முகப்பு
லீ குவான் யூ

18. நாளை நமதே!

சிங்கப்பூரின் முன்னேற்றம்தான் லீயின் லட்சியம். அவரைப் பொறுத்தவரை, இந்தக் கனவு நனவாக, மூன்று செயல்பாடுகள் தேவை – பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றுச் சிங்கப்பூரைச் சுதந்திர

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பகிர்:

சிங்கப்பூரின் முன்னேற்றம்தான் லீயின் லட்சியம். அவரைப் பொறுத்தவரை, இந்தக் கனவு நனவாக, மூன்று செயல்பாடுகள் தேவை – பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றுச் சிங்கப்பூரைச் சுதந்திர நாடாக்கவேண்டும்: மலாயோவோடு இணக்கம் வேண்டும்; பொருளாதார வளர்ச்சிக்கும், நாட்டின் அமைதிக்கும் தடைக்கற்களாக இருக்கும் கம்யூனிஸ்ட்களைத் தரை மட்டமாக்கவேண்டும். 

சிங்கப்பூர் அரசுக்கும், கம்யூனிஸ்ட்கள்தாம் முக்கிய எதிரிகள். அவர்கள்  மேல் அடக்குமுறை ஆயுதத்தை ஏவத் தொடங்கியது. தொழிற்சாலை மற்றும் கடைகள் தொழிலாளிகள் சங்கம், ஆரம்பப் பள்ளிகள் ஆசிரியர்கள் சங்கம், சீன நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சங்கம், சீனப் பள்ளிகள் பெற்றோர்கள் சங்கம் போன்ற கம்யூனிஸச் சாயல் கொண்டவை என்று சந்தேகம் வந்த ஏராள அமைப்புகளைத் தடை செய்தது. பல பள்ளி ஆசிரியர்கள், ஒரு தலைமை ஆசிரியர், 142 மாணவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்கள்.

இந்த அராஜகத்தை எதிர்த்து தேவன் நாயர் 95 தொழிற்சங்கங்களின் மாநாடு கூட்டினார். 700 பிரதிநிதிகள் வந்தார்கள். அரசாங்கம் அடக்குமுறையை இன்னும் கடுமையாக அவிழ்த்துவிட்டது. முக்கிய கட்சியான PAP, அதுவும் யூனியன்களின் தோழர் தேவன் நாயர் அங்கமாக இருக்கும் PAP சும்மா இருக்கமுடியுமா? பெரிய மைதானத்தில் பொதுக்கூட்டம். லீ தேவன் நாயர் இன்னும் பல பிரபலங்கள் மேடையில். முதலமைச்சர் லிம் மீது காரசாரமான தாக்குதல். கூட்டம் அமைதியாக நடந்தது. ஆனால், கூட்டம் முடியும் இறுதி நிமிடங்களில், அமைதிக்குப் பின் கோரப் புயல். ஒரு பெரிய கும்பல் கூட்டத்திலிருந்து பிய்த்துக்கொண்டு போனார்கள். கொண்டு வந்திருந்த லாரிகளில் வேக வேகமாக ஓடி ஏறினார்கள். லீ மனதில் குறளி சொன்னது, ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது.   

Advertisement

நடந்தது. சிறிது தூரம் தள்ளி இருந்தது சுங் செங் என்னும் சீன உயர்நிலைப் பள்ளி (Chung Cheng High School). அங்கே, சுமார் 500 பேர் கொண்ட கும்பல் அருகிலிருந்த அஞ்சல் அலுவலகத்தையும், காவல் நிலையத்தையும் தாக்கினார்கள். போலீஸ் தடியடி நடத்தினார்கள். கண்ணீர்ப் புகை. ஓடிய கூட்டம் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரத்தைத் தொடர்ந்தார்கள். நள்ளிரவில், மக்கள் யாரும் பொது இடங்களில் கூடக்கூடாது என்னும் தடை உத்தரவை (Curfew) அரசாங்கம் பிறப்பித்தது.

