பகுத்தறிவும் பழைய பஞ்சாங்கமும்
நம் திராவிட இனவாதிகளின் பார்வையில், பஞ்சாங்கம் என்பது பார்ப்பன ஆரிய சதி. அப்பழுக்கற்ற மூடநம்பிக்கை. அறிவியலுக்கு எதிரானது. எனவே, தடை செய்யப்பட வேண்டியது.
தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், விவசாயிகளுக்கான ‘மழை முன்னறிவிப்பு கையேடு’ ஒன்றை வழங்குகிறது. அதில், இந்திய வானிலை மையத்திடம் இருந்து 100 ஆண்டுகளுக்கு மேலான வானிலைத் தரவுகள் வாங்கப்பட்டு, மாவட்ட வாரியாகவும் மாத வாரியாகவும் மழை அளவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன், மாவட்ட வாரியாக நடப்பு ஆண்டு மழை அளவும், மழை பெய்யும் காலங்களும் வெளியிடப்பட்டுள்ளன. எதிர்பார்க்கப்படும் மழை அளவினை வெளியிட்டு, அதற்கு ஏற்றாற்போல விவசாயிகள் தங்கள் வேளாண் திட்டமிடுதலைச் செய்ய உதவுகிறது. 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்ட கையேட்டில், இந்த வானிலை துறை சார்ந்த தகவலுடன், 14 பஞ்சாங்கங்களின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட மழைக் குறிப்புகளும் அளிக்கப்பட்டிருந்தன.
இது, திராவிட இனவாதக் குழுக்களின் எதிர்ப்புக்கு ஆளாயிற்று. வேளாண்மைப் பல்கலைக் கழகம், விவசாயிகளிடம் மூடநம்பிக்கைகளைப் பரப்புவதாகவும், இந்த மழை முன்னறிவிப்புக் கையேடு வழங்கிய பல்கலைக் கழக அதிகாரிகள் மீது அரசு சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், விவசாயிகளை ஏமாற்றும் இதுபோன்ற அறிவிப்புகளை பல்கலைக் கழகம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் திராவிட இனவாதிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
பஞ்சாங்கங்களை ‘ஆரிய’ ‘பார்ப்பன’ சதியாகவே பார்க்கின்றனர். மேற்சொன்ன ஆர்ப்பாட்டத்தில், திராவிட இனவாத அமைப்பின் கலைக் குழுவினர், ‘பார்ப்பனர்கள்போல் வேடமணிந்து, பஞ்சாங்க அடிப்படையில் கையேட்டினை கையில் பிடித்துக்கொண்டு விவசாயிகளுக்கு அறிவுரை கூறுவது’போல் நடித்துக் காட்டினர். 21 ஆகஸ்ட், 2011 தேதியிட்ட ‘விடுதலை’ என்கிற திராவிட இனவாதப் பத்திரிகை, ‘பஞ்சாங்கம் என்பது பார்ப்பனப் புரட்டே!’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. 2008-ல், மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசு வாய்மொழியாக, இந்து அறநிலையத் துறை சார்ந்த கோவில்களில் தமிழ்ப் புத்தாண்டின்போது பஞ்சாங்கம் வாசிப்பதைத் தடை செய்தது.
நம் திராவிட இனவாதிகளின் பார்வையில், பஞ்சாங்கம் என்பது பார்ப்பன ஆரிய சதி. அப்பழுக்கற்ற மூடநம்பிக்கை. அறிவியலுக்கு எதிரானது. எனவே, தடை செய்யப்பட வேண்டியது.
ஆனால், பஞ்சாங்கத்தை அப்படி ஒதுக்கித் தள்ளிவிட முடியுமா?
வானம் பார்த்த மழையை மட்டுமே நம்பியிருக்கும் வறண்ட நிலப்பகுதிகளுக்கான விவசாய ஆராய்ச்சிக்கான மத்திய அரசின் மையம் (Central Research Institute for Dryland Agriculture, CRIDA) ஹைதராபாத்தில் உள்ளது. இந்த மையத்திலிருந்து, பாரம்பரிய மழை முன்னறிவிப்பு வழிமுறைகள் குறித்து ஒரு நூலை 2008-ல் வெளியிட்டனர். பஞ்சாங்கக்காரர்கள், மழையை முன்னறிவிக்கப் பயன்படுத்திய வழிமுறைகள், அதாவது சூரியன் ஒரு நட்சத்திரத்தில் நுழையும் நேரம், நட்சத்திரங்களையும் ராசிச் சக்கரத்தையும் இணைத்து உருவாக்கிய வழிமுறைகள், நட்சத்திரத்தின் வாகனங்களாகச் சில குறிப்பிட்ட விலங்குகளை உருவகப்படுத்துவது... ஆகியவற்றை உதாசீனப்படுத்திவிட முடியாது என்கிற முடிவுக்கு அந்த நூல் வருகிறது. நவீன அறிவியல் உள்ளீடுகள் மூலம் பஞ்சாங்கத்தை மேம்படுத்தலாம். ஆனால், பகுத்தறிவற்ற மோசடி என புறந்தள்ளிவிட முடியாது என்பதற்கு ஆதாரமாகப் பல்வேறு ஆராய்ச்சிகளை அவர்கள் அளிக்கிறார்கள்.
கோள்களின் நிலையின் அடிப்படையில், மழை பெய்வதை முன்னறிவித்தல் என்பது நம் பாரம்பரியத்தில் தொடர்ந்து இருந்துவரும் ஒரு முறையாகும். இது, காரண காரியத் தொடர்பு அல்ல. மாறாக, பல நூற்றாண்டுகளாக ஏன் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் பாரதம் முழுவதும் செய்யப்பட்ட அவதானிப்புகள். அவற்றின் பிராந்திய தொகுப்புகளே பஞ்சாங்கங்கள். பஞ்சாங்கங்களை ஆராயும்போது, ஒரு சில பிராந்தியங்களுக்கு ஒரு சில பஞ்சாங்கங்களின் மழை நீரளவின் முன்னறிவிப்பு கச்சிதமாகப் பொருந்துகிறது என்பதையும், பஞ்சாங்கங்கள் தம்முள் மாறுபடுகின்றன என்பதையும் CRIDA தெரிவிக்கிறது.
சங்கத் தமிழ் நூல்கள், நம்முடைய இந்தப் பழமையான பண்பாட்டு அம்சம், பண்டைத் தமிழர் வாழ்வில் ஒரு இன்றியமையாத அம்சமாக இருந்தது என்பதைக் காட்டுகின்றன. திருப்பரங்குன்றக் கோவில் சித்திர மண்டபத்தில், ராசிச் சக்கரம் ஒளியாழி (‘சுடர் நேமி’) சித்திரமாகத் தீட்டப்பட்டு, அங்கு வழிபட வரும் மக்கள், கோள்நாட்கள் ஆகியவற்றின் நிலையை அறிய ஏதுவாக இருந்தது என பரிபாடல் தெரிவிக்கிறது.
‘என்றூள் உறவரும் இருசுடர் நேமி
ஒன்றிய சுடர் நிலை உள்படு வோரும்’ (பரிபாடல் - 19:46-47)
கோள்களின் நிலையின் அடிப்படையில், மழை வருமா என உரைக்கும் வழக்கம் தமிழகத்தில் உண்டு. மழைக்கோளாக வெள்ளி கருதப்பட்டது. அது, வடபக்கத்து தாழுமாயின் மழை உண்டாகும் என்றும், தெற்காக எழுந்தால் மழை இல்லை என்பதும் பண்டைத் தமிழரின் பாரம்பரிய அறிதல் ஆகும்.
