17. விஷ விருட்சம் விதை விட்டது!
தொழிலாளர்களைச் சமாளிக்க முடியாமல் நாடு திணறிக் கொண்டிருந்தபோது இன்னொரு களத்தில் பூதாகாரப் பிரச்சனை தலை தூக்கியது. சீனர்களுக்குத் தங்கள் கலாச்சாரம், மொழி ஆகியவற்றின் மீது
தொழிலாளர்களைச் சமாளிக்க முடியாமல் நாடு திணறிக் கொண்டிருந்தபோது இன்னொரு களத்தில் பூதாகாரப் பிரச்சனை தலை தூக்கியது. சீனர்களுக்குத் தங்கள் கலாச்சாரம், மொழி ஆகியவற்றின் மீது பற்று அதிகம். ஆகவே, தங்கள் குழந்தைகள் சீன மொழியில் படிக்கவேண்டும் என்று விரும்பினார்கள். அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் மட்டுமே போதனா மொழி. ஆகவே, பல தனியார்கள், சீனர்கள், தங்களுக்கெனக் கல்வி நிலையங்கள் தொடங்கினார்கள். இங்கே படிப்பு வசதிகள், ஆசிரியர்கள் தரம் ஆகியவை மோசமானதாக இருந்தன. ஆனால், சீனர்களைப் பொறுத்தவரை, இவை வெறும் கல்வி நிலையங்கள் மட்டுமல்ல, அவர்களுடைய கலாச்சாரத்தின், தன்மானத்தின் அடையாளங்கள்.
சீன மக்களின் இந்த உணர்ச்சித் தொடர்புகளை அரசு புரிந்துகொள்ளவில்லை. தரக்குறைவான இந்தப் பள்ளிகள் அனைத்தையும் மூடவேண்டுமென்று ஆணையிட்டது. சீனப் பள்ளிகள் மறுத்தன. அவர்களுக்குக் கம்யூனிஸ்ட்கள் ஆதரவு தந்தார்கள். இடதுசாரிகளின் உதவும் கரங்களுக்குக் காரணம், சீன மக்கள்மீது கொண்ட கவலையல்ல, தங்கள் பலத்தை வளர்க்கும் பச்சை சுயநலம்.
அரசு வேலைகள் ஆங்கிலத்தில் படித்தவர்களுக்கு மட்டுமே கிடைத்தன. சீனப் பள்ளி மாணவர்களுக்கு வேலைக்கு விண்ணப்பிக்கும் தகுதி கூடக் கிடையாது. இந்த மாணவர்கள் விரக்தி கொண்டார்கள். கோபம் கொண்டார்கள். அரசுக்கும், வசதி படைத்தவர்களுக்கும் எதிராக வன்முறையைப் பயன்படுத்துவது மட்டுமே விடிவு தரும் என்று இடதுசாரிகள் அவர்களுக்கு மூளைச்சலவை செய்தார்கள். இதனால், சீனப் பள்ளிகள் கம்யூனிஸம் வளரும் நாற்றங்கால்களாயின. ஏராளமான மாணவர்கள் இயக்கத்தில் அங்கத்தினர்கள் ஆனார்கள். மற்றவர்கள் அனுதாபிகள்.
Advertisement
சீனப் பள்ளிகளை மூடிவிட்டால், தங்கள் வளர்ச்சியும், கிளர்ச்சிப் படையும் குறுகிவிடும் என்பதுதான் கம்யூனிஸ்ட்கள் கொடுத்த ஆதரவுக்கு ஒரே காரணம். இந்த இரட்டை முகத்தை லீ புர்ந்துகொண்டார். ஏனென்றால், இந்த ‘வாய்ச்சொல் வீரர்’களான தலைவர்கள் தங்கள் குழந்தைகளைச் சீனப் பள்ளிகள் பக்கமே நெருங்கவிடவில்லை. ஆங்கிலக் கல்வி நிலையங்களுக்கு மட்டுமே அனுப்பினார்கள். ஊருக்கு உபதேசம்!