மறுநாள் காலை. போலீசார்  ஏகதேசம் எல்லாச் சீனப் பள்ளிகளுக்கும் பெரும்படையோடு போனார்கள். பெற்றோர்கள் குழந்தைகளைக் கொண்டுவிடும் நேரம். பத்தே நிமிடங்களில் வெளியேறுமாறு பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு ஆணையிட்டார்கள். மிரட்டல் பலிக்கவில்லை. பள்ளிகளுக்குள் போலீஸ் புகுந்தார்கள். பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் என்று எல்லோர் மீதும் கண்மூடித்தனமான லத்தி அடி. கண்ணீர்ப் புகை.

நாடு முழுக்கக் கலவரம் பரவியது. நிலைமை கட்டு மீறிக்கொண்டிருந்தது. அரசாங்கம் போலீசோடு ராணுவத்தையும் களம் இறக்கினார்கள். மக்களுக்கும் இவர்களுக்குமிடையே போர். இரண்டு பள்ளிகள் தரைமட்டமாயின. இரண்டு காவல் நிலையங்கள் சேதம். 70 கார்கள் அக்னிதேவனுக்கு அர்ப்பணம், 13 பேர் மரணம், 123 பேர் படுகாயம். அரசாங்கம் 1000 பேரைக் கைது செய்தது. ஆயிரத்தில் ஒருவர் தேவன் நாயர்.

வன்முறை மூலம் கம்யூனிஸ்ட்களை அடக்க முயல்வது முட்டாள்தனம் என்று லீ நினைத்தார். கம்யூனிஸ்ட்களை அடக்கும் முயற்சிகளை லீயும் எடுத்தார். ஆனால், அவர் ஸ்டைல் தனி ஸ்டைல் PAP – இல் உட்கட்சித் தேர்தல்கள் வந்தன. தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் எனப் பன்னிரெண்டு பேரைத் தேர்ந்தெடுக்கவேண்டும். லீ அணி சார்பாக 8 வேட்பாளர்கள். இடதுசாரிகள் சார்பிலும் 8 போட்டியாளர்கள். தேர்தல் நடந்தது. லீ எதிர்பார்த்தது போலவே, கம்யூனிஸ்ட்கள் தங்கள் ஆதரவாளர்களைக் கொண்டுவந்து குவித்தார்கள். தேர்தல் முடிந்தது. இரு அணியினருக்கும் சம வெற்றி, ஆறு இடங்கள்.

லீயும், அவர் அணியினரும் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய மூன்று பதவிகளில் அமர்வார்கள், செயற்குழு உறுப்பினர்களாகப் பின்னணியில் இருந்து கட்சியை இயக்கலாம், உட்குத்து வேலைகள் செய்து மெள்ள மெள்ள லீயின் புகழையும், மக்கள் ஆதரவையும் சரிக்கலாம் என்பது எதிரணித் திட்டம். ஆனால், லீ அடுத்து நகர்த்தியது காய் அல்ல, அணுகுண்டு.  

பெரும்பான்மை கிடைக்காததால், நாங்கள் அறுவரும் ராஜிநாமா செய்கிறோம், எதிர் அணியினர் கட்சியை நடத்தட்டும் என்று லீ அறிவித்தார். கம்யூனிஸ்ட்கள் திரைமறைவாகத்தான் கட்சியை  இயக்கத் திட்டமிட்டிருந்தார்கள். தலைமைப் பதவிகள் ஏற்றுக் கட்சியை நடத்தினால், சூழ்ச்சிகள் செய்யமுடியாது, மக்கள் முன் முகமூடிகள் கிழிந்துவிடும். ஆகவே,  வேறு வழியில்லை. ராஜிநாமாவைப் பின் வாங்குமாறு லீயைக் கெஞ்சினார்கள்.

அவர் மறுத்துவிட்டார். இப்போது PAP கட்சி இடதுசாரிகள் கையில். அவர்கள் செயல்பாடுகள் அத்தனையும் திரைமறைவில் அந்தரங்கத்தில் அல்ல, பொதுமக்கள் முன் பகிரங்கமாக. சதிகளோ, சூழ்ச்சிகளோ செய்ய முடியாது. உடனேயே அம்பலமாகிவிடும்,    

PAP கம்யூனிஸ்ட்களின் கூடாரமாக மாறுவதாக அரசாங்கம் குற்றம் சொன்னது. கட்சியின் தலைவர், உயர்மட்ட நிர்வாகிகள், 12 யூனியன் தலைவர்கள், 4 பத்திரிகையாளர்கள், என 35 பேரைக் கைது செய்தது. PAP கட்சியைக் கம்யூனிஸ்ட்கள் ஊடுருவிவிட்டார்கள் என்று வெள்ளை அறிக்கை வெளியிட்டது. தான் எதைச் செய்ய நினைத்தாரோ, அந்தக் ‘கம்யூனிஸக் களையெடுப்பை’ அரசாங்கம் செய்யவைத்துவிட்டார் ராஜதந்திரி லீ.