‘வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர,
வறிது வடக்கு இறைஞ்சிய சீர்சால் வெள்ளி
பயம்கெழு பொழுதொடு ஆநியம் நிற்ப’ (பதிற்றுப்பத்து - 24:23-25)
ஆனால், நம் ‘பகுத்தறிவுவாதிகளோ’ இவை எதைக் குறித்தும் சிந்திக்கமாட்டார்கள். கோவிலில் ஏன் பஞ்சாங்கம் ஓத வேண்டும்? சாமிக்குத் தெரியாதா என அசட்டுத்தனமான கேள்வியைப் பகுத்தறிவுபோல கேட்பார்கள். இங்கே இவர்கள் செய்வது என்னவென்றால், ஒரு வகாபிய மசூதி போலவோ அல்லது ஒரு புரோட்டஸ்டன்ட் சர்ச் போலவோ அவர்கள் கோவிலை உருவகிக்கிறார்கள். இயன்றால், ஒட்டுமொத்தமாகப் பஞ்சாங்கத்தை ஒழித்துக்கட்டப் பார்ப்பார்கள். ஐரோப்பிய வழிபாட்டுத் தலங்களில் செய்யாத எதையும் இங்கே செய்வது தகாது.
இந்தப் போலி பகுத்தறிவு மனநிலை, இன்று அறிவியலாளர்களால் மறுதலிக்கப்பட்டு வருகிறது. துரதிர்ஷ்டவசமாக, நம் சமூக - பண்பாட்டுத் தளங்களில், அறிவியலுக்கும் பாரம்பரிய அறிவியலுக்குமான தொடர்பு சரியாக அறியப்படவில்லை. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏற்படும் சமுதாய மாற்றங்களில், நமக்கு உள்ளார்ந்த வலிமை கொடுக்கக்கூடிய சடங்குகளை, நம் கிராமியச் சடங்குகளிலிருந்து முன்னெடுக்க முடியும். ஆனால், அவை இன்று ஆபத்தில் இருக்கின்றன.
2013-ல், கர்நாடக அரசு ஒரு மசோதாவைக் கொண்டு வர உத்தேசித்தது. மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்துக்கான மசோதா அது. இப்போது, கல்புர்கி கொலையைத் தொடர்ந்து, அந்த மசோதாவைத் தூசி தட்டி எடுத்து, மீண்டும் சட்டமாக்க முயற்சிகள் நடக்கின்றன. எது மூடநம்பிக்கைகள் என அரசு முடிவு செய்யும். அவற்றைச் செய்யத் தூண்டுகிறவர்களைக் கைது செய்ய முடியும். ஒரு வருஷத்துக்குக் குறையாமல், ஐந்து வருஷங்கள் வரை சிறைத் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் ஐம்பதாயிரம் ரூபாய் வரைக்குமாக அபராதமும் விதிக்க முடியும். இதற்காக, மாவட்ட அளவிலான மூடநம்பிக்கை ஒழிப்புக் கமிட்டிகள் செயல்படும். இவற்றுக்கு, சிவில் நீதிமன்றத்துக்கான அதிகாரம் இருக்கும். இந்த மாவட்டக் கமிட்டியில் ஐந்து பேர் இருப்பார்கள். இவர்களின் பெரும்பான்மை முடிவுக்கு கமிட்டி கட்டுப்படும். இத்யாதி இத்யாதி. இந்த மசோதாவை தயாரித்தவர், முனைவர் எஸ். ஜாஃபேத். இந்த மசோதாவில், ‘மூடநம்பிக்கையால்’ பாதிக்கப்பட்டவர் ‘விக்டிம்’ (victim) என அழைக்கப்படுகிறார். அவர், உடலளவிலோ, மனத்தளவிலோ, பாலியல் ரீதியாகவோ, பண மோசடி மூலமாகவோ, அவரது சுயமரியாதைக்கு இழிவு என்ற நிலையிலோ பாதிக்கப்பட்டிருக்கலாம். அந்த ‘விக்டிம்’, மனமுவந்து இந்த விஷயத்தைச் செய்திருந்தார் என்பது இதில் ஒரு சமாதானம் ஆகாது.
