உங்க பாப்பா குட்டி இப்போது அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என்றெல்லாம் கூப்பிட ஆரம்பித்து விட்டதா? இதைவிட பெரிய சந்தோஷம் வேறு என்ன இருக்க முடியும்! புல்லாங்குழலின் இனிமையான நாதத்தை விட இது காதுகளுக்கு குளுமையானது அல்லவா? மகளின் வாயிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு சொல்லும் மனத்தில் ஆனந்த யாழை மீட்டுமே! அனுபவித்தவர்களுக்கு இந்த அருமை புரியுமல்லவா?
உங்கள் குழந்தையின் பேச்சுத் திறன் நன்கு வளர வேண்டுமா? Communication and language skill வளர வேண்டுமா? நீங்கள் நிறைய பேசுங்கல். ஆம்! குழந்தையின் செவித்திறன் சரியாக உள்ள பாப்பா மற்றவர் பேசுவதைக் கேட்டு, பார்த்து மொழியையும், பேசுவதையும் கற்றுக் கொள்கிறது. மற்றவர்கள் பேசும் போது அதனை குழந்தை உற்று கவனித்து உதட்டு அசைவுகளையும் புரிந்து கொள்கிறது. குழந்தையுடன் நிறைய பேசினால் குழந்தையும் பேசும். நாம் பேச்சுக் கொடுக்கும் போது நல்ல முக பாவனைகளுடன் உணர்வு பூர்வமாக பேச வேண்டும். மஹாநதி படத்தில் நடிகர் கமலஹாசன் தன் குழந்தைகளுக்குக் கதை சொல்வார். நிஜமாக எதிரில் நிகழ்வுகள் நடப்பது போன்று சொல்வார். நாம் சொல்வது வரிக்கு வரி குழந்தைக்குப் புரிய வேண்டும் என்பதும் கட்டாயம் இல்லை. செய்திகளை தெரிந்து அல்லது புரிந்து கொள்வது இந்த வயதில் முக்கியமில்லை.
நாம் பேசும் போது ஏற்படும் ஒலி அதிர்வுகள் மாற்றங்கள் குழந்தையின் காதுகளில் விழ வேண்டும். ஒலியின் பலவித பரிமாணங்களை குழந்தை மெதுவாக புரிந்து கொள்ள ஆரம்பிக்கும். பேச பேசத்தான் காது கேட்கும் திறனும் அதிகமாகும். கூர்மையாகும். நம் வீட்டிலேயே எத்தனை வித ஒலிகள். தாழ்ப்பாள் திறப்பது, போடுவது, குழாயிலிருந்து தண்ணீர் வருவது, கிரைண்டர், மிக்ஸி, மோட்டார் சப்தங்கள், டூ வீலர் சத்தம், சைக்கிள் மணி, பூஜை மணி, ரேடியோ, டிவி, சாமான்கள் கீழே விழுவது, குடும்பத்தினர் பாடுவது, பேசுவது, சண்டை போடுவது அப்பப்பா! எவ்வளவு வகை சத்தங்கள்! போதுமா இன்னும் வேண்டுமா?
பிறந்தது முதல் இப்படி பலவிதமான ஒலிகளைக் கேட்டு வளரும் குழந்தை, எளிதில் நன்கு பேச ஆரம்பிக்கிறது. இப்படி பலவிதமான ஒலிகளுக்கும் குழந்தை என்ன செய்கிறது என்பதும் நமக்குத் தெரியும். கூப்பிட்டக் குரலுக்கு குழந்தை திரும்பிப் பார்க்கவில்லையானால் காது கேட்கும் திறன் குறைவு அல்லது மூளை வளர்ச்சி குறைவு என்று எடுத்துக் கொண்டு அதற்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளைப் பெற வேண்டும்.
குழந்தை சரிவரப் பேசாமலிருப்பது அல்லது தாமதமாகப் பேச ஆரம்பிப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.
காது கேளாமை – ஒன்று அல்லது இரண்டு காதுகளும்
மூளை வளர்ச்சிக் குறை (Mental Retardation)
அன்னப் பிளவு (Cleft lip / Palate)
நாக்கு அடியில் ஒட்டி இருத்தல் (Tongue Tie)
குரல்வளைப் பிரச்னைகள்
ஆட்டிசம் (Autism)
போன்றவை ஒரு சில உதாரணங்கள் ஆகும். மருத்துவ பரிசோதனைகள் தேவை. முக்கியமாக இரண்டு உண்மை நிகழ்வுகளைக் கூறலாம்.
சிங்கப்பூரில் வாழும் தமிழ்நாட்டுத் தம்பதியினரின் 2 ½ வயது குழந்தை சரிவர பேசவில்லை என்று குழந்தை மருத்துவரிடம் அழைத்து வந்தனர். குழந்தை நார்மலாகத்தான் இருந்தது. பெற்றோர்களிடம் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் மனத்தை வருத்தின.
குழந்தையின் அப்பா மருத்துவர். அம்மாவுக்கு கணினிப் பணி. பிறந்த எட்டு மாதத்திலிருந்து குழந்தையை மாண்டரின் (சீன மொழி) பேசும் ஒரு பெண் பணியாளரிடம் தினமும் விட்டுவிட்டுச் செல்வார்களாம். காலை 7.30 மணிக்கு பணிக்குச் செல்லும் பெற்றோர் இருவரும் இரவு சுமார் 8 மணிக்கு வீட்டிற்கு வருவார்களாம். சீன ஆயாம்மா குழந்தைக்கு பகல் நேரம் முழுவதும் உணவு கொடுத்து சுத்தமாகப் பராமரித்து தூங்க வைத்து எல்லாம் அருமையாகச் செய்வார்களாம். பகல் முழுவதும் மாண்டரின் மொழி டிவி சானல்கள் தான் ஓடுமாம். இரவு பெற்றோர்கள் வரும் நேரம் அதிக நாட்கள் குழந்தை தூங்கிவிடுமாம். குழந்தைக்கு வேறு நோய்கள் ஏதும் இல்லை. பேசுவதற்கு தேவையான போதுமான ஊக்கம் (stimulus) தரப்படவில்லை. அதனால் தான் குழந்தை பேஅவில்லை போலும் என்று முடிவு செய்தார் மருத்துவர். குழந்தையை தாத்தா பாட்டியுடன், நிறைய குழந்தைகள் உள்ள குடும்பத்தில் ஒரு மாதம் தங்கும்படி ஆலோசனை தரப்பட்டது. 15 நாட்களில் மிகுந்த மகிழ்ச்சியுடன் மருத்துவரிடம் ஓடி வந்தாள் கணினி நிபுணரான அம்மா. குழந்தை 10 வார்த்தைகள் பேச ஆரம்பித்துவிட்டான். என்னை அம்மா என்று கூப்பிடுகிறான் என்று மகிழ்ந்தாள். மேலும் ஒரு மாதம் சென்றது. குழந்தை முழுமையாக பேச ஆரம்பித்தது. கதை சொல்லும் பாட்டியுடன் தான் இருப்பேன் என்று அடம் பிடித்தது குழந்தை. கொஞ்ச நாளைக்கு அப்படியே இருக்கட்டும் என்று முடிவு செய்து சிங்கப்பூர் திரும்பினர் பெற்றோர்.
பேசுவதற்கு Stimulus Response என்ற கொள்கை நூற்றுக்கு நூறு உண்மை. சில வருடங்களுக்கு முன் Jungle books என்ற ஒரு ஆங்கில சினிமா மிக பிரபலமாக ஓடியது. ஒரு வயது முதல் காட்டில் வளரும் ஒரு இளவரசன் 8 வயதில் நாட்டிற்குத் திரும்ப அழைத்து வரப்படுவான். அவனது நடை, பாவனை, மொழி எல்லாமே மிருகங்களைப் போல். மனிதர்களின் மொழி புரியாமல் தடுமாறி அவர்களது நடவடிக்கைகள் பிடிக்காமல் மறுபடியும் காட்டுக்கே ஓடி விடுவான். மருத்துவ ரீதியாக இது சாத்தியமே!
குழந்தைக்கு காது சரியாகக் கேட்கிறதா என்று பெற்றோர்களிடம் கேட்டால் டிவியில் பாட்டுப் போட்டால் நன்றாக டான்ஸ் ஆடுவான் என்று பதில் சொல்வார்கள். டிவியின் வண்ணக் காட்சிகளைக் கண்ணால் பார்க்கிறது குழந்தை. உணர்வுகள் தூண்டப்பட்டு டான்ஸ் ஆடுகிறது. பாட்டு காதில் கேட்டுத்தான் டான்ஸ் ஆடுகிறது என்று எடுத்துக் கொள்ள முடியாது. இந்த அடிப்படைக் கருத்தைப் புரிந்து கொள்ளாத பல பெற்றோர்கள் குழந்தையை தாமதமாக மருத்துவரிடம் அழைத்து வருகிறார்கள். காது சரிவரக் கேட்கவில்லை என்பது அவர்களுக்குப் புரிகிறது. இது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.
குழந்தையைக் கண்ணோடு கண் பார்த்து பேசி, சிரித்து, குழந்தையின் முக பாவங்களை சரிவர கவனித்தால், குழந்தைக்கு ஏதும் குறைபாடு இருந்தால் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
தொடர்புக்கு - டாக்டர் என். கங்கா : 9443123313
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.