PAP கட்சியில் ஏராளமான இளைஞர்களும், மாணவர்களும், கம்யூனிஸ அங்கத்தினர்களாக, அனுதாபிகளாக இருந்தார்கள். அவர்களின் மானசீகத் தலைவர்கள் சிறைக்குள். வெற்றிடமாக இருந்த அவர்கள் மனங்களில் இடம் பிடிக்கப் பாய்ந்து வந்தன லீயின் பல திட்டங்கள். சீன இளைஞர்கள்மீது தன் செயல்பாடுகளை ஒருமுகப்படுத்தினார். கட்சிக் கிளை அலுவலகங்களில் பல பயிற்சி வகுப்புக்கள் தொடங்கின - பாட்டு, நடனம், நாடகம் எனப் பலவகை கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சமையல், தையல், ரேடியோ ரிப்பேர் என வகை வகையான வகுப்புக்கள். இவை அத்தனையும் சீன மொழியில் மட்டும்தான்.     

லீ நடத்திய இந்தப் பயிற்சிப் பாசறைகளில், கம்யூனிஸம் வன்முறையானது, சிங்கப்பூருக்கு அமைதி வழியில், ஜனநாயக நெறியில் முன்னேற்றம் கொண்டுவரும் சக்தி கொண்ட ஒரே கட்சி PAP தான் என்னும் கருத்துக்கள்  பதியவைக்கப்பட்டன.   

அடுத்ததாக, ‘கம்யூனிஸ்ட்கள் தயவில்லாமல் தன் காலிலேயே நிற்கும் திராணி PAP கட்சிக்கு இருக்கிறது’ என்று ஜனநாயக ரீதியாக நிரூபிக்கவேண்டும். லீ தன் அசெம்பிளி சீட்டை ராஜிநாமா செய்தார். லீ 67.5 சதவிகித வாக்குகள் வாங்கி, எதிர்த்து நின்ற இரு வேட்பாளர்களைப் படுதோல்வி அடையச் செய்தார் லீ. லீயின் நேர்மைக்கும், ராஜதந்திரத்துக்கும் கிடைத்த இந்த வெற்றி, சிங்கப்பூர் மக்களை விழிக்கவைத்தது, புதிய பாதை போடும் தலைவர் வந்துகொண்டிருக்கிறார்.  

சிங்கப்பூர் நகராட்சிப் பிரதிநிதிகள் தேர்தல் வந்தது. மக்களிடம் தன் செல்வாக்கை மறுபடியும் நிரூபிக்கவும், கம்யூனிஸ்ட்களை அரசியல் அரங்கிலிருந்தே துரத்தவும் லீ திட்டம் தீட்டினார். இது, ‘எதிரியின் எதிரி என் நண்பன்’ என்னும் வியூகம். சிங்கப்பூர் முதலமைச்சர் லிம் தலைமை வகித்த லேபர் கட்சி, மலாயா முதல்வர் துங்குவின் உம்னோ கட்சி ஆகிய இருவருடனும், லீக்குச் சுமுக உறவு கிடையாது. ஆனாலும், இருவரோடும் கூட்டணி அமைத்தார்.

முடிவுகள் வந்தன. லேபர் கட்சிக்குப் பெரும் தோல்வி. போட்டியிட்ட 16 தொகுதிகளில், 4 இடங்களில் மட்டுமே ஜெயித்தது. உம்னோ போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும்: பிற எதிர்க்கட்சிகள் 11; சுயேச்சைகள் 2. PAP போட்டியிட்ட 14 தொகுதிகளில் 13 இடங்களில் வெற்றிக்கொடி நாட்டியது. தன் கட்சிதான் பெரும்பான்மையான மக்கள் ஆதரவு கொண்ட தனிக்காட்டு ராஜா என்று லீ நிரூபித்துவிட்டார். அபாரத் திறமைசாலி, அற்புதப் பேச்சாளர், அவருடைய முழு நம்பிக்கையின் சொந்தக்காரர், ஓங் எங் குவான் என்பவரை மேயராக்கினார்.

நகரத்தைப் பிடித்துவிட்டோம், நாட்டைப் பிடிக்க என்ன செய்யலாம்? லீ அரசியல் நிலையை ஆராய்ந்தார். தன் ஆசைக்கனவைச் சிதைக்கக்கூடியவர்கள் சொந்த PAP கட்சியில் இருக்கும் இடதுசாரிகள்தாம். அவர்களை எப்படியாவது அடக்கவேண்டும். இதற்கு என்ன செய்யலாம்? அன்றைய ஒரு நிகழ்வு தீர்வுக்கு வழி காட்டியது.

அக்டோபர் 9, 1958. போப் ஆண்டவர் பன்னிரெண்டாம் பயஸ் (Pope Pius XII), தன் 82 – ம் வயதில் மரணமடைந்தார். அடுத்த ஆண்டவர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். இதற்காகப் பின்பற்றப்படும் வழிமுறையை லீ கூர்ந்து கவனித்தார். போப் ஆண்டவர் மறைந்தாலோ, அல்லது பதவியைவிட்டு விலகினாலோ, அவருடைய வாரிசைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம், கார்டினல்கள் கல்லூரி (College of Cardinals) என்னும் அமைப்புக்கு மட்டுமே உண்டு. இந்த அமைப்பின் 75 கார்டினல்கள், உலகமெங்கும் இருக்கும் பிஷப்களிலிருந்து போப் ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இவர்களுடைய முக்கிய / ஒரே பணி, போப் ஆண்டவரைத் தேர்வு செய்வதுதான். அதாவது, உலகம் முழுக்க இருந்த கத்தோலிக்கக் கிறித்தவர்கள் பல கோடி. இவர்களின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் வெறும் 75 பேர் கைகளில்!      

இதே யுக்தியைக் கட்சியிலும் பயன்படுத்தினால்.....கட்சியின் சட்டத்தைத் திருத்தும் தீர்மானம் தயாரானது. இதன்படி, கட்சியில் இரண்டு விதமான உறுப்பினர்கள். சாதாரண அங்கத்தினர்கள் தலைமை அலுவலகம், கிளை அலுவலகங்கள், தற்போதைய தொண்டர்கள் மூலம் சேரலாம். இரண்டாம் வகைச் சிறப்பு உறுப்பினர்கள் செயல்குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்கள் எண்ணிக்கை சில நூறு. இந்தச் சிறப்பு உறுப்பினர்களுக்கு மட்டுமே கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உண்டு. இந்தத் தீர்மானம் சொல்லாத ரகசியம் – செயல்குழு லீ கைவசம் இருந்தது. ஆகவே, சிறப்பு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பவர் லீ. அந்தச் சிறப்பு உறுப்பினர்கள் லீ சொல்வதுபோல்தானே கை தூக்குவார்கள்?

விசேஷ மாநாடு கூட்டினார். தீர்மானம் நிறைவேறியது. லீ கட்சியின் செக்ரட்டரி ஜெனரல்: அவருடைய முழு நம்பிக்கைக்குரிய சின் சை (Chin Chye) கட்சித் தலைவர். விரைவில் கம்யூனிஸ்ட்கள் மேல் நேரடித் தாக்குதல் தொடங்கியது. கட்சிப் பத்திரிகையில் தலையங்கம் வந்தது. ‘PAP கட்சி கம்யூனிசத்துக்கு எதிரானது. விசாரணை இல்லாமல் சந்தேகம் ஏற்படுபவர்களைக் கைது செய்யும் PPSO (Preservation of Public Security Ordinance) பொதுமக்கள் பாதுகாப்பைக் காக்கும் அரசாணை  தொடரும்’.

தேர்தலை எதிர்நோக்கும் இந்தக் காலகட்டத்தில், சிறையிலிருந்த தேவன் நாயர் மற்றும் ‘நண்பர்களை’ லீ மாதம் ஒருமுறை சந்தித்தார். PAP ஆட்சிக்கு வந்தால், அவர்களுக்கு விடுதலை தருவதாகவும், அவர்கள் மீதிருக்கும் எல்லா வழக்குகளையும் வாபஸ் வாங்குவதாகவும் உறுதிமொழி தந்தார். தேர்தலில் அவர்கள் ஆதரவைக் கேட்டார். அதுவும், வாய்மொழியாக அல்லாமல், கையெழுத்திட்டு. தந்தார்கள்.

கம்யூனிஸ்ட்களும், கட்சியும் இப்போது லீ கையில், ஆட்சியைப் பிடிக்க அவர் சந்திக்கவேண்டிய ஒரே எதிரி – சிங்கப்பூர் பீப்பிள்ஸ் அலையன்ஸ் (Singapore Peoples Alliance – சுருக்கமாக SPA) என்ற பெயரில், லேபர் கட்சியும், சோஷியலிஸ்ட்களும் சேர்ந்து அமைத்திருந்த கூட்டணி. அரசியல் அனுபவம் கொண்ட இவர்களை முறியடிக்க வேண்டுமானால், மக்கள் மனங்களைக் கொள்ளை கொள்ள வேண்டும். அவர்களின் முக்கியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வாக்குறுதிகளை வாரி வாரி வழங்கவேண்டும். .

இந்தத் தேவைச் சவால்கள் எத்தனை பிரம்மாண்டமானவை என்று லீக்குத் தெரியும். 1920 – இலேயே குடியிருப்பு வசதிகள் தட்டுப்பாடு தொடங்கிவிட்டது. காணும் இடமெல்லாம், புறம்போக்குப் பக்திகளில் எல்லாம் குடிசைகள். இங்கிலாந்து அரசு, 1927 – இல் சிங்கப்பூர் மேம்பாட்டுப் பொறுப்பாட்சி (Singapore Improvement Trust) என்னும் அமைப்பை உருவாக்கியது. வீட்டு வசதி வாரியம்போல், ஏழைகளுக்கான இருப்பிடங்கள் கட்டித் தருவது இவர்கள் வேலை. 1959 வரை, அதாவது 32 வருடங்களில் இவர்கள் கட்டியிருந்த மொத்த வீடுகள் 23,000. தன் ஆட்சியில் ஏழைகளுக்கு மலிவு விலை வீடுகள் கட்டித்தருவதாக லீ வாக்குறுதி கொடுத்தார்.  

சிங்கப்பூரைச் சொர்க்க பூமியாக்கும் ஆயிரம் ஆயிரம் வண்ணக் கனவுகள் வரைபடங்களாக லீ மனதில் உயிர்பெற்று வரத் துடித்துக்கொண்டிருந்தன. பொருளாதாரம், கல்வி, வீட்டு வசதி, ஆரோக்கியம், கிராமிய வளர்ச்சி, தொழிலாளர் நலம், பெண்கள் முன்னேற்றம் ஆகிய தூண்களின் மேல்தான் தன் கனவு மாளிகையை எழுப்பமுடியும் என்னும் அவர் எண்ணத்தின் வெளிப்பாடுகள்தாம் இந்தத் திட்டங்கள். PAP கட்சியின் தேர்தல் அறிக்கை இந்தத் திட்டங்களை மக்களோடு பகிர்ந்துகொண்டது..    

எதிர்க்கட்சியான SPA- க்கு மரண அடி தர லீ முடிவு செய்தார். கல்வி அமைச்சர் சூ ஸ்வீ கீ (Chew Swee Kee) அமெரிக்காவிடமிருந்து 5 லட்சம் டாலர்கள் தேர்தல் உதவி நிதி வாங்கியதாகக் குற்றம் சாட்டினார். விசாரணைக் கமிஷன் அமைத்து, அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று வாதாடினார். சூ ஸ்வீ கீ தன் பதவியை ராஜிநாமா செய்தார். சொன்னார், ‘என்னிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை. ஆனால், SPA கட்சியின் பெயரைக் காப்பாற்றுவதாகப் பதவி விலகுகிறேன்.’

சூ ஸ்வி கீ பேச்சு வெற்று வீறாப்பு என்று விசாரணைக் கமிஷன் கண்டுபிடித்தது. அவர் அமெரிக்காவிடமிருந்து லஞ்சம் வாங்கி, அந்தப் பணத்தில், மனைவி பெயரில் வீடு, பினாமி பெயரில் கம்பெனி என எக்கச்சக்கமான சொத்துக்கள் வாங்கிக் குவித்திருந்தார். விசாரணைக் கமிஷன் தன் அறிக்கையை வெளியிட்டது. எல்லா ஊடகங்களிலும், தலைப்புச் செய்தி SPA கட்சியின் ஊழல்தான்.

லீயின் ராஜபாட்டையில் ஒரு தடைக்கல். வந்தது சிங்கபூரிலிருந்தல்ல, அண்டைய மலாயாவிலிருந்து. வீசத் தூண்டியவர் மலாயப் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான். தன் உம்னோ கட்சியிலிருந்து யாராவது லீ-க்கு ஆதரவு தந்தால், அவர்கள் கட்சியிலிருந்தே துரத்தப்படுவார்கள் என்று எச்சரித்தார். லீ மீது தனிப்பட்ட வெறுப்போ, தென் கிழக்கு ஆசியத் தலைமையில் அவர் தனக்குப் போட்டியாக வந்துவிடுவார் என்கிற பயமோ, எது உண்மைக் காரணம் என்று தெரியவில்லை.

சிங்கப்பூரின் பிரபல ஆங்கில நாளிதழ்கள் ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ், சிங்கப்பூர் ஸ்டான்டர்ட் ஆகியவை. இவற்றின் ஆசிரியர்கள் மலாய்கள். துங்குவின் வெறுப்பை, எதிர்ப்பை இவர்களும் வெளிப்படுத்தினார்கள். லீயைக் காரசாரமாக விமர்சித்தார்கள். PAP கட்சிக்கு ஏன் வோட்டுப்போடக்கூடாது என்று உபதேசம் செய்தார்கள். பதிலுக்கு லீ உரத்த குரலில் கர்ஜித்தார், ‘மே 30 – க்குப் பின், மலாயா, சிங்கப்பூர் உறவுகளில் உரசல் ஏற்படுத்த முயற்சி செய்யும் பத்திரிகை ஆசிரியர்கள், தலையங்கம் எழுதுபவர்கள், உதவி ஆசிரியர்கள், நிருபர்கள் ஆகிய அத்தனை பேரும் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்படுவார்கள். அவர்களைச் சிறைக்குள் தள்ளுவோம், சிறைக்குள்ளேயே வைத்திருப்போம்.’

லீ மக்கள் எழுத்துரிமையின் குரல்வளையை நெரிக்கிறார் என்று சிங்கப்பூர் நாளிதழ்கள் உலகப் பத்திரிகை மாநாட்டில் குரல் எழுப்பினார்கள். கண்டனத் தீர்மானம் போட்டார்கள். லீ இந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சும் பனங்காட்டு நரியல்ல. தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடும் கொள்கை கொண்டவர். சிங்கப்பூரின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வயிறாரச் சோறும், வாழ்க்கை வசதிகளும் தருவதுதான் அவர் இலக்கும் கனவும். வயிற்றுக்குச் சோறு, அதற்குப் பிறகுதான் வாய்க்குப் பேச்சுரிமை.

தேர்தல் முடிந்தது. 90 சதவிகித வோட்டர்கள் வாக்களித்தார்கள். அலை, அலை, லீ ஆதரவு அலை. மொத்த 51 தொகுதிகளில் PAP ஜெயித்தவை 43. பிற கட்சிகள் வென்ற தொகுதிகள்: SPA -  4, உம்நோ – 3, சுயேச்சை 1.

லீ சிங்கப்பூரின் அரியணை ஏறப்போகிறார். அவர் அரசியலில் குதித்துக் கட்சி தொடங்கிய ஐந்தே வருடங்களில், கட்சியை வழி நடத்திய முதன் முதல் பொதுத்தேர்தலிலேயே 84 சதவிகித இடங்கள் பிடித்து ஆட்சிபீடம் ஏறியது வரலாறு காணாத சாதனை, தன்னிகரில்லாத தலைமை என்று உலகம் புகழ்மாலைகள் சூட்டியது. ஆனால், இவை அத்தனையும் வெறும் ஆரம்பம்தான், அவர் தொடப்போகும் சிகரங்களின் தொடக்கம்தான். வரப்போகும் வருடங்கள் உரக்கச் சொல்லும், அந்தப் பொற்கால அனுபவங்களை!

(தொடரும்) 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments