, கடையில் வாங்கிய தயிர் மோர் போன்றவை கூடாது.

தயிரிலும் பல விஷயங்கள் அடங்கி இருக்கின்றன. தொன்றுதொட்ட காலம் முதல் நமது வீடுகளில் தயிர் தயாரிக்கிறார்கள். தயிர் உறைவது என்பது நன்மை செய்யும் பாக்டீரியாக்கள், ஈஸ்ட் போன்றவற்றால் நடக்கிறது. இந்த நுண்ணுயிர்கள் பல்கிப் பெருகும் போது பால் இயற்கை முறையில் தயிராக மாறுகிறது. இதுவும் fermentation தான். இட்லிக்குச் சொன்னது போல் தயிரிலும் 3 நன்மைகள் உள்ளன.

  1. நிறைய நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் குழந்தைக்குக் கிடைக்கின்றது.

  2. நுண்ணுயிர்கள் பெருகும் போது நிறைய வைட்டமின் பி மற்றும் சி தயிரில் சேர்கிறது.

  3. பாலில் உள்ள கார்போ ஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அணுக்கள் உடைக்கப்பட்டு சிறிய அணுக்களாக எளிதில் செரிக்கக் கூடியதாக மாறுகிறது.

இவ்வளவு பெருமை நிறைந்த தயிர் தவறான கருத்துக்களால் தாய்மார்களால் புறக்கணிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் புரை ஊற்றி தயிர் தயாரிக்கும் வழக்கம் இல்லாததால் நன்மை செய்யும் கிருமிகளை தொழிற்சாலைகளில் வளர்த்து பாலில் சேர்த்து செயற்கைத் தயிர் தயாரிக்கிறார்கள். இதுதான் யோகர்ட். ஆனால் நுண்ணுயிர்கள் பாலில் வளர்ந்து பெருகும் போது ஏற்படும் உயிர் வேதியல் மாற்றங்கள் செயற்கை தயிரில் நிகழ்வதில்லை.

தயிரில் மசித்து இட்லி, இடியாப்பம், ஊத்தப்பம், சப்பாத்தி, சாதம் எல்லாம் ஆறு மாதம் முடிந்த உடன் குட்டிப் பாப்பாவுக்குத் தரலாம். தயிரில் சிறிது சர்க்கரை கலந்து நன்கு கலக்கி லஸ்சி போல் செய்து ஸ்பூன் கொண்டு தரலாம். கோடை காலத்தில் மதியம் 3-4 மணி அளவில் 30 மில்லி வரை லஸ்சி தரலாம். தாகத்திற்கு புளிக்காத மோரில் ஆறிய வெந்நீர் கலந்து லேசாக உப்பு சேர்த்து நீர் மோர் போல தரலாம்.

மாலை 3-4 மணி அளவில் வீட்டில் தயாரித்த சிறு தானிய கஞ்சி அல்லது கூழ் தரலாம். பால் அல்லது மோர், நாட்டுச் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்துத் தரலாம். தேவையானால் 10 சொட்டு நெய் சேர்க்கலாம்.

குழந்தைக்கு 9 மாதங்கள் முடியும் வரை இரவு உணவைத் தவிர்க்கவும். மாலை நேரம் 5 மணிக்குப் பிறகு பால் மட்டும் தர வேண்டும். தாய்ப்பால் போதவில்லை என்றால் மாட்டுப்பால் சிறு தம்ளர் அல்லது கப் மூலம் தரலாம். சுத்தப் பசும்பால், ஒரு மாட்டுப் பால் என்றெல்லாம் வரைமுறைகள் ஏதும் இல்லை. 3 பங்கு பாலுக்கு 1 பங்கு தண்ணீர் ஊற்றி காய்ச்சி பாக்கெட் பால் தரலாம். பால் மற்றும் உணவில் சர்க்கரை சேர்ப்பதை கூடியவரை தவிர்க்கவும். இனிப்பு சுவையைத் தான் குழந்தை முதலில் உணர்கிறது. இனிப்பு சுவையை குழந்தை நன்கு விரும்பும். இனிப்பு சுவையை அதிகம் ருசித்தபின் பிறகு உப்பு காரச் சுவைகளை குழந்தை ஏற்காது. இட்லி அளவை விட குழந்தை இட்லிக்குத் தொட்டுக் கொள்ளும் சர்க்கரை அளவு அதிகமாகிவிடும்.

என்ன பூமா! இந்த உணவு அட்டவணையில் அசைவம் இல்லை என்று பார்க்கிறாயா? 9 மாதம் வரை குழந்தை சுத்த சைவம் தான்.

கடைகளில் விற்கப்படும் மாவுப் பொருட்கள், பால் மாவுகள், ஊட்டச் சத்துப் பானங்கள் எதற்கும் அனுமதியே கிடையாது. நோ என்றால் கண்டிப்பாக நோ தான். பிஸ்கெட், பன், ப்ரெட், போன்றவை மைதா மாவும் பேகிங் சோடாவும் சேர்த்து செய்யப்படுகிறது. எனவே இவைகளுக்கு வீட்டிற்குள் நுழையவே 144 தடை உத்தரவு தான்.

இவற்றைக் கடை பிடித்தால் நோயின்றி, வயிற்றுப் பிரச்னையின்றி குழந்தை நன்கு வளரும்!

தொடர்புக்கு - டாக்டர் என். கங்கா : 9443123313

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா விலை உயர்வு அறிவிப்பு!

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

SCROLL FOR NEXT