பள்ளிகள் விவகாரம் எரிமலையாகிக் கொண்டிருப்பதை அரசு உணர்ந்தது. ஏற்கெனவே, தொழிலாளர் பிரச்சனை கொழுந்துவிட்டு எரிகிறது. பள்ளிகளும் போராட்டம் நடத்தினால் நாடு தாங்காது. கல்வித் திட்டத்தை ஆராய்ந்து என்னென்ன அடிப்படை மாற்றங்கள் செய்யலாம் என்று ஆலோசனைகள் சொல்ல, முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் கொண்ட ஒரு கமிட்டி அமைத்தது.
மிகுந்த விருப்பத்தோடு லீ இந்தக் குழுவின் அங்கத்தினரானார்.
ஆங்கிலப் பள்ளிகளிலும், சீன மொழிப் பள்ளிகளிலும், படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை வருடா வருடம் மாறுகிறதா என்று லீ ஆராய்ந்தார். 1950 – ம் ஆண்டில், ஆங்கிலப் பள்ளிகளைவிடச் சீனப் பள்ளிகளில் 25,000 அதிக மாணவர்கள்: ஐந்தே ஆண்டுகளில், தலைகீழ் மாற்றம். 1955 – ம் ஆண்டில், சீனப்பள்ளிகளைவிட ஆங்கிலப் பள்ளிகளில் 5,000 அதிக மாணவர்கள். மொழிப்பற்று முக்கியம்தான், ஆனால் வாழ்வாதாரமான ஆங்கிலக் கல்வி அதைவிட முக்கியம் என்பதால், விருப்பமில்லாமலே, தங்கள் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிகளுக்கு அனுப்பினார்கள். வயிற்றுப் பிழைப்புக்காக மொழியைப் பலி கொடுக்கிறோமே என்று குமுறினார்கள்.
எந்த இனத்தவரின் உணர்வுகளையும் புண்படுத்தாமல், அதே சமயம் அவர்களுக்கு வேலை வாய்ப்புக்களும் தரமான கல்விமுறையில் என்ன செய்யலாம் என்று லீ சிந்தித்தார்.
மும்மொழிக் கல்வித் திட்டம்தான் ஒரே வழியாக லீக்குத் தெரிந்தது. தாய்மொழி: தேசீய மொழியாக மலாய்: வர்த்தகத்துக்கும், அறிவியலுக்கும் ஆங்கிலம். இதன்படி, ஆங்கிலப் பள்ளிகளில் போதனா மொழியாக ஆங்கிலம் இருக்கும். அதே சமயம், சீனம், மலாய், தமிழ் (அல்லது தேவைக்கு ஏற்றபடி இந்தி, பஞ்சாபி போன்ற பிற இந்திய மொழிகள்) மொழி அறிவுக்காகக் கற்பிக்கப்படவேண்டும். சீன ஆரம்பப் பள்ளிகளில், சீன மொழியோடு ஆங்கிலம் அல்லது மலாய் கட்டாயப் பாடம். நடுநிலைப் படிப்பில் இரண்டு மொழிகளும் கட்டாயம். மலாய் ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பித்தேயாக வேண்டும். நடுநிலைப் படிப்பில், மாணவர்கள் தேவைக்கு ஏற்பச் சீன, இந்திய மொழி படிக்கும் வசதிகள் தரவேண்டும். சிக்கலான தீர்வுதான். ஆனால், ஆங்கில ஆட்சி, சீனர்கள், மலாய்கள், தமிழர்கள், வட இந்தியர்கள், பஞ்சாபிகள் எனப் பல இனங்கள், மொழிகள் – இவை அத்தனையையும் திருப்திப்படுத்த வேறு சுலப வழிகள் இருக்கவில்லை.
சிங்கப்பூர் வரலாற்றில் இது மைல்கல் என்று லீ உணர்ந்தார். எத்தனைதான் உயர்கல்வி கற்றாலும், தாய்மொழி அறிவு முக்கியம் என்பதைத் தன் அனுபவ ரீதியாக விளக்கினார். ‘நான் குடும்பத்தாரால் ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்பப்பட்டேன். ஆங்கிலேயருக்குச் சமமாக நான் வரவேண்டும் என்னும் கனவுகளோடு. ஆனால், படிப்பை முடித்தபின், என் கல்வியில் அடிப்படைக் குறை இருப்பதை உணர்ந்தேன்.’