இப்படி மாவட்ட ரீதியில் கமிட்டிகள் உருவாக்கப்பட்டு, அவற்றுக்கு விசாரணை அதிகாரமும் அளிக்கப்பட்டால், அதனால் எதையும் பகுத்தறிவற்றது என்றும், மூடநம்பிக்கை என்றும் முத்திரை குத்திவிட முடியும். குறிப்பாக, கிராமப் பாரம்பரியப் பழக்க வழக்கங்களை அவ்வாறு முத்திரை குத்திவிடுவது மிகவும் சுலபம். அவற்றுக்குள் பொதிந்துகிடைக்கும் சமூக உளவியல் பண்பாட்டு மானுடவியல் ஆகியவற்றைப் புரிந்து உள்வாங்கி, அவற்றை முன்னெடுப்பது கடினம். ஒரு பண்பாடாக, முன்னகர வேண்டிய ஒரு தேசமாக நாம் செய்ய வேண்டியது பின்னதுதான். பெரும்பாலான ‘மூடநம்பிக்கைகள்’, ஆழமான மதிப்பீடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. இயற்கைப் பேரிடர்கள், சமுதாயக் கொந்தளிப்புகள், பஞ்சங்கள், படையெடுப்புகள், பெரும் சோகங்கள் இவற்றிலிருந்து நிமிர்ந்து நிற்க, மானுடம் தன் ஆழங்களில் சென்று உருவாக்கிய சடங்குகள். இன்று அவற்றின் வடிவம் எதுவாக இருந்தாலும், அவற்றுக்குள் மானுட எழுச்சியின் கனல்தான் கனன்றுகொண்டிருக்கிறது. இவற்றை ‘மூடநம்பிக்கைகள்’ என முத்திரை குத்துவதும், நரபலி போன்ற குற்றங்களுடன் இணைப்பதும், காலனிய அரசியலின் தொடர்ச்சி. ஆனால், இதனால் நமக்கு நம்மை அறியாமலே பேரிழப்புகள் ஏற்படலாம்.
அலகு குத்துவது, தூக்கம் தூக்குவது (முதுகில் அலகு குத்தி, ஒரு மனிதர் உயரமாகத் தூக்கப்படும் சடங்கு) போன்ற சடங்குகளும், கர்நாடக அரசின் மூடநம்பிக்கை ஒழிப்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இது ஒரு காலனிய மரபின் தெளிவான தொடர்ச்சியும் நீட்சியும் ஆகும். பிரிட்டிஷ் ஆட்சியின்போது, அரசும் மிஷினரிகளும் இந்தச் சடங்குகளை மிகப்பெரிய பிரச்னையாகப் பார்த்தார்கள். இந்தச் சடங்குகளில் நடக்கும் விபத்துகள், துர்மரணங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்த உத்தரவிட்டார்கள். ‘தூக்கம்’ திருவிழா, பூக்குழி இறங்குதல் என்கிற ‘தீ மிதி’ ஆகியவை குறித்துப் பெரிய விசாரணை அறிக்கைகள் உருவாக்கப்பட்டன. 1854-ல், தஞ்சாவூர் மாவட்டப் பிரதேசங்களில் மட்டும் 415 இடங்களில் தீ மிதி விழா நடந்ததாக அறிக்கை கூறுகிறது. தஞ்சாவூரின் பிரிட்டிஷ் கலெக்டர், “இது விரைவில் வழக்கொழிந்து போய்விடும்” என, தன் உயரதிகாரிகளுக்கு நம்பிக்கை தெரிவித்தார்.
குறிப்பாக, அலகு குத்தும், ‘தூக்கம்’ திருவிழா போன்றவை, கிறிஸ்தவ மிஷினரிகளுக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தின என்கிறார், சமூகவியலாளர் நிகோலஸ் டிர்க்ஸ். கிறிஸ்துவின் பாடுகளைப் பெரிதுபடுத்திப் பிரசாரம் செய்ய இந்தச் சடங்கு கஷ்டத்தைக் கொடுத்ததாம். “உடல்ரீதியான வேதனையை இதோ ‘தூக்கத்தில்’ தொங்குபவர்கூடத்தான் பொறுத்துக்கொள்கிறார். பிறகென்ன…” எனவே, ‘தூக்கம்’ வேதனை எப்படி ஒழுக்கவியல் ரீதியாகவும், தத்துவார்த்த அளவிலும் ஏசு பட்ட வேதனையைவிடக் கீழ்மையானது என்றெல்லாம் விளக்கவேண்டிய வேலை மிஷினரிகளுக்கு வந்து சேர்ந்தது. பண்பாடில்லாத மூடநம்பிக்கை என்று மீண்டும் மீண்டும் சொன்னார்கள் அவர்கள். ஆங்கிலப் படிப்பு படித்து, ஆங்கிலேயர்களுக்கு உதவி அதிகாரிகளாக வீற்றிருந்த மேல்சாதிக்காரர்கள், தங்கள் எஜமானர்களுக்கு ‘எப்படி இந்தக் கீழ்சாதிச் சடங்குகளெல்லாம் எங்கள் உயர்ந்த தர்மத்தின் உறுப்புகளல்ல’ என்று விளக்கினார்கள். அவர்களும், இந்தத் தாய் தெய்வச் சடங்குகளுக்கு எதிரான சிலுவைப் போரில் கொடி பிடித்தார்கள்.
ஆனால் கிராமப்புற மக்கள், ஒட்டுமொத்தமாக சாதி வரைமுறையெல்லாம் இல்லாமல் சடங்குகளை ஆதரித்தனர். 1890-ல், வழம்பக்குடி என்கிற கிராமத்தில், ‘தூக்கம்’ திருவிழா நடந்ததை ஆராய்ந்த அரசு அறிக்கை, இந்த விழாவில் கிடைத்த பணத்தால், ‘சுவாமி அய்யர் என்கிற பார்ப்பனரும், பறையர்களும் ஓரளவு ஆதாயப்பட்டார்கள்’ என்று சொல்கிறது.
1894-ல், எல்.சி.முல்லர் என்கிற பிரிட்டிஷ் அதிகாரி, ‘தூக்கம்’ சடங்கை சோழவந்தானில் தடை செய்தார். அதற்கு எதிராக, சோழவந்தானைச் சேர்ந்த பார்ப்பனர்கள், பறையர்கள், பள்ளர்கள், முதலியார்கள், பிள்ளைகள் என அனைத்துச் சமுதாயப் பிரதிநிதிகளும் கையெழுத்திட்டு ஒரு கோரிக்கையைச் சமர்ப்பித்தார்கள். கோரிக்கை என்றாலும், அது ஒரு வலுவான ஆவணம். காலனியாதிக்கத்துக்கு உட்பட்ட ஒரு சமுதாய மக்கள், தங்கள் மீது பண்பாட்டு ஆதிக்கம் செலுத்தும் காலனிய அதிகாரிகளுக்கு அறிவுரீதியாக அளித்த வலுவான பதில் அது.
இந்தச் சடங்குகள் ‘காட்டுமிராண்டித்தனம்’ அல்ல. மக்கள் மனத்தில் திடமான இறை உணர்வையும் கருணையையும் கொடுப்பதாகவே இந்தச் சடங்குகள் உள்ளன. பொதுவாக, இதில் எவ்வித விபத்தும் ஏற்படுவதில்லை. மேற்கத்திய உலகின் கேளிக்கை விழாக்களில் நடக்கும் பலூன் பயணங்களில் ஏற்படும் விபத்துகளைக் காட்டிலும், இதில் நடக்கும் விபத்துகள் குறைவுதான். இதில் பங்கெடுப்பவர்கள், வலியை உணர்வதில்லை. அவர்கள் ‘மனிதத் தன்மையற்று’ போய்விடுவதில்லை. மாறாக, அவர்கள் மதிப்பினைப் பெறுகிறார்கள்; செல்வத்தைப் பெறுகிறார்கள். இந்தச் சடங்குகளெல்லாம் ஹடயோகம் போன்ற பழமையான தத்துவ அடித்தளம் கொண்ட சடங்குகள். கச்சிதமான வாதங்கள். இன்றைய தேதியில், பண்பாட்டு மானுடவியல் வந்தடைந்திருக்கும் பாதைக்கு முன்னோடியான பார்வை. ஆனால், அதிகாரத்தின் முன் உண்மைக்கு விலை இருக்கவில்லை. கோரிக்கை சென்றது குப்பைத் தொட்டிக்கு. திருவிழா தடை செய்யப்பட்டது.
கீர்த்தனா குமார் இயக்கிய ஆவணப்படமான ‘குஹ்யா’, மூடநம்பிக்கை என சொல்லப்படக்கூடிய பல விஷயங்களுக்குள் எப்படி உள்ளார்ந்த உடல் சார்ந்த ஒரு அடிப்படை ஆன்மிகம் இருக்கிறதென்பதைக் காட்டுகிறது. அரசு இயந்திரம் இந்தப் பாரம்பரிய விஷயங்களை அகற்றுவதென்கிற பெயரில், எந்த அளவுக்கு மனிதத்தன்மை இழந்து செயல்படுகிறது என்பதையும் அது வெளிக்கொணர்கிறது. வேப்பிலை ஆடை நேர்ச்சை செய்யும் ஐந்து வயது நிரம்பிடாத ஒரு சிறுமி. மூடநம்பிக்கையை ஒழிக்கிறோம் என்கிற பெயரில் அங்கு வரும் காவல்துறைப் பெண்மணிகள், அந்த சிறுமி வேப்பிலை ஆடைக்குள் உள்ளாடை போட்டிருக்கிறாளா என கையை விட்டுப் பார்க்கின்றனர். இல்லை என தெரிந்ததும், அச்சிறுபெண்ணின் அன்னையிடம், அந்த சிறுபெண்ணுக்கு ஆடை அணிவிக்க வேண்டுமென்றும், இல்லையென்றால் வழக்குப் பதிவு செய்வோம் என்றும் கூறுகின்றனர். நம் சமூக சீர்திருத்த, ‘பகுத்தறிவு’ப் பார்வைகள் பெரும்பாலும், 19-ம் நூற்றாண்டு மிஷினரி பார்வைகளாகவே இருப்பதை இந்த ஆவணப்படம் எடுத்துரைக்கிறது. பிராம்மணியம் - அபிராம்மணியம் போன்ற இரட்டை சட்டகங்களிலிருந்து இந்த ஆவணப்படம் விடுபடவில்லை யென்றாலும், இது எழுப்பும் கேள்விகள் முக்கியமானவை.
ஏன் நம் சமூகவியலாளர்கள், நம் உளவியலாளர்கள், காலனிய சட்டகத்திலிருந்து வெளியே வந்து நம் சடங்குகளை நோக்கமாட்டேன் என்கிறார்கள்? இந்தச் சடங்குகளிலெல்லாம் பிரச்னைகளே இல்லை என்று சொல்லிவிடவில்லை. கூத்தாண்டவர் கோவில் திருவிழா ஒரு காலனிய பார்வையில் எப்படி இருந்திருக்கும் என்பதையும், இன்று அதே திருவிழா மாற்றுப்பாலின அடையாளமாகவும் இருப்பதை நாம் காணலாம். ஒவ்வொரு சடங்கிலும் இந்தப் பொறி இருக்கிறது. அதைச் சுற்றி சமூகத் தேக்கநிலை உருவாக்கியிருக்கும் மாசுகளையும், நம் ‘பகுத்தறிவு’ பார்வையில் ஊறியிருக்கும் காலனியத்தையும் நாம் களைய வேண்டும்.
மேலதிக விவரங்களுக்கு -
Indigenous Rain Forecasting in Andhra Pradesh, CRIDA, 2008, தரவிறக்க - www.crida.in/Bulletins/Ranifed%20book%20final.pdf
Nicholas B. Dirks, Castes of Mind, Princeton University Press, 2001