முகப்பு
லீ குவான் யூ

12. லண்டன் கசப்புக்கள்

சிங்கப்பூரிலிருந்து இங்கிலாந்துக்குப் பதினேழு நாட்கள் கப்பல் பயணம். அவனைப் போலவே, ‘ஓசி டிக்கெட்டில்’ ஹாங்காங்கிலிருந்து சில மாணவர்கள்

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:06 PM
பகிர்:


சிங்கப்பூரிலிருந்து இங்கிலாந்துக்குப் பதினேழு நாட்கள் கப்பல் பயணம். அவனைப் போலவே, ‘ஓசி டிக்கெட்டில்’ ஹாங்காங்கிலிருந்து சில மாணவர்கள் மேற்படிப்புக்காக இங்கிலாந்து வந்துகொண்டிருந்தார்கள். லீ அவர்களோடு நண்பன் ஆனான். நடுக்கடலில் பொழுது போகவேண்டுமே? சீட்டு விளையாடினார்கள், அரட்டை அடித்தார்கள், சைட் அடித்தார்கள். இங்கிலாந்தின் லிவர்பூல் துறைமுகத்தில் கப்பல் நங்கூரம் பாய்ச்சியது.

லீ சக மாணவர்களோடு நட்பு வளர்த்ததற்கு இன்னொரு காரணம் உண்டு. அவர்களில் சிலரும் லண்டன் பொருளாதாரப் பள்ளிக்கு வந்துகொண்டிருந்தார்கள். ஹாங்காங் பிரிட்டிஷ் காலனி. அந்த மாணவர்களை வரவேற்கவும், லண்டன் அழைத்துச் செல்லவும், பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதிகள் லிவர்பூல் துறைமுகத்துக்கு வருவார்கள் என்று அவர்களில் ஒருவன் சொன்னான். லிவர்பூலிலிருந்து எப்படி லண்டன் போவது என்று அவனுக்குத் தெரியாது. இவர்களோடு ஒட்டிக்கொண்டுவிட்டால், வழி கேட்டுத் திண்டாடித் திணறும் பிரச்சனை இல்லை. அவர்களோடு மாணவர்கள் தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்துவிட்டான்.

ஒரு பெரிய அறை. அதில் 20 மாணவர்கள். மேலும் கீழுமாய் இரட்டை அடுக்காய்க் கட்டில்கள். அவனுக்கு மேல் பெர்த்தில் இடம். அறையில் ஜன்னல்களே இல்லை. மூச்சு முட்டியது. ஆனால், இது தற்காலிக வாசம்தான் என்று கல்லூரி அதிகாரிகள் சொன்னார்கள். கொஞ்சம் ஆசுவாசம்.  

Advertisement

கல்லூரி உதவியோடு மலிவு வாடகையில் மான்ஷன் போன்ற கட்டடத்தில்  தனி அறை எடுத்தான். அப்போதுதானே மனதை ஒருமுகப்படுத்திப் படிக்க முடியும்? ஒரு பிரச்சனை – தினமும் கல்லூரிக்குப் போகப் பக்கத்து லோக்கல் ரெயில் ஏற வேண்டும், இன்னொரு பஸ் பிடிக்கவேண்டும். கொஞ்சம், அதிகம் தூங்கிவிட்டால், ரெயிலும் பஸ்ஸும் போய்விடும். வகுப்புக்கு லேட்தான். தாமதமாகப் போவது அவனுக்குப் பிடிக்காத விஷயம். ஆகவே, எப்போதும் டென்ஷன், டென்ஷன்.

கல்லூரிச் சூழலும் மிகவும் வித்தியாசமாக இருந்தது. சிங்கப்பூர் ராஃபிள்ஸ் கல்லூரியில் வகுப்பறைகள் பரந்து விரிந்த ஏரியாவில். மொத்த மாணவர்கள் எண்ணிக்கை சில நூறு. வகுப்பில் 30 மாணவர்கள் மட்டுமே. சாதாரணமாக வகுப்புகள் ஒரே அறையில்தான் நடக்கும், சில சமயங்களில் பொது வகுப்புகள் நடக்கும்போது, அருகில் இருக்கும் அறைகளுக்கு ஜாலியாக அரட்டை அடித்துக்கொண்டே போகலாம். இங்கே, வகுப்புகளில் சந்தைக் கூட்டம்போல் 200 மாணவர்கள் இருந்தார்கள். கல்லூரி பல மாடிக் கட்டிடத்தில். அதிலும் சில வகுப்புகள் பிற கல்லூரி வளாகங்களில். ரெயில், பஸ் பிடித்துப் போகவேண்டும். ஆகவே, மாணவர்கள் எப்போதும் ஓடிக்கொண்டே இருந்தார்கள். இந்த வேகம் அவனுக்குப் பிடிக்கவேயில்லை.