லீ தன் அனுபவத்தை இந்தியாவின் நேருஜியோடு ஒப்பிட்டார். ‘ஆங்கிலம் பேசுவதைப்போல் தாய்மொழியைப் பேச முடியவில்லையே என்று நேரு அழுதாராம்.....நான் அப்படி அழவில்லை ...ஆனால் என் உணர்ச்சிகள் அவருக்குக் குறைவானதல்ல. என் மகன் ஆங்கிலப் பள்ளிக்குப் போகமாட்டான்*.’
லீயை அறிந்த அத்தனை பேருக்கும் ஆச்சரியம். அவருடைய தாத்தா ஆங்கில மோகத்தில் ஊறியவர். அப்பா பன்னாட்டு நிறுவன ஊழியர். லீயும் ஆங்கிலேய ராஃபிள்ஸ் பள்ளியிலும், கல்லூரியிலும் படித்தவர், இங்கிலாந்தில் சட்டப் படிப்பு முடித்தவர். இப்படிப்பட்ட மனிதர் ஆங்கிலப் படிப்புக்குக் கொடி பிடிப்பார் என்றுதான் நினைத்தார்கள். அவருடைய மும்மொழி நிலைப்பாட்டை யாருமே எதிர்பார்க்கவில்லை
லீயின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டது. கல்வித் திட்டத்தில் மும்மொழி போதனாமுறை அறிமுகமானது. முதலமைச்சர் மார்ஷல் இன்னும் ஒரு அடி முன்னால் போனார். ஆட்சியிலும் தாய்மொழிகளுக்கு அரியாசனம் போட்டார். அசெம்பிளியில் ஆங்கிலம் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது . இதனால், ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரிந்தவர்கள் மட்டுமே, தங்கள் தொகுதி மக்களின் பிரச்சனைகளை அவையில் தெரிவிக்க முடிந்தது. பெரும்பாலான
மக்களால் விவாதங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. தங்கள் மன்றத்திலேயே அந்நியர்களாக இருந்தார்கள். மார்ஷல் தீர்மானம் கொண்டுவந்தார், ‘இனிமேல் ஆங்கிலம், சீன மாண்டரின், மலாய், தமிழ் ஆகிய நான்கு மொழிகளிலும் பிரதிநிதிகள் பேசலாம்.’
முதலமைச்சர் மார்ஷல் எடுத்த இத்தகைய பல முடிவுகள் பிரிட்டீஷாருக்குப் பிடிக்கவில்லை. அவருக்கும், பிரிட்டீஷ் பிரதிநிதியான கவர்னருக்கும் அடிக்கடி, உரசல்கள் வந்தன. இதுதான் தருணம் என்று மார்ஷல் அசெம்பிளியில் தீர்மானம் கொண்டுவந்தார், ‘பிரிட்டீஷார் உடனேயே வெளியேறவேண்டும். சிங்கப்பூருக்குச் சுயாட்சி தரவேண்டும்.’ லீ மட்டுமல்ல, மிதவாதிகளான
*லீ சொன்னதைச் செய்பவர். தன் இரண்டு மகன்கள், ஒரு மகள் ஆகிய மூவரையும், சீன ஆரம்பப் பள்ளிகளில்தான் சேர்த்தார்.
ப்ரொக்ரெஸிவ் கட்சியினரும் ஆதரித்தார்கள். தீர்மானம் நிறைவேறியது. லண்டனுக்கு வந்து விவரங்களைக் கலந்து ஆலோசிக்குமாறு இங்கிலாந்து அரசு அழைத்தது.
சிங்கப்பூரின் தலைவிதியை மட்டும் தனியாகத் தீர்மானிக்க முடியாத நிலை. தொப்பிள் கொடி இரட்டையர் போல் அண்டைய மலாயாவையும் உடன் சேர்த்துக் கணக்குப் போடவேண்டிய கட்டாயம். ஆனால், மலாயா சிங்கப்பூரைத் தனக்குச் சமமானதாக நினைக்கவில்லை. ‘நாம் பெரிய நாடு. சிங்கப்பூர் வெறும் சுண்டைக்காய் நகரம்’ என்று கொஞ்சம் ஏளனமாகப் பார்த்தது. இதன் அடையாளச் சின்னமாக இருந்தார், மலாயா முதலமைச்சர் United Malays National Organisation (சுருக்கமாக UMNO - உம்னோ) கட்சித் தலைவர் துங்கு அப்துல் ரஹ்மான். முன்னாள் மலாயா சுல்தானின் மகன். ஆகவே, உயர்வு மனப்பான்மை அவர் ஆளுமையின் முக்கிய அம்சமாக இருந்தது.