பிடிக்காத விஷயங்கள் பட்டியல் போடும் அளவுக்கு நீண்டன. மான்ஷனில் காலை உணவு தருவார்கள். பகல், இரவுச் சாப்பாடு அவரவர் பார்த்துக் கொள்ளவேண்டும். தினமும் ஹோட்டலில் சாப்பிடுவது மாணவர்களுக்குக் கட்டுப்படியாகாது என்பதால், ஒவ்வொரு அறையிலும்  ஸ்டவ் இருந்தது. லீ வீட்டில் சமையல்கட்டுப் பொறுப்பு முழுக்க அம்மாதான். வெந்நீர் சுடவைக்கக்கூட அவனுக்குத் தெரியாது. திண்டாடினான். பால் தினமும் பொங்கி வழியும். சமையல் அடிப் பிடிக்கும் அல்லது அரைகுறையாக வெந்திருக்கும். ஒவ்வொரு அரிசியும் காசல்லவா? குப்பைத் தொட்டியில்  எறியமுடியுமா? வெந்ததையும், வேகாததையும் விழுங்குவான். அம்மா சமையலில் ரசனையோடு வளர்ந்த நாக்கு சுவையையே மறந்துகொண்டிருந்தது.   

இன்னொரு பிரச்சனை, துணி துவைப்பது. தன் 22 வருட வாழ்க்கையில் அவன் இதுவரை தன் துணிகளைத் துவைத்ததே கிடையாது. துவைப்பது, அயர்ன் பண்ணித் தயாராக வைத்திருப்பது எல்லாமே அம்மா. அது மட்டுமா? அவன் ஷூக்களைப் பாலிஷ் செய்வதும் அம்மாதான். அன்றாட வாழ்க்கைச் சுமைகளே தெரியாமல் தனக்காக அம்மா செய்திருக்கும் தியாகம் அவனை அழவைத்தது.

லீ தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று போலியாக அலட்டிக்கொள்ளமாட்டான். யாரையும் உதவி கேட்கத் தயங்கமாட்டான். கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிப்பான். மான்ஷனில் சில இங்கிலாந்துப் பெண்கள் தங்கியிருந்தார்கள். அவர்களிடம் போனான். காய்கறிகள், இறைச்சி எப்படி வாங்குவது, அவற்றை எப்படிக் கெடாமல் பாதுகாப்பது என்னும் அடுக்களை ரகசியங்களையும், சமையல் குறிப்புகளையும் கேட்டுத் தெளிவாக்கிக்கொண்டான். சமையலும், துணி துவைப்பும் ஓரளவு கைவசம் வந்தன. 

மான்ஷனில் இன்னொரு பிரச்சனை தனிமை. சிங்கப்பூரில் இருக்கும்வரை அவன் பாசம் நிறைந்த பெரிய குடும்பத்தோடு வாழ்ந்தவன். அவனைச் சுற்றி எப்போதும் பெரிய நண்பர்கள் பட்டாளம் இருக்கும். இங்கே அனைவரும் அறைகளுக்கு வந்தவுடன், கதவுகளை அடைத்துக்கொண்டு தங்கள் வேலைகளைப் பார்த்தார்கள். ஒவ்வொரு மனிதனும், பிறரோடு தொடர்பு வைத்துக்கொள்ளாத தீவு. இந்த வாழ்க்கையை லீ வெறுத்தான். 

சமையல், துணி துவைப்பு, தினசரி ரெயில், பஸ் பிடிக்கக் கணிசமான தூரம் நடக்கும் / ஓடும் கட்டாயம். அறைக்கு வந்து சாப்பிட்டதும், அசதியால் தூக்கம் கண்களை மூடும். நாம் லண்டன் வந்தது படிப்பதற்காக, படிப்புதான் குடும்பத்தை முன்னேற்றும் மந்திரச் சாவி. அதற்கான நேரமே இல்லாமல், அறையைச் சுத்தம் செய்து, சமைத்து, சாப்பிட்டு, பாத்திரம் கழுவி, துணி துவைத்து, அயர்ன் செய்து, வேடிக்கை மனிதரைப்போல் வீழ்ந்துவிடுவோமோ என்னும் பயம், குற்ற உணர்ச்சி லீ மனதுக்குள் விஸ்வரூபம் எடுத்தது. பொறிக்குள் மாட்டிய எலியாக உணர்ந்தான். எப்படியாவது, எப்படியாவது இந்தக் கூண்டிலிருந்து தப்ப வேண்டும். என்ன செய்யலாம்?

தட்டுங்கள், திறக்கப்படும். கேளுங்கள் கொடுக்கப்படும். ஒரு நாள், அரசியல் சட்ட வகுப்பு. கிளான்வில் வில்லியம்ஸ் (Glanville Williams) என்னும் புதிய விரிவுரையாளர். அவர் வகுப்பு நடத்திய விதம் அவனுக்கு மிகவும் பிடித்தது. அவர் பற்றிய விவரங்கள் தேடினான். கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலைக் கழகத்தில் சட்டப் படிப்பில் டாக்டர் பட்டம் வாங்கியவர் என்று கண்டுபிடித்தான். ‘லண்டன் பொருளாதாரப் பள்ளியிலிருந்து தானும் கேம்பிரிட்ஜுக்கு மாற்றிக்கொண்டுவிட்டால்......’ முடியுமா என்று அவனுக்குத் தெரியாது. கேள்விகள் கேள்விகளாகவே இருக்க அவன் விடுவதில்லை. கிளான்வில்லைத் தனியாகச் சந்தித்தான். தன் பிரச்சனைகளைச் சொன்னான். கேம்பிரிட்ஜில் சூழல் எப்படி இருக்கும் என்று கேட்டான்.

கிளான்வில் அவன் குறைகளைப் பரிவோடு கேட்டார், புரிந்துகொண்டார். கேம்பிரிட்ஜ் அமைதியான வளாகம். மாணவர்கள் சைக்கிளில் சுற்றலாம். குறிப்பாக, வேகமும், வேண்டாத டென்ஷனும் கிடையவே கிடையாது. படிப்பில் முழுக் கவனம் செலுத்தலாம்.

கேம்ப்ரிட்ஜ் தன் ராஃபிள்ஸ் கல்லூரிபோல் இருக்கும் என்று லீ உள்ளுணர்வு சொன்னது. ஆனால், வெறும் உள்ளுணர்வு அடிப்படையில் அவன் முடிவு எடுப்பவனல்ல. கேம்ப்ரிட்ஜ் போகவேண்டும், நேரடியாகப் பார்க்கவேண்டும். அப்புறம்தான் முடிவு. வழக்கம்போல் ஹோம் ஒர்க். அங்கே, பழைய நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடினான். தூண்டிலில் சிக்கியது மீன். அவன் ராஃபிள்ஸ் வகுப்புத் தோழன் செசில் வாங் (Cecil Wong) கேம்ப்ரிட்ஜில் படித்துக்கொண்டிருந்தான்.       

லீ கேம்பிரிட்ஜ் போனான். நண்பனைச் சந்தித்தான். செசில் உண்மையான நண்பன். தன்னால் முடிந்த அத்தனை உதவிகளையும் செய்தான். அவனோடு லீ கல்லூரி வளாகத்தைச் சுற்றிப் பார்த்தான். ஜாலியாக உலாவிய மாணவ மாணவிகள், அவர்களிடம் இழையோடிய நட்பு. ‘இனிமேல் படிப்பு இங்கேதான்.’

அவன் தீர்மானித்தால் போதுமா? கல்லூரி இடம் தர வேண்டாமா? செசில் லீயை, பில்லி தாச்சர் (Billy Thatcher)  என்னும் கல்லூரி முதல்வரிடம் அழைத்துப்போனான். லீ, தான் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் தொடர்ந்து படிக்க இயலாத காரணங்களை விளக்கினான். தாச்சர் புரிந்துகொண்டார். வகுப்புகள் தொடங்கிச் சில வாரங்கள் ஆகிவிட்டபோதிலும், திறமைசாலி லீ தன் கடும் உழைப்பால், ஈடு கட்டிவிடுவான் என்று அவருக்கு நம்பிக்கை. அட்மிஷன் கொடுத்தார். ஃபிட்ஸ்வில்லியம் ஹவுஸ் (Fitzwilliam House) என்பது ஏழை மாணவர்கள் தங்கும் விடுதி. அங்கே வாடகை குறைவு. அங்கே அறை எதுவும் காலியாக இல்லை. தயக்கமே இல்லாமல், மகிழ்ச்சியோடு லீக்குத்  தன் அறையில் இடம் தர செசில் சம்மதித்தான். 

விடைபெறும்போது தாச்சர் லீயிடம் சொன்னார், ‘லீ, நீ கேம்பிரிட்ஜுக்கு வந்தால், மற்ற எல்லோரையும்விட ஒரு அங்குலமாவது படிப்பில் உயர்ந்து நிற்கவேண்டும்.’

‘சார், நான் நிச்சயமாக முதல் வகுப்பில் பாஸ் பண்ணுவேன்.’

தாச்சர் அவன் கண்களைக் கூர்ந்து பார்த்தார். சொன்னார், ‘லீ, கேம்பிரிட்ஜில் முதல் வகுப்பு வாங்க ஒரு தெய்விகப் பொறி இருக்கவேண்டும். அது உன்னிடம் இருக்கிறது.’