மலாயா, சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளுக்கும் இங்கிலாந்து சுயாட்சி வழங்கவேண்டும், சம அந்தஸ்து தரவேண்டும் என்பது மார்ஷலின் உரிமைக் குரல். அப்படிச் செய்தால், மலாய்களின் நலன் பாதிக்கப்படும் என்று துங்கு மறுத்தார். ஆனால், இரு நாடுகளின் ‘ஒத்துழைப்பு’ பற்றிச் சிங்கப்பூரோடு பேச்சு வார்த்தைகள் நடத்தத் தயார் என்று ‘ஒத்துழைப்பு’ என்னும் வார்த்தையை ‘இரு நாடுகளின் இணைப்பு’ என்று சிங்கப்பூர் மக்கள், ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் ஆகிய அனைவரும் நினைத்தார்கள். மகா சாமர்த்தியசாலியான லீயும்தான்.
சிங்கப்பூரின் வருங்காலம் பற்றியும், சுயாட்சி பற்றியும், பிரிட்டீஷ் ஆட்சியாளரிடம் இரண்டுவிதமான சிந்தனைகள் இருந்தன – ஒன்று சுதந்திர மலாயாவோடு இணைப்பது, இரண்டாவது தனி நாடாக்குவது. சிங்கப்பூர் சிறிய நாடு, இயற்கை வளங்களே இல்லாத நாடு. ஆகவே, அவர்களால் தனியாக இயங்கமுடியாது. சீன மக்களும் அதிகமாக வசிப்பதால், சீனாவால் கபளீகரம் செய்யப்படும். சீனா வல்லரசாக இந்த ஆதிக்கம் வழி வகுக்கும் என்று இங்கிலாந்து கணித்தது. ஆகவே, மலாயோவோடு இணைப்பதுதான் இங்கிலாந்தின் திட்டம்.
துங்குவுக்கு இந்த இரண்டு தீர்வுகளுமே சம்மதமில்லை. மலாய்க்கு சமமாக, போட்டியாகச் சிங்கப்பூர் வளருவதை அவர் விரும்பவில்லை. சிங்கப்பூர் பிரிட்டிஷ் காலனியாகத் தொடரவேண்டுமென்று விரும்பினார். அவர் கணக்கு, தெளிவான கணக்கு. தேசப்பற்றுள்ள எந்த மலாயும் போடும் கணக்கு. அதே சமயம் துங்கு மலாயா விடுதலைக்காகப் போராடினார். தன் முயற்சிகளில் ஜெயித்தார். ஆகஸ்ட் 31, 1957. பிரிட்டீஷார் மலாயாவுக்குச் சுதந்திரம் கொடுத்தார்கள். இப்போது மலாயா தனி நாடு. துங்கு முதல்வர்.
மலாயாவோடு தங்களை இணைப்பார்கள், ஆங்கில ஆதிக்கம் விலகும், நமக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்பிய லீக்கும், மற்றவர்களுக்கும் ஆசையில் இடி விழுந்தது. எதிர்காலம் கேள்விக்குறிகளாகத் தெரிந்தது. அதே சமயம், மலாயாவுக்கு நிகரான சுயாட்சி தவிர வேறு எதையும் ஒத்துக்கொள்வதில்லை என்று எல்லாக் கட்சிகளும் முடிவு செய்தார்கள். மக்கள் ஆதரவைத் திரட்ட முடிவு செய்தார்கள். சுதந்திரத்துக்கு ஆதரவான மகஜர் தயார் செய்தார்கள். 1,70,000 சிங்கப்பூரியர்களிடம் கையெழுத்து வாங்கினார்கள். எல்லாக் கட்சிகளும் கையெழுத்திட்ட சகல கட்சிக் கோரிக்கை தயாரானது. இங்கிலாந்தின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்தார்கள். மக்கள் மகஜரையும், சகல கட்சிக் கோரிக்கையையும், முதலமைச்சர் இந்தக் குழுவிடம் சமர்ப்பித்தார்.
இங்கிலாந்துப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தங்கள் பிரதமரிடம் சொன்னார்கள் ‘உடனே நடவடிக்கை எடுக்காவிட்டால், நிலைமை கட்டுக்கு அடங்காமல் போய்விடும்.’ பேச்சு வார்த்தைகளுக்கு வருமாறு சிங்கப்பூர் அரசியல் கட்சிகளுக்கு இங்கிலாந்து அரசு அழைப்பு விடுத்தது. 13 பேர் கொண்ட இந்தத் தூதுக்குழுவில் லீ ஒருவர்.
‘சுயாட்சி தருகிறோம். ஆனால், உள்நாட்டுப் பாதுகாப்பும், வெளிநாட்டு உறவுகளும் எங்கள் கைகளில் இருக்கும்’ என்று இங்கிலாந்துக் குழு சொன்னது. இதை ஏற்கலாம், மெள்ள மெள்ள முழுச் சுதந்திரம் பெறலாம்’ என்பது லீயின் அணுகுமுறை. இதற்கு மார்ஷல் சம்மதிக்கவில்லை. உடனேயே முழுச் சுதந்திரம் தராவிட்டால் பதவியைத் தூக்கி எறிவேன் என்று சவால் விட்டார். இது முட்டாள்தனம் என்று லீ நினைத்தார். மார்ஷல் தலைமையேற்று வந்திருக்கும் தூதுக் குழுவை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். சிங்கப்பூர் திரும்பினார்.
மார்ஷல் ஆலோசனைக்கு இங்கிலாந்து சம்மதிக்கவில்லை. பேச்சு வார்த்தைகள் முறிந்தன. இதை மானப்பிரச்சனையாகக் கருதிய மார்ஷல் தன் பதவியை ராஜிநாமா செய்தார். லிம் என்பவர் முதலமைச்சரானார்.
உடனேயே முழுச் சுதந்திரம் தர இங்கிலாந்து சம்மதிக்காது என்று லிம் நினைத்தார். பிற கட்சியினரும் அவரோடு ஒத்துக்கொண்டார்கள். தங்கள் கோரிக்கைகளின் வீரியத்தைக் குறைத்துக்கொண்டார்கள். லிம் அசெம்பிளியில் தீர்மானம் கொண்டுவந்தார், ‘உள்நாட்டு விவகாரங்கள், வாணிபம், கலை சமபந்தப்பட வெளிநாட்டு உறவுகள் ஆகியவற்றில் முழு உரிமைகள், அதிகாரங்கள், சலுகைகள் ஆகியவை கொண்ட சுயாட்சியை மாட்சிமை பொருந்திய மகாராணியார் அரசிடமிருந்து பெறவேண்டும்.’ இந்தத் தீர்மானம் நிறைவேறியது.
லண்டன் போய் உடன்படிக்கை காண 5 பேர் கொண்ட குழு. இதில், அரசு சார்பில் மூவர், PAP சார்பில் லீ, மலாயப் பிரதமர் துங்குவின் உம்னோ கட்சி சார்பில் ஒருவர். ஆங்கில ஆதிக்கத்திலிருந்து விடுபடும் புதிய அரசு கடைப்பிடிக்கவேண்டிய அரசியல் சட்டத்தை இந்தக் குழு வடிவமைத்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 51 பேர் கொண்ட அசெம்பிளி. தேர்தலில் பெரும்பான்மை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும். வெளிநாட்டு உறவுகள், பாதுகாப்பு தவிர்த்த பிற எல்லா அம்சங்களும், இந்த அசெம்பிளியிடம் இருக்கும். உள்நாட்டுப் பாதுகாப்புக்கும், வெளிநாட்டுப் பாதுகாப்புக்கும் தொடர்பு இருக்கும் சமாச்சாரங்களை, உள்நாட்டுப் பாதுகாப்புக் கவுன்சில் (Internal Security Council) கையாளும். இந்தக் கவுன்சிலில் மூன்று அங்கத்தினர்கள் பிரிட்டீஷ் அரசின் பிரதிநிதிகள். அவர்களுள் ஒருவர் தலைவராக இருப்பார்: சிங்கப்பூர் சார்பாக முதலமைச்சர், மற்றும் இருவர்: மலாயா சார்பாக ஒருவர். .
லண்டனில் பேச்சு வார்த்தைகள் தொடங்கின. பிரிட்டீஷ் அரசு அனைத்தையும் ஒத்துக்கொண்டார்கள். ஆனால், ஒரு நிபந்தனை போட்டார்கள் – சதிவேலைகளில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவாயிருக்கும் யாரும் தேர்தலில் நிற்கக்கூடாது. கம்யூனிஸ்ட்களைத் தேர்தலிலிருந்து விலக்கவேண்டும் என்பது இதன் மறைமுக அர்த்தம். லீ கம்யூனிஸ்ட்களின் எதிரிதான். ஆனாலும், கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். ‘இது ஜனநாயகத்துக்குப் புறம்பானது. இன்று கம்யூனிஸ்ட்கள் தேர்தலில் நிற்கக்கூடாது என்று சொல்கிறீர்கள். இதே பாணியில் மற்றக் கட்சிகளையும் தடுக்கமாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?’ இந்த நிபந்தனை ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கிவிடும் என்பது லீ வாதம்.
லீ கருத்துகளைப் பிறர் ஏற்கவில்லை. தான் முரட்டுப் பிடிவாதமாக இருந்தால், பேச்சு வார்த்தைகளே முறியும் அபாயம். லீ இணங்கினார். உடன்படிக்கை கையெழுத்தானது. தூதுக் குழு சிங்கப்பூர் திரும்பினார்கள். மக்கள் முழு விடுதலையை எதிர்பார்த்திருந்தார்கள். ஆகவே, வரவேற்பில் ஆரவாரமில்லை, உற்சாகமில்லை, உணர்ச்சி முழக்கங்களில்லை.
பொதுக்கூட்டம். முதலமைச்சரும், பிற தூதுக் குழு உறுப்பினர்களும் பேசியபின் லீ வந்தார். மலாய் மொழியில் பேசினார். ‘எங்களால் வாங்கிக்கொண்டுவர முடிந்தது முக்கால் சுதந்திரம்தான். ஆனால், சிங்கப்பூரைப் போன்ற ஒரு சிறிய நாட்டுக்கு எடுத்த எடுப்பிலேயே முழுச் சுதந்திரம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம். அதற்கு ஒரே வழி, மலாயாவோடு இணைவதுதான்.’ ஆமாம், சிங்கப்பூரால் தனிச் சுதந்திர நாடாகச் சமாளிக்கமுடியாது என்பது அன்று அவர் எண்ணம்.
ஆனால், லீ கை கோர்க்க நினைத்த கை அவரை உதறித்தள்ள நினைத்துக் கொண்டிருந்தது. மலாயக் கம்யூனிஸ்ட்களை அடக்கி ஒடுக்கத் துங்கு முடிவெடுத்தார். ஐந்து லட்சம் பேர் கொண்ட எதிர்ப்புப் படையைத் திரட்டத் தொடங்கினார், இவர்கள் அத்தனை பேரும் மலாய்கள். பெரும்பாலான கம்யூனிஸ்ட்கள் சீனர்கள். இதனால், மலாய் அரசின் நடவடிக்கை மலாய் – சீன இனக் கலவரங்களுக்கு வழிவகுக்கும் என்று லீ பயந்தார். தன் பயத்தை அறிக்கையாக வெளியிட்டார்.
’என் நாட்டு விவகாரத்தில் தலையிட நீ யார்? என்று துங்கு கொதித்தார். . கம்யூனிஸ்ட்களோடும், PAP கட்சியோடும் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டேன் என்று கர்ஜித்தார்.
லீ, துங்கு இருவருக்குமிடையே அவநம்பிக்கை விதை விழுந்துவிட்டது. அது விரைவில் வேர் விடும், விருட்சமாகும், கிளை பரப்பும், விழுதுகள் விடும். அதன் கசப்புக் கனிகள் பல வருங்காலச் சந்ததிகளைப் பாதிக்கும்.
(தொடரும்)