மாபெரும் ஆசிரியர்களுக்கு மட்டுமே இருக்கும் சக்தி அது. அவனுக்குள் இருந்த அபாரத் திறமையை தாச்சர் எப்படியோ முதல் சந்திப்பிலேயே, சில நிமிடப் பேச்சுப் பரிமாற்றலில் தெரிந்துகொண்டுவிட்டார். அவர் வைத்த நம்பிக்கை லீக்கு இன்னும் அதிக வேகம், உத்வேகம் தந்தது – அதிக மதிப்பெண்கள் வாங்கிக் கேம்பிரிட்ஜில் வெற்றிக்கொடி நாட்டவேண்டும்.    

கேம்பிரிட்ஜில் இடம் கிடைத்துவிட்டது. லண்டன் பொருளாதாரப் பள்ளியிலிருந்து விடுவித்துக்கொண்டு வர வேண்டும் அதை நினைத்தாலே, லீ மனதில் ‘தடக்’, ‘தடக்’ தைரியசாலியான அவன் மனதில் இருந்தது பயமல்ல, குற்றவுணர்ச்சி. அவன் சிங்கப்பூரை விட்டு வர வழி அமைத்தது லண்டன் பொருளாதாரப் பள்ளி. உதவிய கரங்களையே உதறித் தள்ளுகிறோமே, இது நன்றிகெட்ட செயலா என்று மனதுக்குள் பூகம்பங்கள். தன் பேராசிரியரை நேரில் சந்திக்கத் துணிச்சல் வரவில்லை. தான் விட்டுப் போவதாகக் கடிதம் எழுதினான். உடனேயே வந்தது கோபமாக பதில் – ‘உன்னை நான் தப்பாக எடை போட்டுவிட்டேன். உனக்கு நான் உதவியே செய்திருக்கக்கூடாது.’

யாருடனும் உறவை முறித்துக்கொள்வது லீக்குப் பிடிக்காது. துடிக்கும் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு, பேராசிரியரைச் சந்தித்தான். காரணங்களைக் குமுறிக் கொட்டினான். ‘முன்பே சொல்லியிருந்தால், உன் குறைகளைத் தீர்த்திருப்பேனே?’ என்று சொன்னார். அவருக்கு அவன் மேல் இருந்த கோபம் தணிந்தது, ஆனால் மறையவில்லை. லீக்கும் வாழ்நாள் முழுக்க இது தொடர்பாகக் குற்ற உணர்ச்சி இருந்தது நிஜம்.  

லண்டன் பொருளாதாரப் பள்ளி விடுப்புக் கொடுத்தார்கள். லண்டனில் கழித்த சில வாரங்களை லீ அசை போட்டான். எந்த சோகத்திலும் ஒரு நன்மை உண்டு என்று நினைப்பது அவன் மனோபாவம். ஏமாற்றங்கள், சோகங்கள், தனிமை. ஆனால், இந்தப் பாலைவனத்திலும், பசுமைச் சோலையாக அவன் மனதில் நின்றவர் ஹரால்ட் லாஸ்கி (Harold Laski) என்னும் உலகப் புகழ்பெற்ற அரசியல் துறைப் பேரசிரியர். அவருடைய வகுப்புக்கள், பேச்சுக்கள், கருத்துக்கள் என்றென்றும் எதிரொலிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தின.

‘ஒரு நாட்டின் வளர்ச்சியும், முன்னேற்றமும் அதன் இயற்கை வளங்கள், பொன் விளையும் பூமி, காலம் தவறாத மழை, பெட்ரோல் போன்றவற்றால் நிர்ணயிக்கப்படுவதைவிட, அங்கிருக்கும் மக்களின் திறமையால் தீர்மானிக்கப்படுகிறது. கல்வி, தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகிய இரண்டு சக்திகளும் செல்வத்தை உருவாக்கும் சக்திகள். முன்னேற விரும்பும் எந்த நாடும், இன, மத, மொழி வேறுபாடுகள் இல்லாமல் எல்லோருக்கும் கல்வி, தொழில்நுட்பப் பயிற்சி ஆகியவற்றில் சமவாய்ப்புக் கொடுக்கவேண்டும்’ என்பது லாஸ்கியின் முக்கிய சித்தாந்தம். ஆரம்ப காலங்களில் இந்தக் கொள்கை சரியா, தவறா என்று லீ மனதில் ஆயிரம் சந்தேகங்கள் இருந்தன. ஆனால், சிங்கப்பூரை நிர்வகிக்கும்போது, லாஸ்கியின் கொள்கைச் சத்தியம் லீக்குப் புரிந்தது.    

லீ லண்டனை விட்டுப் புறப்பட்டான். இனி நிகழ்காலமும், எதிர்காலமும், கேம்ப்ரிட்ஜ்தான்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments